கண்டி லைன் பள்ளிவாசலின் மினாரா (கோபுரம்) நிர்மாணிப்பதற்கு எனது பதவிக்காலத்திலும் அதற்கு பின்பும் கண்டி மாநகர சபையினால் அனுமதி வழங்கப்படவில்லை.
கண்டி நகரிலுள்ள தலதா மாளிகை உலக மரபுரிமை சொத்தாகும். அதனால் அதன் உயரத்தையும் மீறி வேறு மதஸ்தலங்கள் நிர்மாணிக்கப்பட முடியாது என முன்னாள் கண்டி மாநகர முதல்வரும் கண்டி மகா விஷ்ணு தேவாலயத்தின் பஸநாயக்க நிலமேயுமான மகேந்திர ரத்வத்த தெரிவித்தார்.
லைன் பள்ளிவாசலில் கோபுரமொன்று அமைக்கப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்பு இப்பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு தலதா மாளிகையின் தியவதனே நிலமேயும் பஸநாயக்க நிலமேக்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புகள் மேலெழுந்ததன் காரணமாக மினாரா நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது மீண்டும் இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தப் பள்ளிவாசல் தலதா மாளிகைக்கு 200 மீற்றர் தூரத்திலேயே அமைந்துள்ளது.
உலக மரபுரிமை சொத்தான தலதா மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் பள்ளிவாசல் நிர்மாணத்துக்கு அனுமதியளிக்கப்பட்டமை நல்லிணக்கத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆனால் சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் பௌத்த மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவுக்குள் புத்த பெருமானின் படத்தைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இலங்கையில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.