Breaking
Sat. Nov 23rd, 2024

(சாய்ந்தமருது அஸீஸ்)

‘ஆடான ஆடு எல்லாம் தீனிக்கு அலையுதாம்! சொத்தி ஆடு ‘எதற்கோ’ அலையுதாம்.’ என்றொரு கிராமியப் பழமொழி ஒன்றுண்டு
தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை. 17 வருட காலம் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அதாவுல்லா, கடந்த தேர்தலில் பெற்ற விருப்பு வாக்குகள் ஆக 17000 மாத்திரமே. அதாவது வருடத்துக்கு தலா 1000 வாக்குகளை மாத்திரமே சம்பாதித்திருக்கும் இந்த அதாவுல்லா, இத்தனை வருட காலம் அதிகாரத்திலிருந்த போது செய்த சேவை எல்லாம் தான் பிறந்த மண்ணான அக்கரைப்பற்றை மாத்திரம் அபிவிருத்தி செய்ததுதான். தனது அயற்கிராமங்களான இறக்காமத்தையோ, அட்டாளைச்சேனையையோ, பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஒரு பகுதியை அடக்கும் சம்மாந்துறையின் சில பிரதேசங்களைக் கூட எட்டியும் பார்க்கவில்லை. எந்தவிதமான உதவிகளும் அந்தப்பிரதேசங்களுக்கு செய்ததாகவும் இல்லை.
ஊர்வாதத்தை மாத்திரமே தாரக மந்திரமாகக் கொண்டு அக்கரைப்பற்றில் ‘குண்டாஞ்சட்டிக்குள் குதிரை ஓடியவர்தான் இந்த அதாவுல்லா’
மஹிந்த அரசின் தயவில் பொதுபல சேனா இயக்கம் முஸ்லிம்களுக்கெதிராக அடாவடித்தனங்களை மேற்கொண்ட போது வாய்மூடி மௌனியாக மஹிந்தவுடனும் கோட்டாபாயவுடனும் தேனிலவைக் கழித்துக்கொண்டிருந்த அதா, இப்போது முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றியும் உரிமை பற்றியும் பேசுவதுதான் வியப்பாக இருக்கின்றது.

தற்போதைய நல்லாட்சியில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் தொடர்வதைப் பயன்படுத்தி எரியும் நெருப்புக்குள்ளே எண்ணெய் ஊற்றி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை தான் எதிர்ப்பதாக கூறும் அதாவுல்லா, தான் ஒரு சிறீலங்கா சுதந்திரக்கட்சி சார்பான போக்குடையவன் என கூறுகின்றார். கேவலம் என்னவென்றால் மைத்திரியுடன் உறவை வைத்திருக்கும் அதே வேளை தனது மகனும் அக்கரைப்பற்று முன்னாள் மாநகர மேயருமான சக்கீ அதாவுல்லாவை மஹிந்தவின் இப்தாருக்கு அனுப்பி அங்கேயும் தான் கால் பதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார். எப்படியாவது அதிகாரத்துக்கு வரவேண்டும் என அவர் துடித்தாலும் அது கனவிலும் நடக்காது. அம்பாறை மாவட்ட மக்கள் ஊர்வாதத்தில் ஊறிய அதாவுல்லாவை இனி எக்காலத்திலும் அம்பாறை மாவட்ட மக்கள் எம்.பி யாக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த நிலையில் தான் ஒரு தேசிய தலைவனாக வரவேண்டும் என அவர் பகற் கனவு காண்பது ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது’ போன்றதே.

அமைச்சராக இருக்கின்ற காலத்தில் இவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாது. கொழும்பில் இவர் இருந்த அரச வீட்டுக்கு யாராவது சென்றால் பொலிசார் அவர்களை அனுமதிக்கமாட்டார்கள் ஆயிரம் கேள்வி கேட்டு துளைப்பார்கள். அரசியல்வாதிகள் கூட இவரை தொடர்புகொள்ள முடியாத நிலையிருந்த போது பாமர மக்களை இவர் எவ்வாறு நடத்தி இருப்பாரென கற்பனை செய்து பாருங்கள். தனக்குப் புலிகளால் அச்சுறுத்தல் இருக்கின்றதென மஹிந்தவிடம் படம் காட்டி பெற்றுக்கொண்ட, விசேட அதிரடிப்படையுடன் ஆங்காங்கே வலம் வந்ததுதான் இவர் சமூகத்துக்குச் செய்த கைங்கரியம்.

பிரதிக்கல்வியமைச்சர் கிழக்கு உள்கட்டமைப்பு அமைச்சர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் என பலம் பொருந்திய பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை இவர் வகித்திருந்த போதும் அக்கரைப்பற்றைத்தவிர எந்த ஊருக்கும் சேவை செய்யவில்லை.
அக்கரைப்பற்றுக்கு மாநகர சபையைப் பெற்றுக்கொடுத்த அதா, சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையை பெற்றுத்தருவேன், தருவேனென தனது பதவிக்காலம் முடியும் வரை தண்ணி காட்டினார்.
எமது தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே இந்த நாட்டிலே இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி எத்தனையோ நீர் வழங்கல் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அமைச்சர் அதாவுல்லா தனது அயல் ஊரான பொத்துவில்லுக்குக் கூட தனது பதவிக்காலத்தில் ஒரு நீர்த்தாங்கியை அமைத்துக்கொடுக்காதவர். இத்தனைக்கும் அந்த மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.பி ஆனவர் (இத்தனைக்கும் இவர் ஒவ்வொரு தேர்தலிலும் எப்படி எம்.பி ஆனார் என்ற கதையை பின்னர் சொல்லுகின்றேன்.) தனது சொந்தத் தொகுதி மக்களையே ஏறெடுத்தும் பார்க்காத இந்த அதா. இப்போது வன்னிக்குச் சென்று அந்த மக்களுக்கு உதவி செய்யப் போவதாக பம்மாத்துக் காட்டுகின்றார்.

அதிகார பலமிருக்கும்போது வடமாகாணத்தை ஒரு தடவையேனும் எட்டிப்பார்க்காதவர், வடமாகாண முஸ்லிம்கள் பற்றி எந்தவிதமான கரிசனையும் கொள்ளாதாவர். வடமாகாணம் இதுதான் என்பதை இலங்கைப் படத்தில் மாத்திரம் பார்த்த இந்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லா வன்னி முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை காட்டுவது பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தொலைவிலிருக்கும் எவருக்கோ சென்று உணவு கொடுப்பதாக ஒரு மாயையைக் காட்டுவது போன்றதே.

குதிரை நொண்டியானதன் பின்னர், இப்போது வன்னிக்குச் சென்று கழுதைகளை ஓட்ட நினைக்கின்றார்.
முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான ஏறாவூருக்குள் நுழைந்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீரினதும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌளானாவினதும் வாக்குகளை கொள்ளையடிக்க முடியுமென அதாவுல்லா பகற்கனவு காண்கின்றார்.
எமது தலைவர் ரவூப் ஹக்கீம் தாய்லாந்தில் அரசு – புலிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அங்கு சென்றிருந்த போது நயவஞ்சகத்தனமாக கட்சியைக் கைப்பற்றி அமைச்சர் ஹக்கீமின் தலைமைப்பதவியைத் தட்டிப் பறிக்க எண்ணியவர்தான் இந்த துரோகி அதாவுல்லா.

இந்த முயற்சி கைகூடாததால் சுபைதீன் ஹாஜியார் தலைமையில் அஷ்ரப் காங்கிரஸ் என ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். எனினும் இந்த இயக்கத்தால் தனக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லையென உணர்ந்துகொண்ட அதாவுல்லா, தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் கைவிட்டு பின்னர் 5 நட்சத்திர ஹோட்டலில், சந்திரிக்காவுடன் பேச்சு நடாத்தி பொது ஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
தனது பதவிக்காக யாரையும் அடகு வைக்கும் குணம்படைத்த அதாவுல்லா, முஸ்லிம் சமுதாயத்தின் மீது கவலை கொண்டவராக மேடைகளிலே அழுதழுது நடிப்புக்காட்டுகிறார்.

தேசிய அரசியலில் அதிகாரத்தில் இருக்கு போதே, தனது தேசிய காங்கிரசை வளர்த்தெடுப்பதற்கு வக்கில்லாத இந்த அதாவுல்லா வன்னியிலும் ஏறாவூரிலும் அரசியல் நடாத்த நினைப்பது அவரது குருட்டு நம்பிக்கையையே வெளிப்படுத்துகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் எமது கட்சியின் பிரதித்தலைவரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் மசூர் ஹாஜியாரிடம் தேர்தல் செலவுக்காக பணத்தைக் கறந்து ஏப்பமிட்ட கொள்ளைக்காரி ஜான்சி ராணியின் பேச்சைக் கேட்டு அதாவுல்லா வன்னிக்கு செல்வது மண்குதிரை(யை) ஆற்றில் இறங்குவது போன்றதாகும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *