மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார்.
புத்தளம் ஹூஸைனியா புரம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குப் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தையுமர, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், இன்று இந்த ஆட்சி மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கையிழந்துள்ள மக்கள் ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்வதற்கு தகுதியில்லாதவர் எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரியே வீதியில் இறங்கி போராட்டங்களையும், பகிஷ்கரிப்புகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நாட்டின் பொருளாதாரம் பாரிய சரிவை எதிர்நோக்கியிருக்கிறது. மக்கள் ஓரு வேளை உணவைக் கூட உண்பதற்கு போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை வரிசையில் காத்து நின்று கொள்வனவு செய்கின்ற நிலையும் காணப்படுகிறது.
ஆகவே, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொடுக்க முடியாத ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதே இந்த நாட்டில் வாழும் அதிகமான மக்களின் விருப்பமாக இருக்கிறது.
எனவே, மக்களின் விருப்பத்தை நிலை நாட்டுவதற்கு தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும் எமது கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.