Breaking
Sun. Nov 24th, 2024

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மகராம விகராதிபதி அம்பிபிட்டிய சுமணரத்தின தேரர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்பையும் அமைதியையும் அடிப்படையாகக் கொண்ட பெளத்தமதத்தின் துறவி ஒருவர் மேற்கொண்டு வருகின்ற நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட பேச்சுகளும், சட்டத்தை மீறிய நடவடிக்கைகளும், பௌத்தர்கள் என்று தம்மை பெருமையாக கூறிக்கொள்ளும்  அரசியல்வாதிகளும், சமுகப்பிரமுகர்களும், சமயத்த்தலைவர்களும்,  வெட்கப்படவேண்டிய விடயங்களாகும்.

அரசஅதிகாரிகள், காவல்த்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு என எதனையும் மதிக்காத பண்புகளை ஒரு பெளத்த துறவி வெளிப்படுத்தி வருகின்றார் எனின்அவர்மீது அவர் மதம்சார் நிறுவனங்கள் மற்றும் மதபீடங்கள் எந்த விதமான ஒழுங்குநடவடிக்கைகளும் எடுக்காததே மிகவும் பிரதானமான காரணமாகும். அரசின் நிலைப்பாடுகூட இவ்வாறான செயல்பாடுகளை ஊக்குவிக்கின்றது என்றே பொருள்கொள்ள வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு பெளத்த துறவியின் நடவடிக்கைகள் எந்த விதத்திலும் பெளத்த மதத்தை வளர்க்கவோ, பாதுகாக்கவோ உரியது அல்ல. மாறாக தமிழ்மக்கள் மத்தியில் பெளத்ததுறவிகள்கூட பேரினவாத ஆக்கிரமிப்புச் செயல்பாட்டாளர்கள் எனும் நீண்டகால எண்ணப்பாட்டை வலுப்பெறச் செய்யும்.

கொக்கிளாயில் அத்துமீறி செயல்படும் துறவிமீது பெளத்த மதபீடங்களும், அரசும் உரிய நடவடிக்கைகள் எடுத்திருந்தால் சாம்பல்தீவு, மாணிக்கமடு போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட நல்லிணக்க சீர்குலைவு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருக்கும். இன்று  மட்டக்களப்பில் பெளத்ததுறவியின் காடைத்தனமும் அரங்கேறியிருக்காது.

தெற்கில் வன்முறையைத் தூண்டுவதாக குற்றம்சாட்டி, சுரேன் பிரியசாந்தயையும்,  அப்துல் ராசிக்கையும் கைது செய்ய முடியுமாயின், அதே குற்றத்தை தைரியமாக செய்துகொண்டிருக்கும் சுமணரத்தின தேரரை கைதுசெய்ய

முன் வராதது ஏன்? இந்த நாட்டின் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு சார்ந்த கொள்கைகளும் செயல்பாடுகளும் கூட தமிழ் மற்றும் சிங்களம் பேசும் பிரதேசங்களில் முற்றிலும் எதிர்மறையானது  என்பதையும் நிருபிக்கின்றது.

நாட்டையும், பௌத்தமத கோட்பாடுகளையும், பௌத்தசிங்கள மக்களையும் நேசிப்பதாகவும், வழிப்படுத்துவதாகவும் கூறிகொள்ளும் பௌத்தமத பீடங்கள்கூட இவ்வாறான துறவிகளின் காடைத்தனமான செயல்பாடுகளை கண்டிக்காமலும் , தடுக்காமலும் இருப்பதின் காரணம் என்ன?

தென்னிலங்கை அரசாங்கத்தையும், அதன் தலைவர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூத்திரத்தை தெரிந்துவைத்திருக்கும் பௌத்தமத பீடாதிபதிகள், காவியுடையை தரித்துக்கொண்டு மதத்தை கேவலப்படுத்துகின்ற சிறியதொகையான இத் அதிதீவிர துறவிகளை கட்டுக்கோப்பினுள் வைத்திருக்கும் பொறிமுறையையும் தெரியாதவர்களாக இருக்கமுடியாது.

சிறுபான்மை மக்களை அடக்கி வைத்திருக்கும் ஒரு நீண்ட நிகழ்ச்சி நிரலுக்கு இவ்வாறனவர்கள்தான் தேவை என்ற முடிவில், அன்பையும், பண்பையும், நல்லிணக்கத்தையும் போதிக்க வேண்டிய பௌத்தமத பீடங்கள் தற்போது செயல்படுகின்றனவா? என்று கேட்க தோன்றுகின்றது.

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில், சமூக மாற்றங்களில்,  தேசிய இனப்பிரச்சினை தீர்வு நடவடிக்கைகளில் பௌத்தமத பீடங்கள் கொண்டிருக்கும் அதீத செல்வாக்குகள் இரகசியமானதல்ல,. யுத்தம் முடிவுற்றிருக்கும்நிலையில் இனங்களிற்கிடையில் கட்டியேழுப்பபடவேண்டிய  நல்லிணக்க நடவடிக்கைகளும், அரசியல்தீர்வு நடவடிக்கைகளும் காத்திரமானதாக முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் பௌத்தமத பீடங்களின் பங்குபற்றலும், பணியும் மிகமிக அவசியமானது என்பது இன்று இலங்கையில் யதார்த்தமானது.

இவ்வாறான நிலையில் பௌத்தமதத்தின் பெயரால் துறவிகள் மேற்கொள்கின்ற அடாவடித்தனங்களை கட்டுப்படுத்தவும், தடுத்துநிறுத்தி நெறிப்படுத்தவும் பௌத்தமத பீடங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும், பௌத்தமத கோட்பாடுகளின் மேன்மையையும் அதன் நல்லெண்ணங்களையும் கட்டிக்காத்து, பெளத்த சிங்கள மக்களை உயரிய மனித விழுமியங்களை கடைப்பிடிக்கும் சமூகமாக வழிநடத்த முன்வரவேண்டும் என்றும் பகிரங்கமாக வேண்டுகோள் ஒன்றினை தமிழ்மக்கள் சார்பில் வினயமாக முன்வைக்கின்றோம்.

க. சிவநேசன்,

மாகாணசபை உறுப்பினர்,

வடக்கு மாகாணசபை

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *