Breaking
Thu. May 2nd, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இலங்கை நாட்டில் வாழ்கின்றவர்களில் அதிகமானவர்கள் இனவாத நீரை அருந்தியே தங்களது வாழ்வை கழித்து வருகின்றனர்.இனவாதிகள் என்பவர்கள் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தில் மாத்திரமல்ல சிறுபான்மையின மக்களிடமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை.ஒருவர் தனது மதத்தை இன்னுமொரு மதத்தை பாதிக்காத வகையில் போதிக்கும் போது அவரை ஒரு போதும் தவறானவராக கூற முடியாது.ஒருவர் தனது மதத்தை ஏனைய மதத்தினரை அழித்து,தவறான முறையில் சித்தரித்து பரப்பும் போதே பிரச்சினைகள் தோன்றுகின்றன.சில வேளை ஒருவர் தனது மதத்தை பரப்பும் போது இன்னுமொரு மதத்தை ஒப்பிட்டு,அதன் பிழைகளை சுட்டிக் காட்ட வேண்டிய தேவையும் ஏற்படலாம்.அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் நிதானமான வார்த்தை பிரயோகங்களை கையாள்வதுடன் குறித்த விமர்சனம் குறித்த மதத்தை சேர்ந்தோரை சிந்திக்கச் செய்யும் வகையில் அமைதல் வேண்டுமே தவிர குறித்த மதத்தை இழிவு படுத்துவதாக அமையக் கூடாது.இதனை மிகவும் பக்குவப்பட்டவர்களால் மாத்திரமே செய்ய முடியும்.இயன்றவரை ஒரு மதத்தினர் இன்னுமொரு மதத்தவரைப் பற்றி கதைக்காமல் தவிர்ப்பது சிறப்பானது.

இன்று இலங்கையிலுள்ள சில மத குருக்கள் தங்களது மதத்தை அழிவிலிருந்து பாதுகாக்க ஏனைய மதங்கள் மீது மிகக் கடுமையான போக்கை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகிறது.இலங்கை பௌத்தர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாதலால் இலங்கை நாடு பௌத்தர்களுக்கு சொந்தமானது என்ற பாணியில் தங்களது போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.இவர்கள் தான் தெளிவான இனவாதிகள்.இன்று உலகில் வாழும் மனிதர்களிடையே பல்வேறான கொள்கை வேறுபாடுகள் காணப்படுகின்றன.அது போன்று தான் மதம் என்பது கடவுள் கொள்கை சார்ந்த ஒன்றாகும்.மத ரீதியான விடயங்களில் ஒரு மதத்தை சேர்ந்தவர் இன்னுமொரு மதத்தை சேர்ந்தவருடன் உடன்பட்டுச் செல்ல முடியாது போனாலும் பல விடயங்களில் ஒன்று பட்டு செயற்பட முடியும்.

தற்போது இலங்கையில் பலர் இனவாதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள போதும் பேரினத்தில் பொது பல சேனா அமைப்பும் முஸ்லிம்களிடத்தில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பும் இனவாத அமைப்புகளாக பலராலும் சிலாகிக்கப்படுகிறது.பொது பல சேனா அமைப்பை பொறுத்தமட்டில் அவர்கள் தங்கள் மதத்தை போதிப்பதில் காட்டும் அக்கறையை விட முஸ்லிம்கள் விடயத்தில் தலையிடுவதில் காட்டும் அக்கறையே அதிகமாகும்.இதுவே அவர்கள் இனவாதிகள் என்பதை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.இவர்களின் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் உள்ளதாகவும் பலவித சந்தேகங்கள் உள்ளன.இதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேச்சுக்கள் முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தும் வகையிலும் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையிலும் பல தடவைகள் அமைந்துள்ளன.இதற்கு ஆதாரம் கேட்டால் அள்ளி குவித்து விடலாம்.இவர் தொடர்பில் முஸ்லிம்களால் பல முறைப்பாடுகள் பொலிசில் செய்யப்பட்டுள்ளன.இவருக்கு நீதி மன்றத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவைகளை வைத்து பார்க்கும் போது இவர் தெளிவான இனவாதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பானது இஸ்லாத்தை பரப்புவதையே தங்களது பிரதான இலக்காக கொண்டுள்ளது.இவர்களது செயற்பாடுகளில் அரசியல் பின் புலங்கள் இருப்பதற்கான சிறு சமிஞ்சைகளுமில்லை.இன்று இலங்கையில் அதிகாமான இஸ்லாமிய போதனைகள் தமிழ் மொழியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.இவர்களின் தங்களது பிரச்சாரத்தை சிங்கள மக்களிடத்தில் கொண்டு சேர்க்க அதிகம் முயன்று வருகின்றனர்.அண்மையில் சிங்கள மொழியிலான குர்ஆன் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.இலங்கையில் உள்ள அனைத்து இஸ்லாமிய ரீதியான அமைப்புக்கள் செய்யும் வேலையை விட ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் மாற்று மத மக்களிடத்தில் சிங்கள மொழியிலான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியையும் நடாத்தி வருகிறது.இது சிங்கள மக்களிடத்தில் மிகப் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.இது போன்று இந்தியாவிலுள்ள தமிழ் நாடு தௌஹீத் ஜமாத் அமைப்பும் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் அமைப்பு இலங்கையில் பல வருடங்களாக இயங்குகின்ற போதும் அவ் அமைப்பின் மீது இதுவரை ஒரே ஒரு நிரூப்பிக்கப்பட்ட குற்றச் சாட்டே உள்ளது.அவ் விடயம் நீதி மன்றம் சென்று நீதிமன்றம் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துர் றாஷிகை எச்சரித்திருந்ததது.பல வருடங்களாக இஸ்லாமிய பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் அமைப்பிடமிருந்து இதுவரையும் ஒரே ஒரு தவறு மாத்திரமே இடம்பெற்றுள்ளமை அவர்கள் இனவாத பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் அல்ல என்பதற்கான சான்றாகும்.அப் பிழை அவர்களை அறியாமல் இடம்பெற்றதாகவும் நோக்கலாம்.இவ் அமைப்பு இன மத பேதங்களுக்கு அப்பாலும் பல விடயங்களில் கரிசனை காட்டியுள்ளது.இரத்த தானம் வழங்கும் விடயத்தில் இலங்கையிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது.இலங்கை முஸ்லிம்கள் இவ்வாறான விடயங்களில் பொடு போக்காக செயற்படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டுக்கள் பேரின மக்களால் முன் வைக்கப்பட்ட நிலையில் அதனை மாற்றி காட்டியுள்ளனர்.அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கின் போது பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு வழிகளில் உதவி இருந்தனர்.இதன் போது இவர்களின் சேவைகளை பேரின மக்களும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இப்படி இலங்கை நாட்டின் தேசிய நலனுக்காகவும் இவ்வமைப்பு முன் நின்று உளைத்துள்ளமையை யாராலும் மறுக்க முடியாது.இவை அனைத்திற்கும் அப்பால் இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ராஜ பக்ஸவின் மீது அதீத வெறுப்பு கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா ஜெனீவாவில் பிரேரணை கொண்டு வந்த போது இலங்கை நாட்டுப் பிரச்சினைக்குள் சர்வதேசம் தலையிடக் கூடாதென இவர்கள் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.இப்படியான ஒரு அமைப்பை அடிப்படை வாத அமைப்பாக கூறுவதில் எந்த நியாயமுமில்லை.

ஏனைய அமைப்புக்கள் ஒரு பிரச்சினை எழும் போது அதனை நிதானமான போக்கில் கையாள முயற்சிக்கும்.சிறு பிரச்சினை எழக் கூடிய நிலை இருந்தாலும் அதனை தவிர்ந்து கொள்வார்கள்.ஆனால் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அப்படி கையாளாது.எமது சமூகத்தின் பிரச்சனைகளை எது செய்தாவது தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கொண்டது.அவர்கள் சண்டித் தனத்தை காட்டினால் இவர்களும் ஏட்டிக்கு போட்டியாக நின்று அதனை சாதிக்க நினைப்பார்கள்.கிரேன்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அங்கு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் களத்தில் நின்றமை அளுத்கமை கலவரத்தை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தயாராகியமை போன்ற சிலவற்றை கோடிட்டு காட்ட முடியும்.இலங்கை பௌத்த மக்களை பெரும் பான்மையாக கொண்ட நாடாதலால் இவ்வாறு அவர்களுடன் ஏட்டிக்கு போட்டியாக நிற்பது முஸ்லிம்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இலங்கை முஸ்லிம்கள் பலருடைய நிலைப்பாடு.இந்த வகையிலேயே அவர்கள் ஜீ.எஸ்.பீ வரிச் சலுகைக்காக நடாத்திய ஆர்ப்பாட்டமும் முஸ்லிம் மக்கள் சிலரால் பிழையாக பார்க்கப்பட்டது.இன்று இலங்கையில் பேரினவாதம் இல்லாமல் இருக்குமாகயிருந்தால் இவர்களுடைய ஆர்ப்பாட்டங்கள் மிகப் பெறுமதியானவை.இங்கு ஒரு விடயத்தை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும் இவர்கள் இனவாதத்தை தூண்டவில்லை.இன்று இலங்கையில் நிலவும் இனவாதம் காரணமாக சில வேளை இவர்களுடைய செயற்பாடுகள்  ஆபத்தாக முடியலாம் என்பதாகும்.

பொது பல சேனா அமைப்பினர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் நடாத்தும் ஆர்ப்பாட்டம் இலங்கை நாட்டிற்கும் பௌத்த மதத்திற்கும் ஆபத்தானது என கருதியிருந்தால் பிறிதொரு நாளில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.அது அவர்களுடையே ஜனநாயக உரிமை.இப்படி இதனை கையாளாமால் தௌஹீத் ஜமாஅத் சட்ட ரீதியான அனுமதிகளோடு ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டமிட்ட இடத்தில் அதனை குழப்ப சில கடும் போக்ககாளர்கள் நின்றிருந்தனர்.அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவரான டான் பிரசாத் முஸ்லிம்களை எரிப்போம் போன்ற மிகக் கடுமையான வாசகங்களை பயன்படுத்தியிருந்தார்.இலங்கை அரசு நீதியுடன் செயற்பட்டிருந்தால் அவர்கள் அவ்விடத்திலேயே கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.இச் சந்தர்ப்பத்தில் பொலிசார் தௌஹீத் ஜமாத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தாங்கள் ஆர்பாட்டம் நடாத்த திட்டமிட்ட இடத்தை விட்டுக் கொடுத்து தௌஹீத் ஜமாத் அமைப்பினர் அமைதியை கடைப்பிடித்தனர்.அங்கு சிங்களத்தில் உரையாற்றிய ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துர் றாசிக் ஞானசார தேரரை தாக்கி பேசியிருந்தார்.தாங்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய விடயத்தில் ஞானசார தேரரை சிறி தளவேனும் தாக்கி பேச வேண்டிய தேவையில்லை.இவர்கள் அதை மாத்திரம் தவிர்ந்திருந்தால் இன்று இத்தனை பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்காது.இது அவர்களின் பக்குவமற்ற போக்கை எடுத்து காட்டுகிறது.பௌத்த மக்கள் தங்கள் மத குருக்களுக்கு அதிக கௌரவத்தை வழங்குவார்கள்.ஞானசார தேரர் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்பிருக்கலாம்.ஏன் சில பௌத்த மக்களுக்கும் வெறுப்பிருக்கலாம்.அதற்காக அவர்களுடைய மத தலைவர்களுக்கு முஸ்லிம்கள் ஏசுவதை ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்து செயற்பட முடியாது.இன்று முஸ்லிம் விடும் சிறு தவறுகளும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நிலை உள்ளதால் இவர்களின் இப் போக்கு எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.இருந்தாலும் ஞானசார தேரர் இவ்விடயத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இவர்களும் அவரை வம்புக்கு இழுத்திருக்க மாட்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு தௌஹீத் ஜமாத்தானது கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு முஸ்லிம்களுக்கு எதிரான கடும் வார்த்தைகளை பிரயோகித்த டான் பிரசாத்திற்கு எதிராக கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.இதற்கமைவாகவும் சில அரசியல் வாதிகளின் அழுத்தங்களினூடாகவும் டான் பிரசாத் கைது செய்யப்பட்டார்.இவர் கைது செய்யப்படும் போது மிகவும் பயந்த தன்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதாக அறிய முடிந்தது.இலங்கை அரசு இனவாதிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறியமையே இவ்வாறான பயந்த சுபாவமுடையவர்களும் அச்சமின்று இனவாதக் கருத்துக்களை தூபமிடுகின்றார்கள்.அண்மைக் காலமாக பொதுபல சேனா மீண்டும் ஒரு அளுத்கமை போன்ற கலவரம் ஒன்றை உருவாக்கும் தோரணையில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது.இதற்கு டான் பிரசாத் கைது செய்யப்பட்ட விடயமும் ஞானசார தேரர் தொடர்பில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் றாசிக் கதைத்த விடயமும் சாதகமாய் அமைந்தது.பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் றாசிகை கைது செய்யாது போனால் தாங்கள் பலர் மரணிப்பதற்கு தயாராக உள்ளோம் என அறிவித்தார்.இதன் போது ஞானசார தேரர் மாளிகாவத்தையில் இரத்த ஆரை ஓட்டுவோம் போன்ற மிகக் கடும் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் விசாரணைக்காக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அப்துர் றாசிக் கைது செய்யப்பட்டிருந்தார்.ஞானசார தேரரின் எச்சரிக்கைக்கு அஞ்சியே இக் கைது இடம்பெற்றது என்றாலும் தவறில்லை.இது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தான சமிஞ்சைகளாகும்.அப்துர் ராசிக் பேசியது மத நல்லிணக்கத்திற்கு குந்தகமான பேச்சு என்றால் ஞானசார தேரரை விசாரணைக்காகவே பல்லாயிரம் நாட்கள் சிறையிலிட வேண்டும்.ஞானசார தேரரை கைது செய்ய இயலாத இலங்கை அரசு முஸ்லிம்களை திருப்தி செய்ய டான் பிரசாத்தை கைது செய்துள்ளது.இதனை நம்பி ஏமாறுமளவு முஸ்லிம் சமூகம் ஏமாளிகளல்ல.இலங்கை அரசால் டான் பிரசாத் இனவாதம் கதைத்தாரென கைது செய்ய முடியுமாக இருந்தால் ஏன் ஞானசார தேரர் இனவாதம் கதைக்கின்றார் என கைது செய்ய முடியாது? இதிலிருந்து இலங்கையில் பௌத்த மத குருக்களுக்கு தனிச் சட்டமுள்ளமை புலனாகிறது.இலங்கை அரசு பேரினவாதிகளை திருப்தி செய்ய அப்துர் றாசிகை கைது செய்துள்ளது.இதற்கு முன்பு அவர் மீதிருந்த நீதி மன்ற எச்சரிக்கையை காட்டியே கைது செய்யப்பட்டுள்ளார்.அதாவது எப்படியோ இவரை கைது செய்ய வேண்டுமென கைது செய்துள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.சில வேளை அப்துர் றாசிக் கைது செய்யப்படாமல் இருந்திருந்தால் அவரை வைத்து இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

தௌஹீத் ஜமாதை ஒரு தீவிரவாத அமைப்பு போன்று காட்டியதன் மிகப் பெரும் பங்கு இலங்கை முஸ்லிம்களையே சாரும்.குறித்த வழக்கு விசாரணையின் போது தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு எதிராக அசாத் சாலி தனது வழக்கறிஞ்சரையும் அனுப்பியுள்ளார்.றாசிக் உட்பட நால்வரை கைது செய்யுமாறு பொலிஸிலும் முறையிட்டுள்ளார்.தௌஹீத் ஜமாத் அமைப்புடன் பலருக்கு கொள்கை ரீதியில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களும் முஸ்லிம்களே.முஸ்லிம் என்ற காரணத்திற்காகவே ஏதோ ஒரு காரணத்தை காட்டி கைது செய்துள்ளனர்.அவர்கள் முஸ்லிம்களுக்காவே தங்களது ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர்.இது தான் அவர்களை அடக்க சிறந்த சந்தர்ப்பமென அசாத் சாலி செயற்படுகின்றமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.அசாத் சாலிக்கும் தௌஹீத் ஜமாத்திற்கும் இடையே இஸ்லாமிய கொள்கை சார்ந்த பிரச்சினை என்பது யாவரும் அறிந்ததே.இதன் போது ஆஜரான வளக்கறிஞர் ஷஹீத் இப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அசாத் சாலியின் சகோதரர் ரியாஸ் சாலி ஆகியோர் அமைச்சர் றிஷாத்துடன் நெருங்கியவர்களாக உள்ளமையினால் இதனை சாக்காக கொண்டு அமைச்சர் றிஷாதை தௌஹீத் ஜமாதினருக்கு எதிரானவராக காட்ட முனைவது தவறானதாகும்.இவ்விடயத்தில் தௌஹீத் ஜமாத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் மாத்திரமே பகிரங்க ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்விடயத்தில் அனைத்து அரசியல் வாதிகளும் இவர்களுக்கு உதவ முன் வேண்டும்.நாளை இது போன்ற நிலை ஏனைய முஸ்லிம் ஜமாத்தினருக்கும் ஏற்படலாம்.இதனை நீதி அமைச்சர் விஜய தாச ராஜ பக்ஸ 18-11-2016ம் திகதி பாராளுமன்றத்தில் சில அமைதி போக்குடைய முஸ்லிம் அமைப்புக்களை தீவிரவாத அமைப்புக்கள் போன்று  கூறியிருந்தமை இதற்கு சிறு சமிஞ்சையாகவும் நோக்கலாம்.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 23-11-2016ம் திகதி புதன் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 70 கட்டுரையாகும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *