மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் குருஸாந்தன் மஹாலட்சுமி தலைமையில் இன்று காலை மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இதன் போது கலந்து கொண்ட நூற்றுக் கணக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.
மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன் ஆரம்பமான குறித்த பேரணி, பிரதான வீதியூடாக சென்று மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தை அடைந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தமது கோரிக்கை அடங்கிய துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த ஊர்வலம் மன்னார் பஸார் வீதியூடாக சென்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னர் ஒன்று கூடி, தமது வாயை கறுப்புத் துணியினால் கட்டியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் காணப்பட்டனர். இறுதியாக அமைதியான முறையில் ஊர்வலமாக சென்ற பெண்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி துண்டுப்பிரசுரங்களை கையளித்தனர்.குறித்த அமைதி ஊர்வலத்தில் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் உற்பட பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.