Breaking
Sun. May 5th, 2024

மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இரு நாட்டு பிரதிநிதிகளும் முதலில் கலந்து பேசினார்கள். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 6 ஒப்பந்தங்கள் ஏற்பட்டது. பின்னர் அவர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும், மாலைத்தீவு அதிபர் அப்துல்லா சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரட்டை வரிவிதிப்பு முறையை தவிர்த்தல், வரிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், விண்வெளி தொடர்பான ஒத்துழைப்பு, வரலாற்று நினைவிடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பாதுகாப்பது ஆகிய 6 ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள், ‘‘இரு நாடுகளுக்கும் இடையேயான அனைத்து விஷயங்கள் தொடர்பாகவும் விவாதித்தோம். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகியவற்றின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை அறிந்துள்ளோம். தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுதல், மத தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்கள் வேரூன்றுவதை தடுப்பது என இரு தலைவர்களும் உறுதி ஏற்றுக்கொண்டோம்’’ என்றனர்.

மாலைத்தீவு அதிபர் அப்துல்லா கூறும்போது, ‘‘எங்கள் நாடு இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றி வருகிறது. எங்கள் பாதுகாப்பு இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

பிரதமர் மோடி கூறும்போது, ‘‘மாலைத்தீவு அதன் பாதுகாப்பு தொடர்பாக கவலை மற்றும் அக்கறை கொள்கிறது. வளம், நிலையான தன்மை ஆகியவற்றுக்கும் அதற்கு சமமான அக்கறையை இந்தியா கொண்டுள்ளது. அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை என்பதே இந்தியாவின் கொள்கையில் முக்கியமானது’’ என்றார்.

பிதமர் மோடியை சந்தித்த பின்னர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் மாலைத்தீவு அதிபர் அப்துல்லா கயூம் சந்தித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *