Breaking
Fri. Apr 26th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

இலங்கைக்கு வருகைதந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களை முஸ்லிம் தலைவர்கள் சந்திக்கவிடாமல் அரசாங்கம் தடுத்ததானது எதிர்பாராத விடயமல்ல.

பாகிஸ்தான் பிரதமரை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைத்துள்ளது. அவ்வாறு அழைக்கப்பட்ட வெளிநாட்டு தலைவரை யார் யார் சந்திப்பதென்ற நிகழ்ச்சி நிரலினை இரு நாட்டின் இராஜதந்திர குழுக்களே தீர்மாணிப்பார்கள்.

முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்தே தீருவோம் என்ற தீர்மானத்தில் அரசாங்கம் ஒற்றைக்காலில் நிற்கின்ற நிலையில், முஸ்லிம் தலைவர்கள் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து எதனை கூறப்போகின்றாகள் என்று ஊகிப்பது அரசாங்கத்திற்கு கடினமான விடயமல்ல.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமரை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து ஜனாஸா விவகாரத்தினை கூறுகின்றபோது அது அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரமாகவே கருதப்படும். இதனை விரும்பாத அரச தரப்பினர் இறுதிநேரத்தில் அதனை ரத்துச் செய்திருக்கலாம். இவ்வாறு நிகழ்வது அரசியலில் ஒன்றும் புதிய விடயமல்ல.

இங்கே கேள்வி என்னவென்றால், பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யாவிட்டால் என்ன செய்வது ? யாரிடம் முறையிடுவது ?

இலங்கைக்கு வருகைதந்தால் மட்டும்தான் சந்திக்க முயற்சிப்பதா ? முஸ்லிம் தலைவர்களை அவர்களது நாட்டுக்கு சென்று சந்திக்க முடியாதா ?

இந்திய தலைவர்கள் இலங்கைக்கு விஜம் மேற்கொள்கின்றபோது, இங்குள்ள தமிழ் கட்சியின் தலைவர்கள் அவர்களை சந்திப்பது சாதாரணமாக நடைபெறுகின்ற விடயம். அவ்வாறான சந்திப்புக்களை அரசாங்கம் தடுப்பதில்லை.

அதுமட்டுமல்லாது தமிழ் தலைவர்கள் இந்தியா, ஐரோப்பா போன்ற மேற்கத்தேய நாடுகள் மற்றும் ஐ.நா உயர் ஆதிகாரிகள், அரச தலைவர்கள் ஆகியோர்களை அவர்களது நாடுகளுக்கு சென்று சந்தித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை கோருவது அடிக்கடி நடைபெறுகின்ற விடயமாகும்.

தமிழ் தலைவர்கள் தமது மக்களுக்கு அரசியல் தீர்வினை மட்டும் கோரி சர்வதேச தலைவர்களை சந்திக்கவில்லை. மாறாக இறுதி யுத்தத்தின்போது யுத்த குற்றம் புரிந்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள்.

ஆனால் எமது முஸ்லிம் தலைவர்கள் அவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று எமது மக்களின் பிரச்சனைகளை அங்குள்ள முஸ்லிம் அரச தலைவர்களிடம் சந்தித்து கூறியதில்லை.

அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வதென்றால், இலங்கை அரசாங்கத்தின் முகவர்களாக அல்லது தங்களது தனிப்பட்ட வர்த்தக விடையமாக சென்று வந்துள்ளார்களே தவிர, எமது மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அல்ல.

இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதுவராலயம் ஊடாக நேரம் எடுத்து பாகிஸ்தானுக்கு சென்று பிரதமர் இம்ரான்கானை சந்திக்க முடியும்.

அல்லது இஸ்லாமிய உலகின் முதன்மை வல்லரசாக திகழ்கின்ற துருக்கி உற்பட பலமிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு சென்று எமது பிரச்சனைகளை முறையிட முடியும்.

அவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களிடம் எமது பிரச்சனைகளை முறையிட்டால் மட்டுமே எமது தலைவர்களை எங்களால் நம்ப முடியும். இல்லாவிட்டால் இதுவும் ஓர் அரசியல் என்று கடந்து செல்வதைத்தவிர வேறு ஒன்றுமில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *