Breaking
Sat. Apr 27th, 2024

‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம், முடிந்தால் தலையை வெட்டிப்பார்க்கட்டும் என்று யோகா குரு பாபா ராம் தேவ்க்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க சவால் விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நாள் முதல் முஸ்லிம்களுக்கு எதிரான விஷமத்தனமான பேச்சுக்களும் நிகழ்வுகளும் தொடர்கதையாகி விட்டன. மத்திய  அமைச்சர்கள், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சங்பரிவார குழுக்களின் நிர்வாகிகள் என பல தரப்பும் தேசத்தின் அமைதியை குலைத்து இந்திய மக்களுக்கிடையே நிலவும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வண்ணம் தினம் ஒரு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் பாபா ராம்தேவ், ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாதவர்களின் தலைகளை எல்லாம் வெட்டுவேன் என்று வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியிருக்கிறார். இவருடைய விஷமத்தனமான பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சவால் விடுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல மாட்டோம். முடிந்தால் தலையை வெட்டிப்பார்க்கட்டும் என்று ராம் தேவ் எனும் ரவுடிக்கு சவால் விடுகிறோம்.

பாபா ராம்தேவிற்கு உண்மையான தேசப்பற்று இருக்குமேயானால், யோகா வகுப்புகள் நடத்தி ஆயிரக்கணக்கான கோடிகள் சம்பாதித்த ரகசியத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி தனது நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் பெறுமதியுள்ள சொத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதை வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஸ்காட்லாந்தில் இருக்கின்ற பல மில்லியன் டாலர் மதிப்புள்ள “தி லிட்டில் கம்ப்ரே” என்ற தீவு தனக்கு எவ்வாறு சொந்தமானது என்பதையும் சேர்த்து விளக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாபா ராம்தேவ் மீது அமலாக்கப் பிரிவு, அன்னியச் செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்தது. பாபா ராம்தேவும், அவரது அறக்கட்டளை நிறுவனங்களும் அன்னியச் செலாவணி சட்டத்தை மீறி நடந்து கொண்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ள வழக்கு குற்றம் சாட்டுகிறது. இவருடைய நிறுவனத்தின் மீது முத்திரைத்தாள் மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. இவ்வாறு இந்திய தேசத்தின் பல சட்ட திட்டங்களை எந்தவிதத்திலும் மதிக்காமல் செயல்படுகின்ற வியாபாரி ராம்தேவ் மற்றவர்களுக்கு தேசபக்தி பாடம் எடுப்பது கடும் நகைப்பிற்குரியது.

அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அமைதியான தேச வளர்ச்சிக்கு பாதகம் விளைவிக்கும் வண்ணம் பேசி, இந்தியாவில் இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே மத மோதலை ஏற்படுத்த முயற்சிக்கும் பாபா ராம்தேவ் மீது மத்திய, மாநில அரசுகள் கிரிமினல் சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்து பாபா ராம்தேவை கைது செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *