Breaking
Sun. May 19th, 2024

FACEBOOK இல் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவை அனுமதிக்கும் திட்டம் ஒன்றைப் பற்றி FACEBOOK நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் விவரித்துள்ளார்.

இந்த திட்டம் பற்றி அவர் எழுதிய கடிதம் ஒன்றில், பயங்கரவாதம், வன்முறை, மிரட்டுதல் போன்றவைகளைக் கண்டுபிடித்தல் மேலும் தற்கொலைகளை கூட தடுக்கக்கூடிய வகையில் இது திட்டமிடப்படும் அல்காரிதம்களால் (ஒருவகைக் கணித முறை) காலப்போக்கில் முடியும் என்று மார்க் சூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

முன்னர் இணையத் தளத்திலிருந்து நீக்கப்பட்ட சில தகவல்களில் FACEBOOK தவறுகளை இழைத்துள்ளது என்பதை மார்க் சக்கர்பெர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால், இந்த திட்டத்திற்கு தேவையான அல்காரிதம்களை உருவாக்க பல ஆண்டுகள் ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மார்க் சூக்கர்பெர்க்கின் இந்த அறிவிப்பை இணைய பாதுகாப்பு தொண்டு நிறுவனம் ஒன்று வரவேற்றுள்ளது.

தீவிர வன்முறையை சித்தரிக்கும் பதிவுகளை FACEBOOK கையாண்ட விதம் குறித்து முன்பு கடும் விமர்சனங்களை அந்த தொண்டு நிறுவனம் முன்னர் வைத்திருந்தது .

பிழைகள்

தினந்தோறும் FACEBOOK கில் குவியும் பில்லியன் கணக்கான செய்திகள் மற்றும் பதிவுகளை மீளாய்வு செய்வது என்பது சாத்தியமில்லாதது என்று தன்னுடைய நீண்ட கடிதத்தில் மார்க் சூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

´´நாங்கள் இதுவரை கண்ட பிரச்சினைகளின் சிக்கல்கள், FACEBOOK சமூகத்தை நிர்வகிக்க தற்போது நடைமுறையில் உள்ள அமைப்பு முறைகளை விஞ்சியுள்ளது,´´ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம் என்ற நோக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி நீக்கப்பட்டதற்கும், வியாட்நாம் போரின் கொடூரத்தை காட்டும் நேபாம் குண்டு வீச்சுக்கு ஆளான சிறுமியின் புகைப்படம் நீக்கப்பட்டதற்கும் தற்போது நடைமுறையில் உள்ள பிழைகளே காரணம் என்றும் மார்க் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் பதிவாகும் படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து, ஏதேனும் ஆபத்தான விஷயங்கள் நடக்கின்றனவா என்பதைப் புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பு முறைகளைப் பற்றி நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், என்று மார்க் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது பயங்கரவாதம் பற்றிய செய்திகளுக்கும், உண்மையில் பயங்கரவாதப் பிரசாரப் பதிவுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், இந்த ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்து வழிகளை நாங்கள் பரீசிலிக்கத் தொடங்கியிருக்கிறோம், என்றும் அவர் கூறினார்.

செய்திகளை தனிப்பட்ட முறையில் வடிகட்டுதல்

தன்னுடைய இறுதி நோக்கமானது மக்கள் சட்டத்திற்கு உட்பட்ட வகையில், என்ன விரும்புகிறார்களோ அதனை பதிவிட அனுமதிப்பதுதான் என்றும், மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை கட்டுப்படுத்தி தாங்கள் பார்க்க விரும்பாத பதிவுகளை அகற்ற முடியும்.

´´நிர்வாணம் குறித்த உங்கள் அளவீடுகள் என்ன ? வன்முறை குறித்து ? கிராஃபிக் தகவல்களை குறித்து ? அவதூறு குறித்து ? நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்களோ அதுதான் உங்களின் தனிப்பட்ட அமைப்புகளாக இருக்கும்,´´ என்று விளக்கம் அளித்துள்ளார்.

´´இந்த அளவீடுகள் குறித்து முடிவெடுக்காத பயன்பாட்டாளர்களுக்கு, அந்தப் பகுதியில் பெரும்பான்மை மக்கள் என்ன முடிவை தேர்ந்தெடுக்கிறார்களோ அதுவே இயல்பாக தரப்படும் — மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பைப்போல இந்த விடயம் முன்னெடுக்கப்படும்´´ , என்றார் மார்க்.

´´ஆராய்ச்சியின் தற்போதைய கட்டத்தில், 2017ல் சில அம்சங்களை கையாள நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், பிற விஷயங்களை செயல்படுத்துவதற்கு பல ஆண்டுகள் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *