Breaking
Sat. Nov 23rd, 2024

பண்டைய காலந்தொட்டு உலக சமுதாயம் பலவற்றாலும் கொண்டாடப்பட்ட ஒரு விழா – அறுவடை விழா. இதுவே உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்ற தைப்பொங்கல் விழாவுக்கான அடிப்படையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது தைப்பொங்கள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தைத்திருநாள் உலகெங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். தமிழர்கள் தம் வாழ்வில் கொண்டாடி மகிழ்கின்ற பண்டிகைகளில் உன்னதமானதோர் நிகழ்வு இந்த தைத்திருநாளாகும்.

உழவர் பெருமக்கள் தங்களின் கடின உழைப்புக்கு பயன் நல்கிய இயற்கைக்கு, தமது நன்றியுணர்வினைத் தெரிவிக்கும் திருநாளாக இத்தைத்திருநாள் விளங்குகின்றது. அதனால் இத்தைப்பொங்கல் திருநாளிலே அனைவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தி மகிழ்கின்றனர். இயற்கையின் பெருமைக்கு முக்கியத்துவம் நல்கும் இத்திருவிழா, நன்றி மறவாத உன்னத பண்பினை நம் அனைவருக்கும் எடுத்தியம்பி நிற்கிறது.

இனம், மதம், மொழி ஆகியவற்றினால் நம் தேசம் வேறுபட்டிருந்தாலும் – நாம் அனைவரும் இலங்கை மாதாவின் பிள்ளைகள் என்று சொல்வதிலே பெருமை கொள்வோம். நம் அனைவரினதும் எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாக அமைவதே இத்தேசத்தின் சுபீட்சத்துக்கான அத்திவாரம்.

நாட்டைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு” என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறோம். இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இத்தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது. இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும்.

அனைத்து மக்களும் நிறைந்த சௌபாக்கியத்துடன், அமைதியும் சமாதானமும் நின்று நிலைக்கும் வகையில், மகிழ்வோடு வாழ இந்த நன்னாளிலே எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த மகிழ்ச்சியான நன்னாளிலே, தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கும் எம் சக உறவுகளாகிய தமிழ் உறவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *