Breaking
Mon. May 20th, 2024

நீர்கொழும்பில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பள்ளி­வாசல் உட்பட 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்­கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டிகளும் சேதப்படுத்தப்பட்­டுள்ளன.
வீடுகளுக்குள் புகுந்த குழுவினர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்­படுத்தியதுடன் சில வீடுகளில் நகைகள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளை­யிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட­வர்கள் முறையிடுகின்றனர்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போருதொட்ட, பலகத்­துறை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சங்­கங்களைச் சேர்ந்த இரண்டு குழுக்களி­டையே நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்­கிழமை மாலை இடம்பெற்ற கைகலப்பை அடுத்து அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரியூட்டப்பட்டதுடன் சில முச்சக்கர வண்டிகளும் சேதமாக்கப்பட்டன.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படை­யினர் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்­டுக்குள் வந்திருந்தது.

இதனையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் ஊரடங்குச்­சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஊரடங்குச்­சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டபோதும் குழு­வொன்று முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்­ளது.

வாள்கள் பொல்லுகளுடன் வருகை தந்த இக்குழுவினர் தாக்குதலை மேற்கொண்­டுள்ளனர்.

ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்­பட்டமையினால் பிரதான வீதிக்கு செல்­லாமல் உள்வீதிகளால் பிரவேசித்த குழு­வினரே இத்தகைய தாக்குதல்களை நடத்தி­யுள்ளனர்.

இந்த அசம்பாவிதங்களின்போது வீடுகள் பல தாக்கப்பட்டன. வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமாக்கபட்டதுடன் சில வீடு­களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்­டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்­தின்போது வாகனங்கள் பல தீக்கிரையாக்­கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிலர் தாக்குதலுக்கு உள்ளாகி­யுள்ளனர்.

ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இனந்தெரியாத குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாதிக்­கப்பட்டவர்களும் சம்பவத்தை நேரில் கண்ட­வர்களும் தெரிவிக்கின்றனர்.
பள்ளிவாசல்மீது தாக்குதல்
பெரியமுல்லை லாசரஸ் வீதி, பெரிய­முல்லை செல்லகந்த வீதி, தளுபத்தை, கல்­கட்டுவை வீதியில் சமகி மாவத்தையில் அமைந்துள்ள வீடுகள் பலவற்றின்மீது தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முச்சக்­கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகி­யன தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன. இப்ப­குதியில் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் தாக்­குதலுக்குள்ளாகியுள்ளதுடன் பொருட்­களும் சேதப்படுத்தப்பட்டன. பெரிய­முல்லை லாசரஸ் வீதியில் தெனியவத்த பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்­ளன.

சம்பவத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்துடன் இருந்தனர். சிலர் தமது உறவினர்களுடைய வீடுகளுக்கு பாதுகாப்பு தேடிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்­படுத்தப்பட்டது. ஆயினும் ஊரடங்கு நடை­முறைப்படுத்தப்பட்ட வேளையிலும் தாக்­குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்­சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

கர்தினால் நேரில் விஜயம்
இதேவேளை, கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித், அகில இலங்கை ஜம்­மியத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பலகத்துறை ஜும்மா பள்ளிவாசல், தெனியவத்த பள்ளிவாசல், பெரியமுல்லை பெரிய பள்ளிவாசல் ஆகி­யவற்கு விஜயம் செய்தனர்.

பெரிய­முல்லை பெரிய பள்ளிவாசலில் இரு தலைவர்களும் இரு தரப்பினரும் ஒற்று­மையாக இருக்க வேண்டியதன் அவசி­யத்தை வலியுறுத்தினர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரையாற்­றும்போது ,
சிறிய குழுவைக் கொண்ட அடிப்படை­வாதிகள் அண்மையில் தேவாலயங்க­ளிலும் ஹோட்டல்களிலும் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள் பொறுப்­பல்ல. எனவே, முஸ்லிம்களை தாக்க வேண்டாம் என்று என்று கேட்டுக்கொள்­கிறேன்.

இரு சமயத்தவர்களும் சகோதரர்களாவோம். இரு இனத்தினரும் நூறாண்டுகளுக்கு மேலாக சகோதரர்களாக வாழ்ந்தோம். இனியும் வாழவேண்டும். எனவே, கிறிஸ்­தவர்கள் முஸ்லிம்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம். இங்குள்ள சிறிய பள்­ளிவாசல் ஒன்றின் கண்ணாடிகள் உடைக்­கப்பட்டிருந்ததையும் சமயப்பாடசா­லையின் கட்டடம் தாக்கப்பட்டதையும் அவதானித்தேன்.

இது கத்தோலிக்கர்களான எங்களுக்கு பொருத்தமானது அல்ல. இவ்வாறு நாங்கள் செய்யக்கூடாது. அப்படி நடந்தால் நாங்கள் எமது சமயத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அமையும். நாங்கள் முஸ்லிம்களுடன் சகோதரர்களாக பழக வேண்டும். நடந்த சம்பவத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் , நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *