கொழும்பு 07, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
நீர், சூரிய சக்தி, காற்று போன்ற மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களைக் கொண்டு மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பில், இலங்கை நிலைபெறுதகு வலுச்சக்தி அதிகார சபையின் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துத் தகவல் தெரிவித்துகொள்ளும் நோக்கிலேயே, ஜனாதிபதி அவர்கள் இந்தத் திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்துக்கமைய, 2030ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களின் மூலம் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. அதேபோன்று, நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டின் மூலம் குறுகிய காலத்துக்குள் தீர்வு காண்பதற்குள்ள இயலுமை தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
இதேவேளை, புதிதாக ஆரம்பிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுப் பயன்பாட்டிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் தொடர்பில் ஆராய்வதும், இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
18.02.2022