Breaking
Fri. Apr 26th, 2024

-சுஐப் எம்.காசிம்-

“இருண்டு கிடக்கும் இலங்கைக்கு ஒரு வௌிச்சம் ஏற்ற வந்தேன்”! எட்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையின் உருக்கம் இதுதான். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரின் கொள்கை விளக்கப் பிரகடன உரையை, அதிகமான அரசியல்வாதிகளும், பொருளாதார வல்லுநர்களும் வாழ்த்தியுள்ளனர். சிலரது வாழ்த்தில் சம்பிரதாயமும் இருக்கிறது. இந்த இருண்ட இலங்கைக்கு ஔியேற்ற இதற்கு முன்னர் பொதுவான அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றிருக்கலாம், ஏற்றிருந்தால் ஜனாதிபதியாகியிருக்கலாம். இந்த ஆதங்கத்திலிருப்போரும் வாழ்த்தியே உள்ளனர். ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மட்டுமே இந்த அதிகாரத்தால் மாற்ற முடியாது. ஏனைய சகலதையும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியால்சாதிக்க முடியும். இவ்வாறுள்ள ஜனாதிபதி ஏன் சர்வகட்சி அரசாங்கத்துக்கு அழைக்கிறார்? இதுதான் சிலருக்குள்ள சந்தேகம்.

சர்வதேச உதவிகள் தடைப்பட்டு, உலக அரங்கில் நமது நாடு தனிமைப்பட நேர்ந்த ஆட்சியாளர்களின் ஆசீர்வாதம் புதிய ஜனாதிபதிக்கு இருக்கும் வரை, இவரை ஆதரிப்பதில்லை என்றுதான் எதிரணிகள் இருந்தன. அப்படியிருந்தும், கொள்கைப்பிரகடன உரையை வாழ்த்தியிருக்கும் இவர்களது மனநிலைதான் என்ன? இந்தக் கொள்கைக்கு உயிரூட்ட இவர்கள் தயங்குவது எதற்கு? சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஒத்துழைத்தால் சர்வதேச உதவிகள் வந்துவிடும், அவ்வாறு இவ்வுதவிகள் வந்தால் இவரை இயக்கும் சக்திகள் பலமடையும் என்றா?

இங்கு இன்னுமொரு புதுமையும் உள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க கோருவதும், சிலவேளைகளில் நிலைக்க வேண்டுவதும் வெவ்வேறு மனநிலைகளால் எழுகிறதே ஏன்? சிறுபான்மை சமூகங்களின் ஏக தலைமைகள் இவ்வதிகார விடயத்தில் ஒரு நிலைப்பாட்டுக்கு வராமலே நாற்பது வருடங்களை கடத்திவிட்டனவே! தீர்மானிக்கும் சக்தியால் அல்லது தங்களது ஆசீர்வாதத்துடன் தெரிவாகும் ஜனாதிபதியை நிலைக்க வேண்டுவது, தங்களது வியூகங்களையும் விஞ்சி வெற்றிபெறுபவரை வௌியேறக் கோருவது, இதுவா இராஜதந்திரம்? இல்லை. தங்களுக்கு அல்லது தங்களது சமூகங்களுக்கு வேண்டாதவரை வெற்றி பெறாமல் தடுப்பதும், வேண்டியவரை வெற்றிபெற வைப்பதும்தான் இராஜதந்திரம்.

1989, 1994, 2000 ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தனது சமூகத்துக்கு வேண்டியவரையே ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றியீட்ட வைத்தது. ஆனால், 2005, 2010, 2019 ஆண்டுகளில் வேண்டாதவரை தோற்கடிக்கவோ, வேண்டியவரை வெற்றியீட்டவோ, சிறுபான்மை சமூகங்களின் ஏக தலைமைகளால் முடிந்திருக்கவில்லை. 2015இல் வேண்டியவர் வெற்றியீட்டினாலும், இச்சமூகங்களுக்கு வேண்டாதவைதான் அதிகம் நடந்தன. எனவே, ஆளைப்பொறுத்தே இந்த அதிகாரத்தை அடையாளம் காண முடிகிறது. இந்த அனுபவங்களே போதுமே, நிறைவேற்றதிகாரம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்க. இதிலுள்ள துரதிஷ்டம் நாற்பது வருடங்களாகியும் சிறுபான்மையினரின் ஏக தலைமைகள் தீர்மானிக்காததுதான். பரவாயில்லை, அவ்வாறு தீர்மானிக்கும் வரையாவது வெற்றிபெறப் போகும் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதுதான் இராஜதந்திரம். இந்த நிலைப்பாட்டுக்காவது இத்தலைமைகள் வரவேண்டியிருக்கிறது. தென்னிலங்கையை மோப்பம் பிடிக்கும் சக்தியில்தான், இந்த இராஜதந்திரம் உயிர் வாழ்கிறதென்பதையும் இத்தலைமைகள் உணர்தலவசியம். நிறைவேற்றதிகாரம் இருக்கும்வரை, இந்நாட்டில் இதுதான் இராஜதந்திரமும்.

இந்த நிறைவேற்று அதிகாரம் தேவையே இல்லை என்ற முடிவுக்கு வரும் சிறுபான்மை தலைமைகள், அவசியம் புதிய நிறைவேற்றதிகார ஜனாதிபதி அமைக்கவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய வேண்டும். அப்போதுதான், நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்கத் தேவைப்படும் மூன்றிலிரண்டு எம்.பிக்களின் ஆதரவைப்பெற உதவும். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், நிறைவேற்றதிகார ஜனாதிபதி என்ற தனிநபரிடம் குவியும் ஏகபோக அதிகாரங்களுக்கு கடிவாளமிடவே வருகிறது.

பொதுமன்னிப்பு வழங்கும்போது பாராளுமன்றத்தின் அனுமதியை பெறுவது, அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையின் அனுமதியுடன் பிரதம நீதியரசர்களின் நியமனம் இடம்பெறுவது, மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆளுநரை நியமிப்பது, மாறாக இச்சபைகள் கலைக்கப்பட்டிருப்பின் தேசிய சபையின் பரிந்துரையை பொருட்படுத்துவது, பிரதமருக்கு பதிலளிப்பது மற்றும் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறுவது உள்ளிட்ட திருத்தங்களே இந்த 22இல் உள்ளன. பெரும்பாலும் இத்திருத்தங்கள் நிறைவேற்றதிகாரத்தின் ஏகபோக உரிமைக்கு இடப்படும் கடிவாளம்தான்.

இந்த அதிகாரத்தை ஒழிப்பதற்கான கடைசிக் காய்நகர்த்தலாக இதைப் பாவிப்பதே, நிறைவேற்றதிகாரத்தை ஒழிக்க விரும்பும் ஒருமொழிச் சமூகங்களின் தலைமைகளுக்கு அழகு. இந்த அதிகாரமே நிலைக்க நாடும் தலைமைகள், வெற்றிபெறும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு ஆதரிப்பதே அதைவிட அழகு.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *