Breaking
Fri. Nov 22nd, 2024

(ஊடகப்பிரிவு)

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என்ற தனிமனித ஆளுமையைக் கொண்டிருக்கும் நம்பிக்கையினாலேயே நாம் அவருடன் இணைந்து பணியாற்ற திடசங்கற்பம் பூண்டுள்ளோம் என்று முன்னாள் பிரதி மேயரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உயர்பீட உறுப்பினருமான கே.ஏ.ஜவாத் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அம்பாரை மொண்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்ற போதே ஜவாத் இவ்வாறு தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜவாத் மேலும் கூறியதாவது,

அம்பாரை மாவட்டம் அரசியல் அனாதையாக்கப்பட்டுவிட்டது! அனாதையாக்கப்பட்டுள்ளதே! என்று அழுதழுது ஒவ்வொரு நாளும் நாம் வடித்த கண்ணீருக்கு விடையாக, இங்கிருக்கும் உருவங்களை நான் காண்கின்றேன். இந்தக் கட்சியில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் வீரத் தியாகிகளாக மாறி, இந்தக் கட்சிக்காக உழைத்து சமூகத்தில் புது வரலாறு படைக்க வேண்டும்.

எமது இரத்தத்தினாலும், கண்ணீரினாலும், வியர்வையினாலும் வளர்த்தெடுத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறான ஒரு கூட்டத்தை அம்பாரையில் நடாத்தக் கூடிய சக்தி இல்லாததை நினைத்து பரிதவிக்கின்றோம். தனிமனித ஆதிக்கத்தில் அக்கட்சி அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அதன் தலைவருக்குரிய சர்வ சக்திகளும் அவரை ஒரு சர்வாதிகாரியாக இன்று மாற்றியுள்ளது. மறைமுகமாகவோ, நேரடியாகவோ நாங்களும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கின்றோம் என்ற வேதனை ஒரு புறமிருந்தாலும், மு.காவின் உயர்பீடம் தனிமனிதனுக்கு ஏகபோக உரிமையை வழங்கும் போது, அதனை எதிர்க்கும் திராணியை பலதடவை இறைவன் எனக்குத் தந்தான் என்பதில் ஒரு மனத்திருப்தி காண்கின்றேன்.

நாங்கள் கடந்த காலங்களில் மு.காவின் மீது நம்பிக்கை இழந்திருந்தோம். எனினும், அக்கட்சியை விட்டு வெளியேறும் தைரியம் எமக்கு இருக்கவில்லை. ஆனால், ரிஷாட் பதியுதீன் என்ற அரசியல் வாதியில் இருக்கின்ற அடையாளங்கள், அவரில் இருக்கும் பண்புகள் மற்றும் குணாதிசயங்கள் அவரிடம் நாங்கள் கண்ட பழக்கவழக்கங்கள் காரணமாகவே, எங்களுக்கு அவர் தலைமையிலான கட்சியில் நம்பிக்கை கொள்ளவைத்தது. நாங்கள் உள்ளத்தினால் உருகிக் கேட்ட பிரார்த்தனைகளுக்கு இறைவன் புது வழியை காட்டியுள்ளான். அதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இப்போது இந்த இரண்டாம் கட்ட தர்ம யுத்தத்தில் கால் பதித்துள்ளோம். இந்த யுத்தத்தை நாங்கள் புனித யுத்தமாகவே கருதுகின்றோம். காசு, பணம், பதவி என்பவைகள் ஓர் அரசியல்வாதியை தாக்கத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்ற நிலைகளுக்கு அப்பால், நாம் இந்த சமூக விடுதலைப் போராட்டத்தில் இதய சுத்தியுடன் குதித்துள்ளோம்.
மாதலைவர் மர்ஹூம் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய போது, கண்ட கனவில் ஒன்று மட்டுமே சரியாக நிறைவேறியிருக்கின்றது. முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாதத்திலோ, ஆயுதக் குழுக்களுடனோ இணையக் கூடாது என்பதில் அவர் கண்ட வெற்றி கண்டுள்ளது. அதனாலேதான் நாங்களும் நடுநிலையாளர்களாக, அரசியல்வாதிகளாக, சமூகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக உருவாக்கப்பட்டுளோம் என்று ஜவாத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் (வி.சி), அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி), ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. தலைமை வேட்பாளர்களான ஏ.எம்.எம்.நௌஷாட், எம்.ஏ.அன்சில், தாஹிர் உட்பட தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் மௌலவி ஹனீபா மதனி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமீர், முன்னாள் நீதியரசர்களான ஜெமீல், கபூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *