இனங்களுக்கிடையிலான பதட்டத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு பொலிஸாரினால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதன் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் தீவிர முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரம் மற்றும் தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த ஞானசார தேரர் கடந்த ஜூன் மாதம் 21ம் திகதி காலை கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
பொலிசார் வழக்கின் முறைப்பாட்டை வாபஸ் பெற்று இலகுவான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிந்த காரணத்தினால் சில நிமிடங்களில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கின் விசாரணை நேற்று கொழும்பு மஜிஸ்திரேட் லால் பண்டார முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக பொலிசார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
அவருக்கு எதிரான மதநிந்தனை, இனவாதத் தாக்குதல்கள் உள்ளிட்ட சகல குற்றச்சாட்டுகளையும் பொலிசார் வாபஸ் பெற்றுள்ளனர்.
இதன் பின்னணி என்னவென்று அரசியல் அவதானிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.