Breaking
Fri. May 10th, 2024

(சுஐப் எம்.காசிம்)   

அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள எந்தவோர் அரசியல் மாற்றத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும், அதனைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்கப் போவதில்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கெகுனுகொல்ல, மடலஸ்ஸ, அல் இக்ரா பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பிலே மாற்றங்களைக் கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு தமிழ்க் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஐம்பது வருடகாலமாக ஜனநாயக ரீதியிலும், முப்பது வருடகாலமாக ஆயுதம் தாங்கியும் தமது உரிமைகளுக்காக போராடிய மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு, செவிசாய்க்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம்,  அரசியலமைப்புச் சபை ஒன்றை உருவாக்கி, யாப்பைத் திருத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பெரும்பான்மைக் காட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேர்தல் முறை மாற்றாத்தை கொண்டுவர வேண்டுமென விடாப்பிடியாக நிற்கின்றது. தனித்து ஆட்சியமைக்க இதுவே சிறந்த வழி என்ற, அடிமனது சிந்தனையுடன் அந்தக் கட்சி தேர்தல் முறை மாற்றம் வரவேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றது.

ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைத்து, பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் அரசியலமைப்புச் சீர்திருத்தம் ஒன்றுக்காக ஐக்கிய தேசியக் கட்சி வரிந்துகட்டிக் கொண்டு நிற்கின்றது.

இந்த மூன்று கட்சிகளின் கோரிக்கைகளுக்கும் மத்தியிலே, முஸ்லிம் சமூகம் தாங்கள் என்ன செய்வது? என்று தெரியாது திக்கித்திணறி   நிற்கின்றது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஆட்சியின் துணையுடன், இனவாதிகளின் கொடூரத்தை தாங்க முடியாதே, நாம் ஆட்சி மாற்றத்தை விரும்பினோம். இந்த ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நூற்றுக்கு நூறு சதவீதம் பங்களித்தவர்கள் நாங்கள். எனினும், புதிய தேர்தல் முறை மாற்றங்கள் எமது பிரதிநிதித்துவை பாதிக்கும் என்று நாம் அஞ்சுகின்றோம். புதிய மாற்றங்களினால் நமது சமூகம் அள்ளுண்டுபோகக் கூடிய ஆபத்தே பெருமளவு காணப்படுகின்றது. எனவே, இந்த விடயங்களில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

முஸ்லிம் சமூகம் ஒரு நடுநிலைப் போக்குடைய ஒன்று. தமிழர்களுக்கோ,சிங்களவர்களுக்கோ அநியாயம் இழைக்காது அவர்களுடன் ஒற்றிசைந்து, ஒருமித்து வாழ்ந்து வந்தவர்கள், வருபவர்கள். எங்களது முன்னோடித் தலைவர்களான டி.பி.ஜாயா, சேர் ராசிக் பரீத் போன்றவர்கள் சிறந்த அரசியல் வழிகாட்டல்களையே எமக்கு விட்டுச் சென்றனர்.

தென்னிலங்கையில் அரசுத் தலைமைகளுக்கு எதிராக கிளர்சிகள் ஏற்பட்ட போதெல்லாம், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் அவற்றை ஆதரிக்கவில்லை. அதேபோன்று, சிங்கள இளைஞர்களுடன் சேர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்கவுமில்லை. அதே போன்று வடக்கு, கிழக்கில் பிரிவினைக்காக ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களுடன் இணைந்து, எமது இளைஞர்கள் ஆயுதம் தூக்கவுமில்லை.

அது மட்டுமின்றி பிரிவினையையும், பிளவினையையும் விரும்பாத பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மனப்போக்குக்கு மாற்றமான முறையில், செயற்படுவதற்கு முஸ்லிம் சமூகம் விரும்பவுமில்லை. அத்துடன் தென்னிலங்கையில் வாழும் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களின் நிம்மதியைக் குலைக்கக் கூடாது, என்ற காரணத்துக்காகவும் பிரிவினைப் போராட்டங்களுக்கு வடக்கு,கிழக்கு முஸ்லிம் சமூகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனாலேயே ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்களுக்கும், அடக்கு முறைகளுக்கும்,  நெறுக்குவாரங்களும் நாங்கள் ஆற்பட்டோம். எமது சகோதரர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் ஜனாசாக்கள் கூட இன்னும் கிடைக்காத நிலையில் அவர்கள் உயிருடன் இருக்கமாட்டர்களா? என்ற ஏக்கம் இறந்தவர்களின் உறவினர்களுக்கு இன்னும் இருக்கின்றது.

இதன் உச்சக்கட்டமாக ஒரே மொழி பேசிய வட,புல முஸ்லிம்கள் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் ஒரே இரவில் அடித்து விரட்டப்பட்டனர். தாய்நாட்டுக்கு விசுவாசமாக இருந்ததன் விளைவே இத்தனைக் கொடுமைகள். குற்றமிழைக்காது நாம் தண்டிக்கப்பட்டிருக்கின்றோம்.

இத்தனைக்கும் மத்தியில் சிங்கள இனவாதிகளின் கொடுமை எம்மை இன்னும் துரத்திக்கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தையும், உயிரிலும் மேலான குர்ஆனைப் பலித்தும், பள்ளிவாயல்களை உடைத்தும் இனவாதிகள் தமது கை வரிசையை காட்டியபோது பார்வையாளராக இருந்த கடந்த அரசை தூக்கி எறிந்தோம்.

இந்த அரசு நாம் ஆசைப்பட்டு உருவாக்கியது. எனவே, எமக்குப் பாதகமான விடயங்களை கொண்டு வந்தால் அல்லது அதற்கு அனுமதித்தால் நாம் பொருத்துக்கொண்டு இருப்போமென்று எவரும் எண்ணிவிடக் கூடாது. தற்போது நல்லது நடப்பதாக நாம் நினைத்துக்கொண்டுள்ளபோதும் நமக்குத் தெரியாமல் ஆபத்துக்கள் சூழ்ந்துகொண்டிருக்கின்றன.

அரசியல் கட்சி ஒன்றின் தலைவனாக நான் இருப்பதனால்தான் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்க முடிகின்றது. அதேபோன்றுதான் சகோதரர் ரவூப் ஹக்கீமும் அங்கம் வகிக்கின்றார். அநியாயம் நடந்தால் நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

நியாயத்தைப் பேசினால், உரிமைகளைப் பற்றிக் கேட்டால், சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்காக குரல் கொடுத்தால் இனவாதி என்று முத்திரைக்குத்தி எமது செயற்பாட்டை முடக்குவதற்கு ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது. அரசியலில் இருந்து ஓரம்கட்டச் செய்ய வேண்டும். அல்லது இல்லாமலாக்க வேண்டும் என்ற முயற்சிகள் தற்போது அரங்கேற்றப்படுகின்ற.

மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலிருந்து இன்று வரை இந்த இழிநிலை நீடித்துக்கொண்டிருக்கின்றது. எமது  குரல்வளையை நசுக்குவதிலும் சிறைக் கூடங்களுக்கு எம்மை அனுப்புவதிலும், திரை மறைவில் எத்தனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறைவன் எமது பக்கமே என்றும் இருக்கின்றான். என்றும் அமைச்சர் கூறினார்.unnamed (2)இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி மற்றும் அக்கட்சியின் கல்விப் பிரிவுப் பணிப்பாளர் டாக்டர் சாபி, சதொச பிரதித் தலைவர் நசீர், குருநாகல் மாவட்ட இணைப்பாளர் அசார்டீன் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.     

unnamed (1)

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *