:
நாரஹேன்பிட்டி, Milco தொழிற்சாலைச் செயற்பாடுகளை இன்று நான் சென்று கண்காணித்ததன் மேலதிக விபரங்கள் –
திரவப் பாலைக் கொள்வனவு செய்யும் போது, மாவட்ட மட்டத்திலான விலை வேறுபாடுகள் தொடர்பில் நான் இதன்போது விசேட அவதானம் செலுத்தினேன்.
பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலைக் கொள்வனவு செய்து நிறுவனத்துக்குக் கொண்டு வருவதில் இடைத்தரகர்களால் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக –
முழு செயற்பாடுகளும் முழுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதனையும் பால் பண்ணையாளர்களுக்குச் சரியான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதனையும் நான் இன்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.
பால் பண்ணையாளர்களின் தொழில்களை மேம்படுத்தி, திரவப் பால் பாவனையை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்கிலேயே மேற்படி பணிப்புரைகளை நான் விடுத்தேன்.
நுகர்வோருக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், தற்போதுள்ள விலைகளில் மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் அதிகாரிகளிடம் குறிப்பிட்டேன்.
தொழிற்சாலை வளாகத்துக்கு இன்று நான் சென்ற போது – திரவப் பாலைச் சேகரித்தல் முதல் பால் பொருட்களை உற்பத்தி செய்தல் வரையான அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமையாகக் கண்காணித்தேன்.
தேசிய பால் சபையானது, 1956இல் நிறுவப்பட்ட நிலையில், 1986இல் Milco பிரைவேட் லிமிடெட் ஆக அது மாற்றம் செய்யப்பட்டது.
முதற்கட்டமாகப் பால் உற்பத்திக்கு மட்டுப்படுத்தப்பட்டிருத்த மில்கோ நிறுவனம், தற்போது பால் மற்றும் பால்சார் பொருட்களான – பதப்படுத்தப்பட்ட தயிர் (yogurt), குளிர்களி (ice cream), வெண்ணெய், நெய், தயிர் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்றவற்றை உள்ளடக்கிய உற்பத்திகளைச் செய்யும் விதமாகத் தன்னை விரிவுபடுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு உரித்தான – அம்பேவெல, திகன, பொலன்னறுவ மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய நான்கு தொழிற்சாலைகளில், சுமார் 1,500 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவற்றின் தினசரி பால் கொள்ளளவு ஏழு இலட்சம் லீற்றர்களாக உள்ளதோடு, தற்போதைய பால் சேகரிப்பு 120,000 லீற்றர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காகவே இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நிறுவனத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டென்மார்க் அரசாங்கத்தின் 600 மில்லியன் யூரோ முதலீட்டில், படல்கம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பால் தொழிற்சாலையின் செயற்பாடுகள், இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் (NLDB) கீழ் பயன்படுத்தப்படாத காணிகளை மேய்ச்சல் தரவைகளாகப் பயன்படுத்துமாறும் திகன, அம்பேவெல, பொலன்னறுவ மற்றும் படல்கம ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரதான கேந்திர நிலையமாக நாரஹேன்பிட்டி மில்கோ தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் இன்று நான் பணிப்புரை விடுத்தேன்.
ஒரு கிலோகிராம் பால்மா உற்பத்திக்கு, 8.5 லீற்றர் திரவப் பால் தேவைப்படுகிறது. இதில் 45 கோப்பை பால் மட்டுமே தயாரிக்க முடியும்.
இருப்பினும், 2.5 லீட்டர் திரவப் பாலில் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்பதனை அதிகாரிகள் இன்று விளக்கினர்.
இந்த நிலைமையை உணர்ந்து, திரவப் பாலை அருந்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்பதை விவசாய அமைச்சருக்கு நான் இன்று எடுத்துரைத்தேன்.
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் டீ. பீ. ஹேரத், எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா மற்றும் பொது முகாமையாளர் சுதத் முனசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் என்னோடு இணைந்திருந்தனர்.