Breaking
Mon. May 6th, 2024

ரிதிமலியத்த யக்கஹவுல்பொத்த,  பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டு அவரின் சடலத்தை மலசலகூட குழியில் மறைத்து வைத்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் மற்றும் மகன் ஆகியோரே நேற்று (29) ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.சோமாவதி என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் காணாமல் போனதாகவும், அது தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்து பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.சி.வீரகோனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் பிரகாரம் ரிதிமலியத்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கொலையை செய்த பிரதான சந்தேக நபரான கணவர் பல தடவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தானும் தனது மகனும் இணைந்து இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியைக் கொன்று சடலத்தை மலசலகூட குழியில் புதைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரிதிமலியத்த, யகஹவுல்பொத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 72 மற்றும் 26 வயதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வசித்து வந்த குறித்த பெண், 4, 5 மாதங்களுக்கு ஒருமுறையே வீட்டிற்கு வருகை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்த பெண் மீண்டும் வீட்டை விட்டு வெளியேற கணவரிடம் ஐநூறு ரூபாய் கேட்டு தகராறு செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அயல் வீட்டில் வசிக்கும்  மகன் அங்கு வந்த போது தந்தை மகனை திட்டி வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.

பின்னர் தந்தையே மகனின் வீட்டுக்குச் சென்று தாய் இறந்துவிட்டதாகக் கூறிய நிலையில், இறந்த பெண்ணின் சடலத்தை வீட்டின் அருகே புதிதாக தோண்டப்பட்ட மலசலகூட குழியில் போட்டு மூடியிருப்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கொலையைச் செய்த சந்தேக நபர் தனது மனைவி வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் பிரதேசவாசிகளிடம் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் தனது மனைவி இறந்துவிட்டதாக கிராம அலுவலரிடம் கூறி, அது பற்றிய தகவலையும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் நேற்று (29) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சடலத்தை தோண்டி எடுப்பதற்காக சந்தேகநபர்களை நாளை (31) சம்பவ இடத்திற்கு அழைத்து வருமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரிதிமலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

A B

By A B

Related Post