Breaking
Sun. Nov 24th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் குறிவைத்து இந்த அரசாங்கம், அவரை பழிவாங்கிக்கொண்டு இருக்கின்றது என மன்னார் பிரதேச சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தெரிவித்தார்.

மன்னாரரில் இன்று (16) காலை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

“அரசியல் பழிவாங்கல் என்றால் என்னவென்று கடந்த காலம் எல்லோறுக்கும் தெரியும். 52 நாட்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும், மூன்று மாதம் அவர்களின் அரசியலுக்கு உதவி செய்யவில்லை என்பதற்காகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை மக்கள் காங்கிரஸ் தலைவர் மீது சுமத்தி, சிறுபான்மை சமூகத்தை அடக்கியாள வேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்று அவரை கைது செய்வதற்கு தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் அறிகின்றோம்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு, ‘இடம்பெயர்ந்த மக்கள் பேரவை’ என்ற அமைப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தமது சொந்த மண்ணில் வந்து வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அந்த அமைப்பு புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களின் தலைவர்கள் ஊடாக கடிதங்களை பெற்று, குறித்த கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கி, மன்னாரிற்கு செல்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னரே, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் பணத்தை விடுவித்து தந்ததன் பின்னர் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, புத்தளம் மாவட்டத்திலிருந்து மக்களை மன்னாரிற்கு அழைத்து வந்த நிலையில, மக்கள் வாக்களிப்பை மேற்கொண்டனர்.

இதேவேளை, தேர்தல் முடிவடைந்து 6 தினங்களில் குறித்த அமைப்பு பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

ஆனால், இன்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது அரசியல் பழிவாங்கல் இடம்பெற்று வருகின்றது.

அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் அவர்களை எவ்வித குற்றமும் இன்றி, சுமார் 6 மாதங்கள் சிறையில் அடைத்து வைத்து, பல்வேறு முறைப்பாடுகளை பதிவு செய்தார்கள்.

எனினும் றியாஜ் பதியுதீன் மீது எவ்வித குற்றமும் இல்லை என்று அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அரசியல் பழிவாங்கல் காரணமாக, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நூறு பேர் கையெழுத்திட்டு, மீண்டும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய போது, முன்னாள் அமைச்சர் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவர் பிழை செய்திருந்தால் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், அவர் எந்த ஒரு பிழையும் செய்யவில்லை. அவரை நிம்மதியாக மக்கள் பணியை மேற்கொள்ள விடுங்கள். அவர், இடம்பெயர்ந்த மக்களை சட்ட ரீதியாகவே வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதனை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன்போது, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் சந்தியோகு, நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *