போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் மக்களைவிட முஸ்லிம் மக்களே அரசினால் அதிகமாக குறிவைக்கப்பட்டனர். இனப்பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், இஸ்லாம் மதத்துக்கு எதிரான பிரசாரம் தீவிரமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஒருவரும் மறுக்கமுடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உரையாற்றிய பல உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பம் தொடர்பாகவும், அதனை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தொடர்பாகவும், அவ்வாணைக்குழு விசாரணைகளை நடத்திய முறை தொடரபாகவும் பல்வேறு விமர்சனக் கருத்துகளை வெளியிட்டனர்.
ஆனால் இங்கு உரையாற்றிய யாரும் இக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு பின்னரும், அதற்கு முன்னரும்கூட இந்நாட்டில் உருவாகிவரும் புதிய கலாசாரம் பற்றி குறிப்பிடவில்லை. எத்தகைய பின்னணியில் இச்சம்பம் நடைபெற்றது என்பதனை ஆராயத் தவறிவிட்டனர்.
இவ்வறிக்கையானது நம்பகத்தன்மையுடையதாக இருந்தாற்கூட அர்த்தமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கும்.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்ட காலத்தில் முஸ்லிம் சமூகம் அரசாங்கத்திற்கு உதவியதாக எனக்கு முன்னர் உரையாற்றி உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கூறினார். அது சரியானது.
அது மட்டுமல்ல, முஸ்லிம் மக்களின் அரசியற் தலைமைகளும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசுடன் இணைந்திருந்தன. தமிழ்பேசும் மக்களான முஸ்லிம்கள் அரசின் பக்கம் நின்றமையையிட்டு தமிழ் மக்கள் விசனமடைந்திருந்தனர். தமிழ் மக்கள்
திட்டமிட்டு ஒடுக்கப்படுவது தெரிந்துகொண்டும் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொண்டது தமிழ் மக்களை ஆத்திரப்படுத்தியது. அந்தளவிற்கு முஸ்லிம் மக்களின் அரசியற் தலைமைகள் அரசிற்கு விசுவாசமாக நடந்துகொண்டது. அதேபோன்ற விசுவாசத்துடன் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புலனாய்வுப்பிரிவுடன் இணைந்து பணியாற்றினார்கள்.
ஆனால் போர்முடிவுக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழ் மக்களைக் காட்டிலும் முஸ்லிம் மக்களே அரசினால் குறிவைக்கப்பட்டனர்.
அரசுக்கு விசுவாசமாகவிருந்த ஒரு சமூகத்தை குறிவைத்து, பாசிசவாத கருத்துகளை வெளியிடும்போது, அவர்களை வேண்டத்தகாதவர்களாக நடத்தும்போது, அச்சமூகம் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்க முடியாது.
சிங்கள பௌத்த தேசியவாதம் இனவாதமாக மாறிவிட்டது. இவ்வினவாதமானது திட்டமிட்டு சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களை குறிவைத்துச் செயற்படுகிறது.
உங்களுடைய அடையாளங்களைப் பேணுவதற்காகச் செய்யும் காரியங்களைச் செய்யுங்கள். சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டில் மட்டுமே இருக்கிறாரகள். அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டுமானால் அதனைச் செய்யுங்கள். ஆனால் இந்த நாடு தனித்து சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற அடிப்படையில் செயற்படுவீர்களேயானால் மற்றைய சமூகத்தினர் தீவிரவாதத்தை நோக்கிச் செல்வதனைத் தடுக்கமுடியாது.