தேர்தல் ஆணைக்குழுவின் சுகாதாரத்துறையினரின் கட்டுப்பாடுகளுடன் இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குப்பலத்தை சுகாதாரத்துறையினரின் கோரிக்கைக்கு அமைவாகவும், நடைமுறைகளை பின்பற்றியும் மக்கள் பயன்படுத்த வேண்டும் அவ்வாறு பயன்படுத்த தவறும் பட்சத்தில் மக்களுக்கும் சேவை செய்யக்கூடியவர்கள் நாடாளுமன்றம் வரமுடியாமல் சென்றுவிடும் சூழ்நிலைகளும் காணப்படும் . எனவே உங்கள் வாக்குப்பலத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே . காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார் .
வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொவிட் 19 கொரோனா நோயைக்கட்டுப்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபச்ச , பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்த ஆட்சியில் இதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன.
அதேபோல இந்த நோய் எமது நாட்டில் பரவும் நடவடிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .
அதேபோல இந்நோயினால் சுகயீனமடைந்தவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மிகவும் விரைவாக குணமடைந்துள்ளனர் . இந்த அரசாங்கத்தினுடைய திறமையான செயற்பாடுகள் தான் இவ்வளவிற்கு கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
மக்களும் இந்நடவடிக்கைக்கு பூரணமாக ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.
சுகாதாரத்துறையினருக்கும் இவ்விடத்தில் நாங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டும் . எவ்விதமான அச்சமுமின்றி மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்நோயிலிருந்த அவர்களை மீட்பதுடன், மீண்டும் இந்நோய்கள் மக்களுக்கு பரவாமல் இருப்பதற்கும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டில் மிகவும் முக்கியமான ஒரு தேர்தலை நாங்கள் சந்திக்க இருக்கின்றோம். ஜனாதிபதி மிகவும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மக்கள் எதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்தார்களோ அந்த நம்பிக்கையும், வாக்குறுதியும் நிறைவேற்றுவதற்காக விரைவாக நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு அந்த பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்தும் போது கொரோனா ஏற்பட்டுள்ளதால் காலதாமதமடைந்தது.
இதை சில எதிர்க்கட்சியினர் தேர்தலை பிற்போடுவோம். தேர்தல் தற்போது வைக்க முடியாது தேர்தலைப்பிற்போடுவோம் என்று இந்த அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நல் அபிப்பிராயம் பாரிய வெற்றியை கொடுத்துவிடும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது இப்பகுதியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து அவரது கரத்தினை பலப்படுத்துவதற்காக, எமது வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து, எம்மை நாடாளுமன்றம் அனுப்பி அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கலாம் என எமது மக்கள் நினைக்கின்றமையால் நாம் நிச்சயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவோம்.
இதேவேளை தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து நாட்டின் அபிவிருத்திக்காக உண்மையாக செயற்பட்டு, நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கினால் அரசின் பங்காளிகளாக்குவது தொடர்பாக உயர்மட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.