Breaking
Fri. Apr 19th, 2024

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சிங்களப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் எனவும் அவர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இது தாமதமின்றி நிறுவப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் உருவாக்கியுள்ளார்.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையிலான அந்தச் செயலணியில் பௌத்த மதம் சார்ந்த பிக்குகள், படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். ஒரு தமிழரோ, ஒரு முஸ்லிமோ இல்லாமல் இந்தச் செயலணியை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார்.


இதற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும், வெளிநாட்டு – உள்நாட்டு சிவில் அமைப்பினரும் கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில், கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் என்று கிழக்குக்கான ஜனாதிபதி விசேட செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


வடக்கில் நாக விகாரை மற்றும் சில பகுதிகளிலும் தொல்பொருள் இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன எனவும், ஆகவே அனுராதபுரம் தூபராம விகாரை தொடக்கம் நாக விகாரை வரையில் சகல பகுதிகளையும் பாதுகாத்து நாட்டின் பாரம்பரியத்தைத் தக்கவைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இவரின் கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் என்ற எல்லாவல மேதானந்த தேரரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.


வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்தர்களின் தொல்பொருள் இடங்கள் பயங்கரவாதிகளின் காலத்தில் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. சில இடங்கள் அழிக்கப்பட்டன.


இவற்றை நாம் அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாகாணங்களும் பௌத்த – சிங்களவர்களுக்குச் சொந்தமானவை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *