இலங்கையில் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள வன்செயல்கள் குறித்து இந்தியாவை சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகு தாவூத் நேரில் சென்று விபரமாக தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் இதற்காக தமிழ்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டு சென்ற இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் முஹைதீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா ஆகியோரை அவர்களின் அலுவலகங்களில் சந்தித்து பேசினார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளை போல முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத அழிப்பு நடவடிக்கைகளை சிங்கள பௌத்த பேரினவாதிகள் முடுக்கி விட்டு உள்ளனர் என்றும் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறிப்பாக 2013 ஆம் ஆண்டில் இருந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத அழிப்பு நடவடிக்கைகள் அதிதீவிரம் அடைந்து விட்டன என்றும் விளக்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் முஹைதீனுடன் பேசியபோது இலங்கையில் முடுக்கி விடப்பட்டு உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து தேசிய கட்சி என்கிற வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்திய பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பதோடு, அதனால் முடிகின்ற அனைத்து வழி முறைகள், பொறி முறைகள் ஆகியன மூலமாக இலங்கை அரசாங்கம் மீது உச்ச பட்ச அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கோரினார். இவரின் கருத்துக்களை மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்த பேராசிரியர் காதர் முஹைதீன் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் உறவுகள் எதிர்கொள்ள நேர்ந்து உள்ள பேரவலத்தை போக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் என்று உறுதிமொழி வழங்கியதுடன் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக முடுக்கி விடப்பட்டு உள்ள திட்டமிடப்பட்ட மத அழிப்பு நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்ற உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறுப்பினர்களான இ. ரி. பஷீர், குஞ்ஞானிக்குட்டி ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாருல்லாவுடன் பஷீர் சேகு தாவூத் பேசியபோது தி. மு. க, அ. தி. மு. க ஆகியன அடங்கலாக மாநில கட்சிகளுக்கு இலங்கையில் சிறுபான்மை மக்கள் என்கிற வகையில் முஸ்லிம் உறவுகள் எதிர்கொள்ள நேர்ந்து உள்ள பேரவல நிலையை தெரியப்படுத்தி, அவர்களையும் இணைத்து கொண்டு இலங்கை அரசாங்கம் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்ற பாரிய அமுக்க குழுவாக செயற்பட வேண்டும் என்று கோரினார். இவரின் கருத்துகளை மிக கவனமாக செவிமடுத்த பேராசிரியர் ஜவாருல்லா இலங்கையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ள மத அழிப்பு நடவடிக்கைகளுடன் ஆர். எஸ். எஸ் மத வெறி அமைப்பினருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று அவருடைய அவதானத்தை தெரிவித்ததுடன் இலங்கையில் முஸ்லிம் உறவுகள் எதிர்கொள்ள நேர்ந்து உள்ள பேரவலத்தை முடிவுக்கு கொண்டு வர உச்ச பட்ச நடவடிக்கைகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் மேற்கொள்ளும் என்று உறுதிமொழி வழங்கினார்.
தமிழ்நாடு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய பஷீர் சேகு தாவூத் ஊடகங்களுக்கு கூறியவை வருமாறு:
- அழிவுகள்,அவலங்கள் இடம்பெற்று முடிந்து கையறுந்த நிலையிலேயே முஸ்லிம் தலைவர்கள் அவை குறித்து பேசுவது வழக்கமாக உள்ளது. இலங்கை சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளில் அயல் நாடான இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுக்கு அடங்காதனவாக பிரவாகம் எடுக்க முன்னர் இந்தியாவுக்கு சென்று அங்குள்ள தேசிய, மாநில முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி உள்ளோம். வருகின்ற வாரங்களில் முஸ்லிம் லீக் எம். பிகள் இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை கண்டித்து உரையாற்றுவார்கள் என்று விளங்குகின்றது. அதே போல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் முன்னெடுப்புகள் நம்பிக்கை ஊட்டுவனவாக உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகின்றது.