Breaking
Sun. May 19th, 2024

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

பதினொரு இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இது சம்பந்தமாக எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உடனடியாக வாய் திறக்கவில்லை.  

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு தௌஹீத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், தௌஹீத் என்ற சொற் பதத்துடன் தொடர்புபட்ட அனைத்து தௌஹீத் ஜமாஅத் அமைப்புக்களையும் அரசாங்கம் தடைவிதித்ததுடன் அவர்களது சொத்துக்களை முடக்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை வழிநடாத்திய பிரதான சூத்திரதாரிகளாக நௌபர் மௌலவி அவர்களையும், ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரினதும் பெயர்களை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை பயங்கரவாதியாக காண்பித்த அரசாங்கமானது அவர் தலைமைதாங்கும் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்யவில்லை.  

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் ஏதோ ஒரு தௌஹீத் இயக்கம் என்பதற்காக அனைத்து தௌஹீத் இயக்கங்களையும் தடை செய்வது நியாயம் என்றால், பயங்கரவாதியாக கான்பிக்கப்பட்ட ஹஜ்ஜுல் அக்பர் தலைமை வகிக்கின்ற ஜமாஅத்தே இஸ்லாமியையும் தடை செய்திருக்க வேண்டுமே !

ஏன் அவ்வாறு தடை செய்யவில்லை என்பதுதான் இன்றைய கேள்வியாகும். அதற்காக அந்த அமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல.

பாகிஸ்தான், பங்காளதேஸ் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பிரிந்துசெல்வதற்கு முன்பு பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது 1941 இல் செய்யித் அபுல் அலா மௌதூதி (Sayyid Abul A’la Maududi) அவர்களினால் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் இயக்கமாகும்.

இந்த இயக்கம் பாகிஸ்தானில் ஓர் அரசியல் கட்சியாகவும் மற்றும் பாகிஸ்தானின் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்ற பழமைவாய்ந்த கட்சியாகவும் காணப்படுகின்றது.

இஹ்வான்களான எஹிப்திய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புடன் நெருங்கிய தொடர்பினை கொண்ட இவ்வியக்கமானது, உலகின் அனைத்து நாடுகளிலும் காணப்பட்டாலும், சில நாடுகளில் வேறு பெயர்களின் இயங்குகின்றது.

இஸ்லாமிய சரியா சட்டத்தின் அடிப்படையில் ஆட்சியமைத்தல், இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்குதல் என்ற பின்னணி அரசியல் கொள்கையுடையதுதான் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கமாகும். இது இலங்கையில் 1954 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உற்பட வெளிநாடுகளில் உள்ள ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கங்களுடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எந்தவித தொடர்புகளும் இல்லையென்று கூறிக்கொண்டாலும், இதனை நம்புகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை.

இவ்வாறான பின்னணியை கொண்டுள்ள ஜமாஅத்தே இஸ்லாமியை இலங்கையில் தடை செய்கின்றபோது பாகிஸ்தான், பங்காளதேஸ் போன்ற நாடுகளுடன் ராஜதந்திர சிக்கல்கள் ஏற்படலாம் என்று அரசாங்கம் ஊகித்திருக்கலாம்.  

சீனாவின் முத்துமாலை திட்டத்தில் உள்ளடங்குகின்ற நாடுகளான பாகிஸ்தான், பங்காளதேஸ் போன்ற நாடுகளுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை பலப்படுத்திக்கொண்டு வருகின்ற நிலையில், இந்நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தை இலங்கையில் தடை செய்வதற்கு அரசாங்கம் துணியவில்லை.

எனவே பதினொரு தீவிரவாத இயக்கங்களை தடை செய்துள்ளதாக விளம்பரப்படுத்தி அதனை தென்னிலங்கை அரசியலுக்கு பயன்படுத்தினாலும், அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாக காயை நகர்த்துகின்றது என்பது ஜமாஅத்தே இஸ்லாமியை தடை செய்யாததிலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *