பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக ஆர்.ஆர்.ரி. அமைப்பு நேற்று பொலிஸ் மா அதிபரிடம் மூன்று முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளது.
மூன்று முறைப்பாடுகளும் பொலிஸ் மா அதிபரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் விரைவில் இம் முறைப்பாடுகள் தொடர்பில் ஞானசார தேரர் விசாரணைக்குட்படுத்தப்படுவார் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையை உறுதி செய்து கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் பௌத்த கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த 21 ஆம் திகதி அங்கு ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட ஞானசார தேரர் அங்கு ஆற்றிய உரை தொடர்பாகவே இந்த மூன்று முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மஹியங்கனையில் ஞானசார தேரர் ஆற்றிய உரை நீதியை நிலை நாட்டும் பொலிஸாருக்கு எதிராக சவால் விட்டும் அவர்களது கடமையைச் செய்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என ஒரு முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முறைப்பாட்டில் ஞானசார தேரர் மஹியங்கனையில் பேசிய பேச்சில் அளுத்கம சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார். பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மஹியங்கனையிலும் அளுத்கமையில் ஏற்பட்டது போன்ற கலவரம் ஏற்படும் என எதிர்வு கூறியிருக்கிறார்.
இது மிகவும் ஆபத்தான பேச்சாகும். அங்குள்ள மக்களை அளுத்கம போன்ற கலவரத்துக்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.
அத்தோடு அளுத்கமையில் இடம்பெற்ற கலவரங்களுக்கும் ஞானசார தேரரின் உணர்ச்சியூட்டும் பேச்சே காரணம் என களுத்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறைப்பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஞானசார தேரரின் உரை அடங்கிய ஒலி நாடாவை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வேண்டியதை அடுத்து தேரர் ஊடகங்களிலும் வெளியிட்ட கருத்துகள் இன முறுகலைத் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன.
தனியார் தொலைக்காட்சி சேவைக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியொன்றில் அல்லாஹ்வையும் நபிகள் நாயகத்தையும் குறிப்பிட்டு சவால் விட்டிருக்கிறார். அடித்துக் கொள்வதென்றால் அதற்கு நானும் தயார் என்று கூறியிருக்கிறார். பௌத்த நாட்டில் தனது பேச்சை எவராலும் தடை செய்ய முடியாதென தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறான இவரது பேச்சுக்கள் நல்லிணக்கத்துக்கு பாதகமாக இருக்கின்றன. இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக அமைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று மஹியங்கனை பன்சலையில் சமய பிரசங்கம் நிகழ்த்திய பௌத்த குரு ஒருவர் முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துகளைத் தெரிவித்ததையடுத்து முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பௌத்த கொடியை எரித்ததையடுத்தே அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் பேரில் 8 முஸ்லிம் இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதன் சந்தேகத்தின் பேரில் 2 பெரும்பான்மை இனத்தவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.