எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளைய தினம் இடம்பெற உள்ள நிலையில் தேர்தல்கள் செயலகத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த பகுதியில் விசேட வாகன போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
விசேட வாகன போக்குவரத்து திட்டமானது நாளை காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பாதுகாப்பு கடமைகளுக்காக 1200 பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் புலனாய்வு துறையினரும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமை செயலகம் குறிப்பிட்டது.
விசேட வாகன போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மேலும் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் செய்ய வரும் அணைத்து வேட்பாளர்களது ஆதரவாளர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நாளைய தினம் வாகன ஊர்வலம், தனிப்பட்ட முறையில் ஊர்வலம் செல்லல், அரசியல்வாதிகளின் கட்டவுட் பேணர் போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் விதிமுறைகளை மீறுபவர்கள் தொடர்பில் காணொளிகளை பதிவு செய்த பின்னர் அவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் காரணமாக ஏற்படும் வாகன நெறிசலை கட்டுப்படுத்த சாரதிகள் மாற்று பாதைகளை பாவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.