- பொருளாதார மத்திய நிலையங்களைத் தொடர்ந்து திறந்து வைக்க நடவடிக்கை…
- பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து விசேட அவதானம்…
- நாடு திறக்கப்பட்டதன் பின்னர் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதாரத்துறை பரிந்துரை…
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 21 அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பம் ஊடான கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.
தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டது.
இரண்டாம் அலகுத் தடுப்பூசிக்காகத் தேவைப்படும் ஸ்புட்னிக் ( Sputnik ) தடுப்பூசிகள் ஒரு இலட்சத்து இருபதாயிரம்(120,000) அடுத்த வாரத்துக்குள் கிடைக்கவுள்ளதாக கொவிட் ஒழிப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் பெருமளவானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் இவர்களின் அதிகமானோர் முதல் அலகுத் தடுப்பூசியைக்கூட ஏற்றாதவர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதனால் நடமாடும் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வருகை தராத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தடுப்பூசி ஏற்றுவதிலிருந்து பின்வாங்கும் நபர்களை தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் ஊக்குவிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தங்களுடைய உற்பத்திகளைச் சந்தைக்கு விநியோகிக்க முடியாமல் மரக்கறி வியாபாரிகள் பெரும் அசௌகரியத்துக்கு ஆளாகி உள்ளனர். அதனால் நாட்டிலுள்ள அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களையும் தொடர்ந்து திறந்து வைப்பது தொடர்பிலும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாமையால் சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கான முதல்நிலைக் கல்வியும் அவ்வாறான மாணவர்களுக்கு குழந்தைப் பருவக் கல்வியும் இழக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
100 மாணவர்களிலும் குறைவானோர் காணப்படும் 3000க்கும் அதிகமான பாடசாலைகள் கிராமங்களில் வியாபித்திருக்கின்றன. அதனால் அவ்வாறான பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் காணப்படும் இயலுமை தொடர்பில் உடனடிப் பரிந்துரைகளை முன்வைக்கும் பொறுப்பு சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்களான தொழில்நுட்பக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அழுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, ரமேஸ் பதிரண, நாமல் ராஜபக்ஸ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, நாடாளுமன்ற உறுப்பினரான மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள் மாகாண மற்றும் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்கள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.09.10