இன்றைய ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் நாங்கள் தான் உருவாக்கினோம் என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் தெரிவித்துள்ளமை
உண்மைக்கு புறம்பான தகவலாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது, முஸ்லிம்கள் தாமாகவே முடிவு செய்துதான்
வாக்களித்தார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் எந்தக் கட்சித் தலைமையையும் நம்பியிராமல் தாமாகவே முஸ்லிம்கள் முடிவெடுத்தார்கள். இதற்கு அமைச்சர் றவூப் ஹக்கீம் உரிமை கொண்டாட முடியாது.
கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்றைய ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் தாங்கள் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். இது உண்மைக்கு புறம்பான கருத்தாகும். முஸ்லிம் காங்கிரஸ் தபால் மூல
வாக்களிப்பு நடைபெறும் வரைக்கும் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கே முடிவு
செய்திருந்தது. இதனை நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.
முஸ்லிம் மக்கள் தமது துயரங்களை இல்லாமல் செய்வதற்காக ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதற்கு முடிவு செய்திருந்தார்கள். முஸ்லிம்களின் முடிவுக்கு மாற்றமாக சென்றால் தங்களது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடுமென்று பயந்து கடைசி நேரத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்கு முன் வந்த மு.கா. இப்போது
புதுக்கதை சொல்கிறது. இதனை மறந்து அவர்கள் தாமாகவே முடிவு செய்ததனைப் போன்று தேசிய
மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மட்டுமன்றி, கடந்த பொதுத் தேர்தலில் கூட முஸ்லிம்கள் யானைச் சின்னத்திற்கே வாக்களிப்பதற்கு தயாராக இருந்தார்கள். ஐ.தே.கவில் உள்ள எங்களைப் போன்றவர்களைப் பலி
கொடுத்துத்தான் அம்பாரை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தயவினால்
கிடைத்ததாகும்.
இன்று முஸ்லிம்கள் மரச் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தயாரில்லை. அவர்கள் முஸ்லிம் காங்கிரஸால் பல தடவைகள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். கட்சியின் மரச்சின்னம் மறக்கடிக்கப்பட்டுள்ளது. தங்களின் சுய அரசியலுக்காக முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் ஏமாற்று நடவடிக்கைகளின் உச்சம்தான் முக்கிய
உறுப்பினர்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
முஸ்லிம்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நினைத்துள்ளார்.
இன்று அம்பாரை மாவட்ட மக்கள் விழிப்படைந்துள்ளார்கள். கட்சியின் தேசிய மாநாட்டில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே கலந்து கொண்டார்கள். கட்சிக்குள்
காணப்படும் உட்பூசலால் அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் வெறுப்படைந்து காணப்படுகின்றார்கள். அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை ஏமாற்றுகின்றதொரு நாடகமே முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடாகும். இந்த மாநாட்டில் எந்தவொரு தீர்மானமும்
முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காக எடுக்கப்படவில்லை.
இதன் மூலமாக முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளில் எவ்வளவு சிரத்தையுடன் உள்ளார்கள் என்று தெளிவாகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.