பிரதான செய்திகள்

ஜனநாயகத்தை நிலைநாட்டும் தீர்ப்பாக அமைய வேண்டுமென பிரார்த்தியுங்கள்” ரிஷாட் பதியுதீன்

-ஊடகப்பிரிவு-

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய (13) உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமானதாக அமைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இந்த நாட்டின் ஜனாதிபதி, தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் எழுந்தமானமாக கையில் எடுத்துக்கொண்டு, மனம்போன போக்கிலே செயலாற்றி வருவதை எதிர்த்து, அந்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கோரியே ஜனநாயகத்தை நிலைநாட்ட விரும்பும் ஏனைய கட்சிகளைப் போன்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் நீதிமன்றம் சென்றது.


சிறுபான்மை சமூகத்தின் முழுமையான ஆதரவினாலும் ஒத்துழைப்பினாலும் உருவாக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதி, அதிகாரக் கதிரையில் இருந்துகொண்டு இவ்வாறான எதேச்சாதிகாரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று இனி வரும் காலங்களிலும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், கடும்போக்கு சிந்தனையுடைய, மத விரோத போக்குடையவராக இருந்தால், இவரை விட மிகவும் மோசமாக சட்டங்களை மதிக்காமல், செயலாற்ற விழைந்தால், சிறுபான்மை மக்களின் நிலை என்னவாகும்? இதைவிட படுபாதாள நிலைக்கு சிறுபான்மைச் சமூகம் தள்ளப்பட்டு விடும் எனவும் மக்கள் காங்கிரஸ் அஞ்சுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவரையோ, தனிப்பட்ட கட்சி ஒன்றினையோ பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் நீதிமன்றத்தின் உதவியை நாடவில்லை. இந்த நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பை, தமது எண்ணத்துக்கு ஏற்றாற்போல பயன்படுத்தும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை தட்டிக்கேட்டு, எதிர்காலத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவும், உயரிய அரசியலமைப்புச் சட்டம் போஷிக்கப்பட வேண்டும் என்பதற்காகவுமே உச்ச நீதிமன்றம் சென்றது.
எமது செயற்பாடு தவறானது எனக் கருதுபவர்கள் என்றோ ஒருநாள் இதன் தாற்பரியத்தை உணர்ந்துகொள்வர் என்பதில் நாம் பாரிய நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அரசியலமைப்புக்கு மாற்றமான செயற்பாடுகளை ஜனாதிபதி ஆரம்பித்த தினத்திலிருந்து இன்றுவரை, கட்சி மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும், சமூகத்தின் நிரந்தரமான விடிவை நோக்கி பயணிக்கின்றது என்பதை, மிகவும் பொறுப்புடனும் ஆணித்தரமாகவும் சிறுபான்மைக் கட்சி ஒன்றின் தலைவன் என்ற வகையில் அறியத் தருகிறேன்.

Related posts

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

wpengine

இடம்பெயந்த மக்களை மீள்குடியேற்றியதற்காக 2ஆம் மாதம் றிஷாட்டிற்கு விசாரணை

wpengine

மண் அகழ்வில் வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள்

wpengine