Breaking
Fri. Apr 19th, 2024

(மொஹமட் பாதுஷா)

முஸ்லிம் கட்சிகளும் அம்மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து இயங்க வேண்டுமென்ற குரல்கள், தற்போது அழுத்தமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. சமகாலத்தில், அவ்வாறானதோர் அமைப்பாக்கம் தேவையில்லை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகி விட்டால், முஸ்லிம்களின் தனித்துவக் கட்சி அடையாளங்கள் அப்படியே அழிவடைந்து, தூர்ந்து போய்விடும் என்று விதண்டாவாதமும் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில், முஸ்லிம்களின் அரசியல், பல பரிணாமங்களைக் கடந்து வந்திருக்கின்றது. பெருந்தேசியக் கட்சிகளின் ஊடான அரசியல் பிரதிநிதித்துவம் என்றும் தமிழ்க் கட்சிகளுடனான அரசியல் ஒன்றிணைவு என்றும் தனிப்பட்ட அரசியல் அடையாளம் என்றும், காலத்துக்குக் காலம் வேறு வேறு இயங்கு தளங்களை இது கொண்டிருந்திருக்கின்றது. சுதந்திரத்துக்கு முன்னரான அரசியல்வாதிகள் ‘தேசியம்’ என்ற அடிப்படையில் பொதுவாகச் செயற்படுகின்றவர்களாகவும் அதற்குப் பின்னரான வகையினர் ‘சிறுபான்மைச் சமூகங்கள்’ என்ற அடிப்படையில் இயங்குபவர்களாகவும் இருந்தனர் என்றால் மிகையில்லை.

1980களில் ஏற்பட்ட அல்லது முஸ்லிம்களால் உணரப்பட்ட இனரீதியான புறக்கணிப்பு மற்றும் ஆயுதங்கள் முன்-கையெடுத்தமை போன்ற நிலவரங்களால், முஸ்லிம்களுக்கு என தனியான கட்சி உருவாக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கமானது, தெற்கில் மையங் கொண்டிருந்த முஸ்லிம் அரசியலின்; பெரும்பகுதியை, தென்கிழக்குக் கரையோரமாகத் திருப்பி விட்டிருந்தது. இவ்வாறான கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை, பெரும்பான்மைக் கட்சிகளில் தேனிலவு கொண்டாடிக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் நோக்கிய விதமே வேறுமாதிரியாகத்தான் இருந்தது.

இருப்பினும், வளர்ச்சியின் உச்சப் புள்ளியில் அக்கட்சி இருந்தபோது, அதன் ஸ்தாபகத் தலைவர் அகால மரணமடைந்தமை, எதிர்பாரா நிலைதடுமாற்றத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தியது. ஸ்தாபக தலைவர் அஷ்ர‡ப், எல்லா விதமான அரசியல்வாதிகளையும் தனது வசீகரத்தால் கட்டுக்குள் வைத்திருந்தார். பின்னர் அக்கட்சியை பொறுப்பேற்ற தலைவரால், அது சாத்திமற்றதாகிப் போனமை கண்கூடு. இதன் விளைவாக, புதிய முஸ்லிம் கட்சிகள் உருவாகின. புதிய கட்சித் தலைவர்களும் தோற்றம் பெற்றனர்.

ஆனால், தெரியாமல்தான் கேட்கின்றோம் – இந்த முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும், இலங்கை முஸ்லிம்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்கள், எந்த அபிலாஷையை, முக்கியமான பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கின்றார்கள், ஊர்கூடித் தேர் இழுத்து ஒவ்வொரு அரசியல்வாதியையும் நாடாளுமன்றத்துக்குள், மாகாண சபைக்குள் போட்டுவிட்டு வருகின்றோம். அவர்கள் இந்த சமூகத்துக்காக என்ன கைமாறு செய்திருக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. தேசியத் தலைமை என்ற மாயைக்குள்ளும் பிராந்தியத் தளபதிகள் என்ற வெறுமைக்குள்ளும் சிக்கிக் கொண்டுள்ள அரசியல்வாதிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்போரினதும்; மக்களினதும் தலையில் மிளகாய் அரைத்து விட்டு, அரசியல்வாதிகள், தமக்கான அரசியலை விருத்தி செய்து கொண்டே போகின்றனர். சிலருக்கு தேசியத் தலைவராக, முழு அமைச்சராக இருக்க வேண்டும் என்ற அடங்காத வேட்கை இருக்கின்றது. வேறு சிலர், பத்தோடு பதினொன்றாக வெறுமனே கதிரையைச் சூடாக்கிக் கொண்டு இருக்கின்றனர்.

இன்னும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள், பெரும்பான்மைக் கட்சிகளின் அரவணைப்புக்குள் இதமாக இருக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் செலவழித்த பணத்தை உழைப்பதற்கும் அடுத்த தேர்தலுக்கு தம்மைத் தயார்ப்படுத்துவதற்குமே, பலருக்கு நேரம் சரியாக இருக்கின்றது. இதற்கப்பால், இவர்களால் மக்களுடைய வாழ்க்கையில் ஏதாவது அரசியல், சமூக, உரிமை ரீதியான பாரிய முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை என்பது மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளப்படுகின்றது. மந்திரித்து விடப்பட்ட ஆதரவாளர்களையும் ஒரு சினிமாக்காரனைப் போல, கட்சித் தலைவனை நினைக்கின்ற இரசிகர்களையும் தவிர, மற்ற எல்லோருக்குமே இது விளங்குகின்றது.

இதன் வெளிப்பாடுதான், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற விழிப்புணர்வாகும். அஷ்ர‡ப் காலத்தில் இருந்தது போல், முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபடாமல் கட்டுக் கோப்பாக இருந்து. இச்சமூகத்துக்குச் சாதனையாக எதையாவது செய்திருக்குமாக இருந்தாலோ அல்லது அந்தத் தேவைப்பாட்டை மற்றைய முஸ்லிம் கட்சிகள் நிவர்த்தி செய்திருந்தாலோ, முஸ்லிம் கட்சிகள் ஒன்றுசேர்தல் பற்றிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று கூறலாம். ஆனால், முஸ்லிம்களின் அரசியலின்; அடையாளமாக இருந்த மு.காவோ ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளோ சமூக நலனை முன்னிறுத்தி செயற்படுவதில் பெரும் குறைபாடுடையவர்களாக உள்ளனர்.

முஸ்லிம் கட்சிகளின் அரசியல்வாதிகள், அக்கட்சிகளை வைத்துத் தம்மை வளர்த்துக் கொள்வதுடன், ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது வாக்குவங்கியை தக்க வைத்திருக்கும் வேலையை மாத்திரமே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றனர். எனவே, தனித்தனியாக இணைந்து ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்றால், கூட்டாகச் சேர்ந்தாவது அதைச் செய்யலாம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு குறித்து வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், இப்போது பேசப்படுவது, முன்னர் ஒருசில சிறு கட்சிகள் இணைந்து உருவாகி, மறுநாளே காணாமற்போன பெயரளவிலான கூட்டணி அல்ல. மாறாக, பிரதான முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் இணையும் கூட்டமைப்பு பற்றியாகும். முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு பற்றிப் பேசுகின்ற வேளையில், அவ்வாறான கூட்டமைப்பு உருவாக்கபட்டால் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் தூர்ந்து போய்விடும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

இது சிறுபிள்ளைத்தனமான கணிப்பன்றி வேறெதுவும் இல்லை. இக்கூட்டமைப்பானது, அக்கட்சியை அழிப்பதற்கான சதித்திட்டம் என்று கிணற்றுத்தவளையாக இருக்கின்ற அரசியல் அறிவாளிகள் வாதிடுகின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுசேர்ந்து, மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைப் புரிந்து கொண்ட சில அரசியல்வாதிகள், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு சாத்தியவள பணிகளை மேற்கொண்டுள்ளனர். சிலர் அதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட்;, மு.காவின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் ஹசன்அலி உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் இதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம்வகிக்கும் அநேக அரசியல்வாதிகள் போன்றோர் தம்முடைய விருப்பத்தை இன்னும் வெளியிடவில்லை. மு.கா. தலைமையை விமர்சிக்கின்ற அல்லது அவருக்கு எதிராக அரசியல் புரியும் அரசியல்வாதிகள் பலர், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க பாடுபடுவதும், ‘இது மு.காவை அழிப்பதற்கான முயற்சி’ என சித்திரிக்கப்படுவதற்குக் காரணமாகும். மு.கா.வின் பலம் மக்களாகும். அது அஷ்ர‡பிடம் இருந்து கிடைத்தது.

இதில் தற்போதைய தலைமையின் பங்கு மிகச் சொற்பமானதே. யார் அக்கட்சியை விட்டு விலகினாலும் யார் தலைவராக இருந்தாலும் அது தூர்ந்து போக மாட்டாது. ‘மு.காவை வெளியில் இருந்து யாரும் அழிக்க முடியாது’ என்று கூறுவது, இன்னுமொரு பதில்க் கேள்வியைத் தோற்றுவிக்கின்றது. ஆகவே, இது விடயத்தில் வீண் பயம் தேவையில்லை. எதாவதோர் அடிப்படையில், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பான நிலைப்பாட்டை மு.கா அறிவிக்க வேண்டியது, சமூகக் கடமையாகும். உங்களுக்கு தெரியும், உலக நாடுகளில் மட்டுமன்றி, இலங்கையிலும் கூட பல கூட்டணிகள் உருவாகித் திறம்பட செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிப்பிடலாம். த.தே.கூ என்பது ஒரு கட்சியல்ல. பல கட்சிகளின் சேர்மானமாகும். தமிழரசுக் கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் எனப் பன்முகத் தோற்றப்பாட்டைக் கொண்ட தரப்பினர் இதில் அங்கம் வகிக்கின்றனர். தமிழ்ச் சமூகத்தின் உரிமையை ஜனநாயக ரீதியாக பெற்றுக் கொள்ள, இவையனைத்தும் பகைமை மறந்து செயலாற்றுவதைக் காண்கின்றோம்.

அப்படியென்றால், முஸ்லிம் கட்சிகள் ஏன் ஒன்றுசேர முடியாது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், பிரதான கட்சி தமிழரசுக் கட்சி. அதன் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராஜா. ஆனால், கூட்டமைப்பின் தலைவராக இரா. சம்;பந்தனே இருக்கின்றார். அதற்காக, தமிழரசுக் கட்சி அழிவடைந்து விடவும் இல்லை. மாவை சேனாதிராஜா அதையொரு தாழ்வுச்சிக்கலாக நோக்கவும் இல்லை. இதன் காரணமாகவே, பலம் பொருந்திய கட்சியாக இது காணப்படுகின்றது. அதற்கப்பால், பிரதான கட்சியின் தலைவரையே கூட்டணியின் தலைவராகவும் கொண்ட அரசியல் கூட்டுக்களும் உள்ளன. குறிப்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு. இதில் அங்கம் பெறுகின்ற காரணத்தால், பிரதான கட்சியான சுதந்திரக் கட்சியை இதர சிறு கட்சிகள் அழித்து விட்டதாக யாராவது கருத முடியாது. இதுபோலவே, ஐக்கிய தேசிய முன்னணியையும் அதன் வரலாற்று வெற்றியையும் நோக்கலாம்.

எனவே, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவானால், முஸ்லிம் காங்கிரஸ் அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகள் சிதைந்து போய்விடாது. மு.கா.வே அழியாது என்றால் மற்றைய முஸ்லிம் கட்சிகளுக்கு பெரிய பாதிப்புக்கள் இருக்க வாய்ப்பில்லை. முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் பட்சத்தில், அதிக விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய வேண்டிய பெரிய கட்சியாக முஸ்லிம் காங்கிரஸே இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கடுத்த நிலையில் மக்கள் காங்கிரஸ் இருக்கும். எனவே, விட்டுக் கொடுப்பின் அளவுக்கு ஏற்ப அந்தந்தக் கட்சியின் முக்கியத்துவமும் கூட்டமைப்புக்குள் உறுதிப்படுத்தப்படலாம்.

அவ்வாறே, பிரதான கட்சியின் தலைவரை முதலாவது தலைமையாக நியமித்து, ஒரு சில வருடங்களுக்குள் சுழற்சிமுறைத் தலைமைப் பதவியைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டால், இணைத் தலைமை மிகவும் பொருத்தமானதாக இருக்கும். மனங்கள் ஒன்றிணைந்த பின்னர், சின்னம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கமாட்டாது என்றே சொல்ல வேண்டும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ‘தேசியத் தலைமை’ என்ற, ஒன்றுக்கும் உதவாத பிரம்மைக்குள் இருந்து வெளியில் வர வேண்டியிருக்கும். வெற்றுக் கோஷங்கள், கட்சிசார்ந்த கிளுகிளுப்புக்களும் இல்லாது போகும். அதுமட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அஷ்ர‡பின் பாசறையில் இருந்த பழைய சகபாடிகள் அநேகர் இதில் இடம்பிடிப்பதால், யாரும் யாரையும் முட்டாளாக்கிவிட்டு காரியம் முடிக்க முடியாத நிலை ஏற்படும். தமிழ்க் கூட்டமைப்புப் போல பலம் பொருந்திய சக்தியாக வளர்ச்சியடைந்தால், அதிக அமைச்சுக்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்கலாம்.

என்றாலும், எல்லோருக்கும் பதவிகள் கிடைக்காது என்பதுபோல, தான் மட்டுமே முழு அமைச்சை வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணமும் பலிக்காது. நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமை பற்றி பேசுகின்றோம். இலங்கையில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகளுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் பன்னெடுங்காலமாக உறவு கொண்டாடி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளுடன் ஒன்றிணைந்து உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென இப்போதும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்படி, யார் யாருடனோ இணைந்து அரசியல் செய்ய முடியுமாக இருந்தால், வடக்கு, கிழக்கிலும் அதற்கு வெளியிலும் உள்ள முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும், ஏன் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைய முடியாது, எனவே, இந்த மக்களுக்காக, எதிர்காலச் சந்ததிக்காக, நொண்டிச்சாட்டுக்களைக் கைவிட்டு கைகோர்க்க வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *