Breaking
Sun. Nov 24th, 2024

வவுனியா, செட்டிகுளம், இராமியன்குளத்தில் மக்களின் காணிகளை கையகப்படுத்திய இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாகவும் அதனை உடன் விடுவிக்க கோரியும் பாரியளவிலான ஆர்ப்பாட்டமொன்று நேற்று இடம்பெற்றது.

வவுனியா, செட்டிகுளம், ஆண்டியாபுளியங்குளம் பள்ளிவாசல் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மதவாச்சி மன்னார் வீதியில் ஆண்டியாபுளியங்குளத்தில் மதிய நேர தொழுகையின் பின்னர் சுமார் ஒரு மணிக்கு ஒன்றுகூடிய இஸ்லாமிய மக்கள் தமது பூர்வீக காணிகளை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இதன்போது ‘எங்கள் மூதாதையரின் காணியில் இராணுவம் விவசாயம் செய்கின்றது. அதனை உடன் விடுவிக்கவேண்டும்’, ‘டிசம்பர் 31 இற்கு முன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதியின் சொல் பொய், அரசே எமது விவசாய நிலங்களை விட்டு விடு, விவசாய நிலங்களையும் மேச்சல் நிலங்களையும் விட்டுவெளியேறு போன்று வாசகங்கள் எழுதிய பதாதைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகன் அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகஜரொன்றினையும் கையளித்ததுடன், இராணுவத்தினர் தமது காணியில் விவசாய பண்ணையினை நடத்தி வருவதாகவும் அங்கு விளையும் பொருட்களை தமக்கே கடை அமைத்து விற்பனை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், விவசாய பொருட்கள் கடையையும், விவிசாய பண்ணை பெயர்ப்பலகையையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் சுமார் 2 மணிநேரமாக இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் பின்னர் ஆர்ப்பபாட்டக்காரர்கள் களைந்து சென்றிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட இராமியன்குளம் பகுதியில் உள்ள காணிகள் கடந்த 1965ஆம் ஆண்டு தொடக்கம் எம்மால் விவசாயம் மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

போர்சூழலால் வெளியேற்றப்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த நிலங்களில் குடியேறியிருந்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்க அதிகளவிலான நிலங்கள் தேவைப்பட்டன.

இதனையடுத்து அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் இராமியன்குளம் பகுதி நிலத்தை விட்டுத்தருமாறும் இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதும், அவர்களது நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 2013ம் ஆண்டளவில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தபட்ட போதும் இராணுவத்தினர் குறித்த நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டதுடன் இதுவரை குறித்த நிலங்கள் விடுவிக்கப்டவில்லை எனவும் தெரிவித்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *