Breaking
Mon. May 20th, 2024

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின் போராட்டத்தையும் நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வர பாதுகாப்பு படையினர் தயார் என மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பொன்றில்,

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடாமல் தவிர்ப்பது உண்மையில் தேசிய நல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டுக்கும் பெரிய பாதிப்பு என சுமந்திரன் கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் போதே சுதத்த தேரர் இதனை கூறியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரபாகரன்களின் இறுதி மூச்சை நந்திக்கடல் களப்பில் இந்த வாயு கோளத்தில் சேர்க்க முடிந்தது போல், சுமந்திரன்கள் அதேபோல் போராட்டத்திற்கு செல்வார்கள் எனில், அதனை நந்திக்கடல் களப்பில் முடிவுக்கு கொண்டு எமது பாதுகாப்பு தரப்பினர் தயாராக இருக்கின்றனர் என்ற செய்தியை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்ட வேண்டும்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நல்லிணக்க செயலகத்தை அமைத்து முதலில் என்ன செய்தார். எமது நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாட வேண்டும் என்று யோசனை முன்வைத்தார்.

இதனடிப்படையில் கடந்த நான்கரை ஆண்டுகள் நல்லிணக்கம் என்ற தலைப்பை முன்னால் வைத்து கொண்டு நல்லாட்சி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தேசிய கீதத்தை தமிழில் மொழியில் பாடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இந்த பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம்.
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் அந்நாடுகளின் பிரதான மொழியிலேயே தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன.

சீனாவின் சீன மொழியில், ஜப்பானில் ஜப்பான் மொழியில், கொரியாவில் கொரிய மொழியில், இத்தாலியில் இத்தாலிய மொழியில், பிரான்சில் பிரஞ்சு மொழியில், ஜேர்மனியில் ஜேர்மன் மொழியில் தேசிய கீதங்கள் பாடப்படுகின்றன. இவ்வாறு அந்நாடுகளின் அடையாளமான மொழிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது.

எனினும் எமது நாட்டில் நல்லிணக்கம் என்ற தலைப்பை முன்னால் வைத்து கொண்டு நாட்டின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எமது நாட்டின் தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப்பட வேண்டும் என்று யோசனை முன்வைத்தனர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்கவின் கூட்டணி சக்திகள் இணைந்து தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாட நடவடிக்கை எடுத்தன.

தேசிய கீதத்தை தமிழிலா சிங்களத்திலா பாடுவது என்பது பிரச்சினையல்ல. அதனை பிரச்சினையாக மாற்றிக் கொள்ளக் கூடாது. நல்லிணக்கம் என்பது அதுவல்ல. இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வான பிணைப்பை ஏற்படுத்துவதே நல்லிணக்கம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களின் கலாச்சாரத்துடன் இணைந்து செல்வதன் மூலம் மட்டுமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

எமது இளைஞர்கள், கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்லும் போது அந்நாடுகளின் மொழிகளை கற்றுக் கொண்டே செல்கின்றனர் என்பது இதற்கு சிறந்த உதாரணம்.
எனினும் எமது நாட்டில் அது முற்றாக மாறியுள்ளது. எமது சிங்கள அரச ஊழியர்களை தமிழ் படிக்குமாறு கூறுகின்றனர்.

அப்படியல்ல தமிழ் மக்களை சிங்களத்தை கற்குமாறு கூற வேண்டும். அப்போதான் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அதனை விடுத்து சமூகத்தை பிரித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

சுமந்திரன் போன்றோர் மீண்டும் இந்த நாட்டை பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுக்குள் தள்ள முயற்சிக்கக் கூடாது. பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை உடனடியாக சுருட்டிக்கொள்ள வேண்டும். இனவாத கருத்துக்களை வெளியிடக் கூடாது.

விடுதலைப் புலிகளை போரில் தோற்கடித்தாலும் அந்த அமைப்பின் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அரசியல் அணியை தடை செய்ய முடியாமல் போனதே மகிந்த ராஜபக்சவுக்கு தவறிய இடம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகளின் அரசியல் அணி. அதனை தடை செய்ய மகிந்த ராஜபக்சவுக்கு முடியாமல் போனது.
அரசியல் களத்தில் உள்ள பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலுடன் கூடிய தமிழ் அரசியல் தலைவர்களை உடனடியாக புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் கோருகிறோம்.

அப்படியில்லை என்றால், இவர்கள் அப்பாவி தமிழ் மக்களை இனவாத நிகழ்ச்சி நிரல் ஊடாக போராட்டத்திற்கு தள்ளிவிடும் வாய்ப்பு உள்ளது என மாகல்கந்தே சுதத்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *