Breaking
Thu. May 2nd, 2024

ஊடகப்பிரிவு

கட்டுநாயாக்க விமான நிலையத்திலிருந்து எத்தனையோ மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு கெம்பஸில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகளை கொண்டுசென்று, கொரோணா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தும் நிலையமாக பெட்டி கெம்பசை மாற்றியமை, சிறுபான்மை மக்களை இலக்கு வைத்தா? என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி கேள்வியெழுப்பினார்.

நாவலையில், இன்று காலை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“தொழிற்படாத துறைமுகம், தொழிற்படாத விமான நிலையம் மற்றும் பாழடைந்துபோன “மஹிந்த ராஜபக்ஷ ஸ்டேடியம்” என்பவற்றையெல்லாம் விடுத்து, பல மாவட்டங்களைத் தாண்டி குறிப்பாக, பொலன்னறுவையையும் தாண்டி, மட்டக்களப்பில் தடுப்பு முகாமை அமைத்தமை, அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலா?

அங்கு கொண்டு செல்பவர்களில் எவருக்கேனும் ஒருவருக்கு கொரோணா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், அது ஏனையோருக்கும் தீவிரமாக பரவும் என வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். உலகின் அநேகமான நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்படும்போது, இலங்கை மாத்திரம் எல்லாவற்றையும் திறந்துவிடுவதன் நோக்கம் என்ன?

தேர்தலுக்குச் செலவிடுவதற்காக, கொரோணாவின் தாய் நாடான சீனாவிடமே கடனுக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கும் அரசுதான் இது. ஜனாதிபதித் தேர்தலில் செலவிட்ட நிதியை, இன்னும் தமக்கு வழங்கவில்லை என தேர்தல் ஆணையாளர் கூறுகின்றார். பொதுத் தேர்தலுக்கான பணத்துக்கு எங்கே போவதென்று அவர் கவலைப்படுகிறார்.

கடந்த 100 நாட்களில் பட்ஜெட்டை சமர்ப்பிக்க முடியாத இந்த அரசு, தேர்தலில் கொடுத்த எல்லா வாக்குறுதிகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் அரச நிர்வாகம் முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு என்றார்கள். அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு என்றார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு, மார்ச் முதலாம் திகதியிலிருந்து 1000 ரூபா வழங்குவோம் என வாக்குறுதியளித்தனர். ஆனால், இதுவரையில் எதையுமே கொடுக்கவில்லை.

ராஜபக்ஷ குடும்பம் பொய் சொல்வதை மட்டும் மிகச் சரியாக செய்கின்றது. அழகாகப் பேசி, அப்பாவி மக்களையும் ஆதரவாளர்களையும் நம்பவைப்பதிலே இவர்கள் கைதேர்ந்தவர்கள்.

பொதுஜன முன்னணி வேட்பாளர் பட்டியலில் எந்தவொரு முஸ்லிமையும் உள்வாங்க மறுக்கின்றனர். ஏனெனில், சிங்கள மக்கள் மத்தியிலே, “முஸ்லிம்களை இந்த அரசில் இணைத்துக்கொள்ள மாட்டோம்” எனக் கூறி, வாக்குகளை கொள்ளையடிப்பதுதான் இவர்களின் திட்டம். இதன்மூலம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சிக்கின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஏன் இவர்களுக்கு தேவைப்படுகின்றது? சிறுபான்மை மக்களை கொரோணா நோயாளிகள் போன்று வீட்டுக்குள் வைத்து முடக்குவதே இவர்களின் திட்டம்.

நேற்றிரவு நீர்கொழும்பு, பெரியமுல்லை, அன்சார் ஹோட்டலில் முஸ்லிம்கள் மீது நடாத்திய தாக்குதல், கொலை ஆகியவற்றிலிருந்து நாம் பல உண்மைகளை புரிந்துகொண்டிருக்கிறோம். மக்கள் இவற்றை எல்லாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.    

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *