பிரதான செய்திகள்

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – முன்னால் அமைச்சர்

“மங்கள சமரவீர போன்ற ஜனநாயகவாதிகள் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்தால் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்திருக்கும்;
சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

“மங்கள சமரவீர” போன்ற ஜனநாயகவாதிகள் நாட்டின் ஆட்சித் தலைவராக இருந்திருந்தால், இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும் என்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (11) முன்வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கெளரவ மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரேரணையின் போது, அவர் ஆற்றிய இரங்கல் உரையில் மேலும் கூறியதாவது,

“முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் மறைந்தாலும், இந்த நாட்டில் ‘மங்கள சமரவீர’ என்ற அவருடைய நாமம், அவருடைய கொள்கை, கோட்பாடு மற்றும் அவர் மேற்கொண்ட அரசியல் போன்றவை ஒரு வரலாறாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு முன்னரேயே, மங்கள சமரவீரவுடன் நெருக்கத்தைக் கொண்டிருந்தேன். என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு முன்னர், அப்பொழுது நான் வயதிலே சிறியவனாக இருந்தாலும், மங்கள சமரவீரவின் மிக நெருங்கிய நண்பர்களான ஸ்ரீபதி சூரிய ஆரச்சி, ருவண் பேர்டினன்ஸ் போன்றவர்களோடு நானும் இணைந்து, நால்வரும் ஒன்றாக பல சந்திப்புக்களிலும் கூட்டங்களிலும் பல நல்ல விடயங்களிலும் கலந்துகொண்டு உரையாடியிருக்கின்றோம். அரசியலுக்குள் நான் பிரவேசிப்பதற்கு, எனக்கு பல வகையிலும் உதவி செய்தவர் மங்கள சமரவீர.

அதுமாத்திரமல்லாமல், அவர் அமைச்சராக இருந்த காலத்தில், எந்தவொரு அமைச்சை அவர் பொறுப்பெடுத்தாலும், அவ்வமைச்சில் பல சாதனைகளை நிலைநாட்டியவர். அதுபோன்று, சந்திரிக்கா அம்மையார் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆட்சிக் கதிரையில் அமர்த்தியதிலும், சஜித் பிரேமதாசவை கடந்த தேர்தலில் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதிலும் பாரிய பங்களிப்புக்களை செய்தவர்.

அவர் மறைந்த செய்தியை கேள்வியுற்ற பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் இறந்தபொழுது நான் சிறையிலிருந்தேன். அவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், நான் சிறையிலிருந்து பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், தொலைபேசியூடாக அவரது நண்பர் ருவனிடம், மங்கள சமரவீரவின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். அத்துடன், நான் சஜித் பிரேமதாசவை சந்தித்து, “உங்களுடைய இந்த அரசியல் உயர்ச்சியில் மலிக் சமர விக்கிரமவும், மங்கள சமரவீரவும் செய்த தியாகங்களை அருகிலிருந்து அவதானித்தவன் நான். அந்த வகையில், அவருடைய இந்த இக்கட்டான தருணத்தில், அரசோடும், சுகாதார அமைச்சரோடும் பேசி, அவருக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுங்கள்” என்று வேண்டினேன்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கடைசி வரை வேட்பாளராக நின்ற அவர், தேர்தலிலிருந்து விலகியபோது, “ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்?” என்று நான் அவரிடம் வினவினேன். அதற்கு அவர், “என்னுடைய கொள்கையிலிருந்து நான் மாறவில்லை. என்னுடைய அறிக்கைகளும், செயற்பாடுகளும் ஐக்கிய மக்கள் சக்தியினுடைய வாக்கு வங்கியினைக் குறைக்கும் என்று, அதிலுள்ள சிலர் எண்ணுவார்கள் எனின், நான் இந்த அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பேன். என்னுடைய பாராளுமன்ற ஆசனம் மற்றும் எனது அரசியல் அதிகாரம் இல்லாமலானாலும் பராவாயில்லை. ஆனால், நான் உயிரோடு இருக்கும் வரை என்னுடைய கொள்கை வாழ வேண்டும்” என்று கூறினார்.

நான் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது, எனது கைதினைக் கண்டித்து, முதன்முதலாக டுவிட்டரில் அறிக்கை விட்ட ஒரு பௌத்த பொதுமகனும், ஒரு அரசியல்வாதியும் அவரே! அதேபோன்று, அப்பாவி தமிழ் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட பொழுது அவர்களுக்காக, தமிழ் சமூகத்துக்காக பேசியவரும் அவரே! ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு பிறகு முஸ்லிம் மதகுருமார், இளைஞர்கள் அநியாயமாக தண்டிக்கப்பட்ட பொழுது, காடையர்கள் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்திய பொழுது, அவற்றுக்கு எதிராகவும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல் தலைவர் மங்கள சமரவீர. எனவே, அவ்வாறான ஒரு ஆளுமை மிக்க, நல்ல மனம் கொண்ட அரசியல்வாதியை, இன்று இந்த நாடு இழந்து நிற்கின்றது.

இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர் வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் “இனவாதம்” என்ற நஞ்சைக் கக்கி, இனவாதத்தை விதைத்து, இந்த நாட்டை கடன் சுமையில் தள்ளியிருக்கின்றார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தத் தலைவர்கள், அவர்கள் ஆட்சிக் கதிரையில் அமர்வதற்காக மேற்கொண்ட இனவாத செயற்பாடுகள், நிச்சயமாக இந்த நாட்டுக்கு செய்த துரோகங்களாக பார்க்கப்படும்.

அவ்வாறனவர்களின் வரிசையிலே, மங்கள சமரவீர போன்ற ஒருவர், நாட்டின் ஆட்சித் தலைவராக, ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த நாடு பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கும். மஹதீர் முஹம்மட் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி போன்ற பலரை, இன்று தங்களுடைய தேவைக்காக பயன்படுத்துகின்ற பேச்சாளர்கள், அன்று மங்கள சமரவீர போன்ற கொள்கையுடைய ஒருவரை இந்த ஆட்சிக் கதிரையில் அமர்த்தியிருந்தால், இந்த நாடும் அவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வாறான ஒருவருடைய இழப்பு, குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் பாரிய இழப்பாகும். சிங்கள, தமிழ் மற்றும் இஸ்லாமிய அரசியல்வாதிகளுக்கு, ஒரு முன்னுதாரண புருஷராக மங்கள சமரவீர வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஆகையால், அவர் மறைந்தாலும். அவருடைய கொள்கை வாழ வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கின்றேன்” என்று கூறினார்.

Related posts

மன்னார் காற்றாலை திட்டத்தை திறந்து வைத்த மஹிந்த

wpengine

ஒலுவில் துறைமுகத்தினை துரிதமாக புனரமைப்பதற்காக நடவடிக்கை-கே.என் டக்ளஸ் தேவானந்தா

wpengine

ஐ.நா.அதிகாரி காரில் பாலியல் சேட்டை வைராகும் வீடியோ

wpengine