ஜப்பானில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் சிங்கத்திடம் இருந்து 2 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்குகள் பூங்காவிற்கு பெற்றோர் தங்களது இரண்டு வயது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் குழந்தையுடன் பெற்றோர் சுற்றிப்பார்த்து வந்துள்ளனர்.
அப்போது, சிறுவன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்புறமாக ஒரு சிங்கம் வெளியே வந்து அமர்ந்துள்ளது. சில வினாடிகள் சிங்கத்தை பார்த்த அந்த சிறுவன் திடீரென திரும்பி சிங்கத்திற்கு முதுகை காட்டியவாறு நின்றுள்ளான்.
இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தது போல் 181 கிலோ எடையுள்ள அந்த சிங்கம் சிறுவனை நோக்கி பாய்ந்து வந்துள்ளது. சில அடிகள் தூரத்திலிருந்து சிறுவன் மீது பாய்ந்தபோது, இடையில் இருந்த கண்ணாடி தடுப்பு சிங்கத்தை தடுத்தி நிறுத்தி விடுகிறது.
கண்ணாடியை தன்னுடைய நகங்களால் கீறும் சத்தத்தை கேட்ட சிறுவன் திரும்பி பார்த்தபோது அந்த சிங்கம் தனது அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவாறு பின்னோக்கி ஓடியுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து விலங்குகள் பூங்கா காப்பாளர் ஒருவர் கூறுகையில், “இங்குள்ள சிங்கங்கள் குழந்தைகளை கண்டால் உற்சாகமாகி அவர்களுடன் விளையாடும். இந்த சம்பத்திலும் சிறுவனிடம் விளையாடத்தான் அந்த சிங்கம் ஓடி வந்தது” என தெரிவித்துள்ளார்.
ஆனால், விலங்குகள் குறித்து ஆய்வு செய்து வரும் ஆடம் ரோபர்ட்ஸ் என்பவர் கூறுகையில், “சிறுவனிடம் விளையாட சரியான சந்தர்ப்பம் எதிர்ப்பார்த்து இவ்வளவு வேகத்தில் சிங்கம் பாய்ந்து வந்திருக்காது. பொதுவாக, எந்தவொரு விலங்காக இருந்தாலும் அது திரும்பி நிற்கும்போது அல்லது அதன் கவனம் சிதறும் போதுதான் சிங்கம் தனது தாக்குதலை தொடங்கும். இந்த சம்பவத்திலும், சிறுவன் திரும்பி முதுகை காட்டிக்கொண்டு நின்றபோது தான் அந்த சிங்கம் பாய்ந்து வந்துள்ளது. எனவே, இதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சிங்கத்திற்கும் சிறுவனுக்கும் இடையில் அந்த கண்ணாடி தடுப்பு இல்லாமல் இருந்திருந்தால், சிறுவனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் சின்சினாட் நகரில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் 4 வயது சிறுவன் கொரில்லாவிடம் சிக்கிக் கொண்டான். பின்னர் சிறுவனை மீட்க கொரில்லாவை வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.