மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை (11) காலை தொடக்கம் இடம் பெற்று வருகின்ற நிலையில் சீரற்ற மின் விநியோகம் காரணமாக உரிய வகையில் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
இவ்விடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..
மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் சுமுகமான முறையில் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவிற்கும், முச்சக்கர வண்டிக்கு 2500 ரூபாவிற்கும் ,கார்களுக்கு 5000 ரூபாவிற்கும் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றது.
-இன்றைய தினம் திங்கட்கிழமை சௌத்பார்,பனங்கட்டுகொட்டு மேற்கு,பனங்கட்டுகொட்டு கிழக்கு,பள்ளிமுனை கிழக்கு,பள்ளிமுனை மேற்கு,உப்புக்குளம் வடக்கு ,உப்புக்குளம் தெற்கு,பெரியகடை,பெற்றா,சாவற்கட்டு ,சின்னக்கடை ஆகிய 11 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்று (11)மதியம் முதல் அடிக்கடி மின் தடங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அனைத்து கிராமங்களுக்கும் உரிய முறையில் எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
சாவற்கட்டு மற்றும் சின்னக்கடை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு இன்றைய தினம் எரிபொருள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
குறித்த இரு கிராமங்களுக்கும் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(12) காலை முதல் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது.
சாவற்கட்டு கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (12)காலை 8 மணிக்கும், சின்னக் கடை கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மக்கள் காலை 9 மணிக்கும் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சென்று எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய தினம் மக்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பை போன்று நாளைய தினமும் ஒத்துழைப்பை வழங்கி உங்கள் வாகனங்களுக்கான பெற்றோலை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.