(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து அங்கு முறிவு வைத்திய விசேட பிரிவு ஸ்தாபிக்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை (08) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான குருதி மாற்றும் சிகிச்சை பிரிவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசால் காசிம் தனதுரையில் மேலும் கூறியதாவது;
“சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் நீண்ட கால பிரச்சினை தொடர்பில் நான் அந்த ஊர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் வியாழக்கிழமை (07) இரவு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.
அதன்படி அந்த வைத்தியசாலையை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைத்து, இதனது இரண்டாவது ஒரு பிரிவாக செயற்படுத்துவதற்கும் அங்கு சகல வசதிகளும் கொண்ட முறிவு வைத்திய விசேட பிரிவை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் அஷ்ரப் வைத்தியசாலைக்கான ஆளணியும் வளங்களும் இன்னும் அதிகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தற்போது சாய்ந்தமருது வைத்தியசாலையில் எந்தவொரு நோயாளியும் இல்லாமல் வார்ட்டுகள் மூடிக்கிடக்கின்றன. அந்த பெறுமதியான சொத்தை தொடர்ந்தும் வீணடிப்பதற்கு இடமளிக்க முடியாது. அதனால் இனிவரும் காலங்களில் அது முறிவு வைத்தியத்திற்கான விசேட வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டு, இப்பிராந்தியத்தில் வாழ்கின்ற சுமார் ஐந்து இலட்சம் மக்களுக்கும் பயனளிக்கக்கூடியதாக கட்டியெழுப்பப்படும் என்கின்ற நல்ல செய்தியை இவ்விடத்தில் பிரகடனம் செய்கின்றேன்.
இதன் அடிப்படையில் அங்கு இரண்டு அதி நவீன சத்திர சிகிச்சை கூடங்களும் ஒரு எக்ஸ்ரே பிரிவும் உடனடியாக நிர்மாணிக்கப்படும். முறிவு வைத்தியத்திற்கான அதி நவீன உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்படும்.
அதேவேளை எதிர்காலத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் CT Scan வசதியும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மார்பு சிகிச்சைக்கான விசேட பிரிவும் ஏற்படுத்தப்படும்.
அத்துடன் என்னிடம் ஒரு பெரிய திட்டம் உள்ளது. அதாவது எதிர்காலத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையையும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையையும் மையப்படுத்தி ஒரு பிராந்திய பொது வைத்தியசாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். தற்போது அம்பாறை நகரில் மாத்திரமே பொது வைத்தியசாலை இருப்பதனால் எமது கரையோர பிராந்திய மக்களுக்கும் அது போன்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்து சுகாதாரத்துறையில் தன்னிறைவான சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியுள்ளது.
சுகாதார அமைச்சின் மூலம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் முழுமையான ஒத்துழைப்புடன் அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரமல்லாமல் முழுக் கிழக்கு மாகாணத்திற்கும் நிறைய சேவைகளை என்னால் ஆற்ற முடிந்துள்ளது. அதனால் நல்லாட்சி ஆரம்பித்து நூறு நாள் திட்டத்தில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிறுவப்படாமல் போன அவசர விபத்து சிகிச்சைப் பிரிவை இங்கு அமைப்பதற்கு நான் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் எடுத்துக்கொண்ட அயராத முயற்சிகள் காரணமாக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.