Breaking
Sun. May 5th, 2024
NYT2009042609180059C

(எம்.ஐ.முபாறக்)

வருடா வருடம் தொடங்கப்படும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இந்த வருடமும் தொடங்கிவிட்டது.பல நாடுகளில் இடம்பெற்ற-இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அங்கு பேசப்படுவதோடு இலங்கையின் இறுதி போரிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் பேசப்படவுள்ளன.

போர் முடிவுற்ற 2009 இற்குப் பின் இருந்து இப்போது வரை வருடா வருடம் இலங்கை விவகாரம் ஐ.நாவில் பேசப்படுவதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும் வழமையான ஒன்றாகிவிட்டது.இருந்தும்,இன்னும் இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவில்லை.

மஹிந்த அரசினால் பல வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட இந்த விவகாரம் இப்போது மைத்தி-ரணில் அரசிடம் தள்ளிவிடப்பட்டுள்ளது.மஹிந்தவைப் போல் அல்லாது இந்த அரசு இந்த விவகாரத்தை  நியாயமாகக் கையாளும்-பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று தமிழர்கள் ஆரம்பத்தில் நம்பினர்.ஆனால்,அந்த நம்பிக்கை இப்போது மெல்ல மெல்ல உடையத் .தொடங்கியுள்ளது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தமிழர்களின் அனைத்து விடயங்களிலும்-அனைத்துப் பிரச்சினைகளிலும் அக்கறையுள்ள அரசுபோல் இந்த அரசு தன்னைக் காட்டிக் கொண்டது.ஆளுநர்கள் மாற்றம்,காணிகள் விடுவிப்பு,அரசியல் கைதிகள் சிலர் விடுவிப்பு மற்றும் சம்பூர் மீள்குடியேற்றம் போன்ற பல விடயங்களில் தமிழர்களின் பக்கம் நின்று இந்த அரசு செயற்பட்டது.அது இந்த அரசு மீது தமிழருக்கு  நம்பிக்கையை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தது.

அரசின் இந்த தமிழர் சார்பு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டு  அரசியல் தீர்வு மற்றும் போர்க்  குற்ற விசாரணை தொடர்பிலும் தமிழருக்கு சார்பாக நடந்துகொள்ளும் என்றே தமிழர்கள் நினைத்தனர்.இந்த நினைப்பு-நம்பிக்கை மெல்ல மெல்ல வீணாகிப் போவதை இப்போது அவதானிக்கலாம்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த அரசு தமிழருக்குச் செய்தவை எல்லாம் சிறிய காரியங்கள்தான்.ஆனால்,அரசியல் தீர்வு மற்றும் போர்க் குற்ற விசாரணை போன்றவைதான் பெரிய விடயங்கள்.இவைதான் தமிழர்களின் இலக்காகும்.ஆனால்,அந்த இலக்கை தமிழர்கள் நினைத்தவாறு அடைய முடியாது என்றே தோன்றுகின்றது.

அவற்றுள் போர்க் குற்ற விவகாரம் என்பது தமிழர்கள் இழந்த உயிர்களுக்கு நீதியைக் கேட்டுப் போராடும் போராட்டமாகும்.இறுதிப் போரில் இழக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்த உயிர்களின் உறவினர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவும் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாகவும்தான் போர்க் குற்ற விவகாரத்தை தமிழர்கள் சார்பில் திருப்திகரமாக-நியாயமானதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

அது நியாயமாக முடித்து வைக்கப்பட வேண்டும் என்றால் விசாரணைகள் நியாயமாக-பக்க சார்பின்றி இடம்பெற வேண்டும்.தமிழருக்கு  இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.ஆனால்,இங்கேதான் பிரச்சினையே இருக்கின்றது.

இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அரசு ஒரே குரலில் ஏற்றுக்கொள்வதாக இல்லை.கொல்லப்பட்ட 40 ஆயிரம் உயிர்களையும் நாம் புறக்கணித்துவிட முடியாது என்று பிரதமர் கூறுகின்றார்.ஆனால்,அரசில் உள்ள ஏனையவர்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இந்த நிலைப்பாட்டால் தமிழர்களுக்கு நிவாரணம் கிடைத்தாலும் அது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்காது என்பது தெளிவாகின்றது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் திரட்டப்பட வேண்டும்.அவ்வாறு சரியாகத் திரட்டுவதற்கும் நடுநிலையாக நின்று உண்மையைக் கண்டறிவதற்கும் சர்வதேச விசாரணை அவசியம் அல்லது உள்ளக விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நிபுணர்கள்-சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்.

அவ்வாறு இல்லாது  முழுக்க முழுக்க அரச சார்பு விசாரனையாளர்களை உள்ளடக்கிய அரசால் அமைக்கப்படும்உள்ளக பொறிமுறையால் எவ்வாறு உண்மையைக் கண்டறிய முடியும்?படையினர் இழைத்த கொடுமைகள் அனைத்தையும் இந்தக் குழு உள்ளடக்குமா?நிச்சயமாக இல்லை.

ஆனால்,சர்வதேச நீதிபதிகள் உள்ளக பொறிமுறையில் உள்ளடக்கப்பட்டால் அது கிட்டத்தட்ட சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாக அமையும்.அல்லது உள்நாட்டு மற்றும் சர்வதேச கலப்பு விசாரணை பொறிமுறையாகவும் அதைப் பார்க்கலாம்.அந்த விசாரணைகளில் பெறப்படும் முறைப்பாடுகள் அனைத்தும் அவ்வாறே பதியப்படும்.அந்த விசாரணையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க-குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க பலமாக சிபாரிசுகள் முன்வைக்கப்படும்.அந்த சிபாரிசுகள் நிராகரிக்கபட்டால் சர்வதேசத்தில் அரசின் பொய் முகம் கிழிக்கப்படும்.

ஆனால்,அரசு அவ்வாறானதொரு நிலைமையை விரும்பவில்லை.படையினருக்கு எதிரான பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் மறைக்கப்பட வேண்டும்;படையினரைக் காப்பாற்ற வேண்டும்;உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதே அரசின் ஒரே நோக்கமாக இருப்பதால் சர்வதேச நீதிபதிகளை உள்ளகப் பொறிமுறைக்குள் உள்வாங்க அரசு மறுக்கின்றது.

நடந்தவை அவ்வாறே கண்டறியப்பட வேண்டும்;குற்றவாளிகள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்பட வேண்டும்;பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு விரும்பினால் உள்ளகப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதை விரும்பும்.

ஆனால்,அரசு வெறும் கண் துடைப்புக்காகவே இந்த விசாரணையை நடத்தப் போகின்றது.பாதிக்கபட்டவர்களுக்கு சிறிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு படையினரை முழுமையாகக் காப்பாற்றுவதே அரசின் ஒரே நோக்கம்.அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் உள்ளகப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறக் கூடாது.இப்போது புரிகிறதா அரசு ஏன் சர்வதேச நீதிபதிகளை நிராகரிக்கின்றது என்று?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *