Breaking
Sun. May 19th, 2024
Kiev, Ukraine - August 26, 2013 - A collection of well-known social media brands printed on paper and placed on plastic signs. Include Facebook, YouTube, Twitter, Google Plus, Instagram and Tumblr logos.

அது டிசம்பர் 17, 2010 ம் தேதி,  இந்திய இளைஞர்கள் ஆர்வமில்லாமல் இந்தியா – தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உலகம், அதன் அதன் வேலையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் அந்த நாள் உலக வரலாற்றில், அதுவும் குறிப்பாக, அரேபிய வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கப் போகிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

அரேபிய வசந்தம்:

அன்று காலை துனுசியாவில்,  தெருவோரத்தில் சிறிய காய்கறி கடை நடத்தும் முகமது பெளசீசி, மாவட்ட ஆளுநரை சந்திக்கச் செல்கிறான். தன்னிடம் மாநகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்கிறார்கள் என்பதுதான் அவனது குற்றச்சாட்டு. அவன் மட்டும் அல்ல, அப்போது துனிசியாவில் பலரும் லஞ்சத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள். உண்மையில் அவனுக்கும், அவன் வயதொத்த துனுஷியா இளைஞர்களுக்கும் லஞ்சம் மட்டும் பிரச்னையாக இருக்கவில்லை. அந்த தேசத்தில் பெரும்பாலனாவர்கள் அரசின் தவறான கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.TunisiaProtest

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை. பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. இதனால் ஏற்கெனவே அரசின் மீது கடும் கோபத்தில் இருந்த  பெளசீசி, ஆளுநரை சந்திக்கச் செல்கிறான்.  அந்த இளைஞனுக்கு ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. அங்கும் மோசமாக ஆளுநர் அலுவலக அதிகாரிகளால் நடத்தப்படுகிறான். விரக்தி, கோபம் எல்லாம் இணைந்து கொள்கிறது. இது அனைத்தையும் ஏற்கெனவே போதுமான அளவிற்கு அரசிடம் காட்டியாகிவிட்டது. ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை. இப்போது பெளசீசி தன்னைத் தானே நெருப்பிட்டு மாய்த்துக் கொள்கிறான்.

அரசிற்கு இது புதிதல்ல, ஏற்கெனவே பல இளைஞர்கள் அரசின் மீதுள்ள கோபத்தை தங்கள் மீதே காட்டி மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அரசும், மக்கள் தொகை எண்ணிக்கையில் ஒன்று குறைந்துவிட்டது என்ற அளவிலேயே அதை எடுத்துக் கொண்டிருக்கிறது. பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், இம்முறை அப்படி நடக்கவில்லை. முதலில் அல்- ஜசீரா செய்தி நிறுவனம், முகமது பெளசீசி செய்தியை வெளி உலகத்திற்கு கொண்டு செல்கிறது. மற்றொரு சாவு என்ற அளவில்தான் முதலில் உலகம் பார்த்தது. பிறகு மற்ற ஊடகங்கள் அந்த மரணத்தை பற்றியும், அதற்கான காரணமான ஊழல் படிந்த அரசை பற்றியும் செய்திகள் வெளியிட்டன. இப்போது அரசிற்கு கொஞ்சம் நெருக்கடி வர துவங்கியது. தங்களுக்கு எதிரான செய்தியை ஒரு செய்தி நிறுவனம் வெளியிடுகிறதென்றால் அரசு அமைதியாக இருக்குமா…? அனைத்து செய்தி ஊடகங்களும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன, சில ஊடகங்கள் தடை செய்யப்பட்டன.  அரசு மீண்டும் தாங்கள் வென்றுவிட்டதாக இருமாப்புக் கொண்டது.

ஆனால், உண்மை அப்படி இருக்கவில்லை.  துனுசியாவின் ஒரு வரலாற்று அத்தியாயம் இங்கிருந்துதான் துவங்கப் போகிறது என்பதை அரசு அறிந்திருக்கவில்லை.  துனுசிய மக்கள் சமூக ஊடகத்தை கையில் எடுத்தனர், முகநூல் ட்விட்டர், யூடியூப், வலைப்பூ என தங்களுக்கு வாய்ப்பிருக்கும் அனைத்து தளங்களிலும் துனுசிய அரசாங்கத்தின் அராஜகத்தை பகிர்ந்தனர். அரசு அதை தடை செய்ய எத்தனித்த போது, அனைத்தும் கை மீறிப் போயிருந்தது. ஆம், புரட்சி வெடித்திருந்தது. சர்வாதிகாரிகளால் பல ஆண்டுகள் ஆளப்பட்ட பக்கத்து அரேபிய தேசங்கள், அவசர அவசரமாக சமூக ஊடகங்களை தடை செய்ய துவங்கினர். ஆனால், அதற்குள் அங்கும் புரட்சி நெருப்பு பரவி இருந்தது.

ஆம், அரேபிய வசந்தம் என்று வர்ணிக்கப்படும் அரபு எழுச்சி, சமூக ஊடகங்களால்தான் சாத்தியமானது. சமூக ஊடகங்களின் வலிமையை எல்லைகளை கடந்து அனைத்து தேசங்களுக்கும் உணர்த்தியது; புது சட்டங்களை இயற்ற வைத்தன.

சென்னை பெருமழை:

அப்படியே கால இயந்திரத்தில் ஐந்து ஆண்டுகள் பயணித்து தமிழகத்திற்கு வாருங்கள். அதே டிசம்பர் மாதம்.  பெரும் மழை பெய்து கொண்டிருக்கிறது, காணும் இடம் எல்லாம் தண்ணீர். அப்போது சென்னை முடிச்சூரில் ஒரு பெண் பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருக்கிறாள்,  மழையால் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. அந்த குடும்பத்தால் அப்போது உடனே செய்ய முடிந்தது இந்தச் செய்தியை முகநூலில் பதிய முடிந்தது மட்டும்தான். இந்த முகநூல் செய்தியை விழுப்புரத்தில் இருக்கும் குமார் பார்க்கிறார். அதை சென்னையில் இருக்கும் தனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் வட்டத்தில் பகிர்கிறார். முடிச்சூர் பகுதியிலேயே இருக்கும் ஒரு மருத்துவருக்கு அந்த செய்தி சென்றடைகிறது. அவர் உடனே அந்த பெண் வீட்டிற்கு சென்று மருத்துவம் பார்க்கிறார். அந்த பெண்ணிற்கு சுபபிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான். சென்னை, கடலூர் எங்கும் பெருமழை பெய்த ஊரே வெள்ளத்தில் மூழ்கி இருந்த போது,  அரசு அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்த போது, மக்கள்தான் களத்தில் இறங்கினர். அந்த களப்பணியாளர்களை ஒருங்கிணைத்தது சமூக ஊடகம்தான்.

சேலம் வினுப்பிரியா:

மீண்டும் கால இயந்திரத்தில் பயணித்து நிகழ்காலத்திற்கு வாருங்கள். இப்போது சேலத்தில் வினுப்பிரியாவின் படம் ஆபாசமாக மார்ஃபிங் செய்யப்பட்டு, சமூக  ஊடகத்தில் வெளியிடப்படுகிறது. வினுப்பிரியா குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் அளிக்கிறார். அது, தன் வழக்கமான முகத்தையே அவர்களிடமும் காட்டுகிறது. காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டப் பின்னரும், இன்னொரு படம் வெளியாகிறது. வினுப்பிரியா தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறாள்.

இந்த மூன்று சம்பவங்களும், வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள். ஆனால், இந்த மூன்று சம்பவங்களையும் இணைக்கும் ஒரு சொல் சமூக ஊடகம்.

இறுக்கமான தேசங்கள் என்று அறியப்படும் அரேபிய தேசங்களின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க பயன்பட்ட  சமூக ஊடகம்தான், சென்னை மழையில் களப்பணியாளர்களை ஒருங்கிணைக்க உதவிய சமூக ஊடகம்தான், சேலத்தில் வினுப்பிரியாவையும் கொல்ல உதவி இருக்கிறது.

நவீன யுகத்தில், சமூக ஊடகம் ஒரு வலிமையான கருவிதான்.  முகநூலின் ஷேர் பட்டனும், ட்விட்டரில்   ரீடிவீட் பட்டனும் பெருமாற்றங்களை உண்டாக்கவல்லதுதான், மறுப்பதற்கில்லை. ஆனால், அதை மனிதர்கள் எதற்கு, எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் அதன் பயனும் இருக்கிறது.

நாம் அதை எதற்கு பயன்படுத்தப் போகிறோம்… எப்படி பயன்படுத்தப் போகிறோம்…?

ஆக்கவா… அழிக்கவா…? அதை முகநூல் முடிவு செய்யாது, நாம் தாம் செய்ய வேண்டும்.

இன்று உலக சமூக ஊடக தினம்

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *