Breaking
Fri. Apr 26th, 2024

பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை மௌனிக்க செய்யும் நடவடிக்கை ஒன்றை குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு என்பன ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர் பிரசன்ன அல்விஸ் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நிஹால் தல்துவ ஆகிய இரண்டு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.


கடந்த காலத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நாமல் குமார என்ற நபர் தொடர்பான விவகாரத்தின் போது, ஜனாதிபதியை கொலை செய்ய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி நாலக டி சில்வா சதித்திட்டம் தீட்டியதாக இவர்களே குற்றம் சுமத்தியிருந்தனர்.


இந்த நிலையில் சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இலக்கம் 1 பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தரங்க ஜயசுந்தர மற்றும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தயானந்த ஆகியோர் தலைமையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.


இதன் முதல் கட்ட நடவடிக்கையாக பொலிஸ் பரிசோதகர் தயானந்த, அரசாங்கத்திற்கு எதிரான பிரபல சமூக வலைத்தள செயற்பாட்டாளரின் வீட்டுக்கு சென்று அவர் சம்பந்தமான தகவல்களை விசாரித்துள்ளார். இந்த சமூக வலைத்தள செயற்பட்டாளர் இதற்கு முன்னர் தனது உயிர் பாதுகாப்பு கருதி வெளிநாட்டுக்கு சென்றிருந்தவர்.


அவரது வீட்டில் தற்போது வசித்து வரும் நபர்களை அச்சுறுத்தியுள்ள பொலிஸார், வீட்டின் உரிமை பத்திரங்களையும் பரிசோதித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை எந்த தரப்பின் ஊடாகவாவது அச்சுறுத்தி அவர்களை மௌனிக்க செய்வது இந்த நடவடிக்கையின் நோக்கம் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *