Breaking
Sun. May 19th, 2024

(எம்.எஸ்.எம். ஸாகிர்)

முஸ்லிம் சமூகம் வெளியிடும் பத்திரிகைகளுக்கு சமூகம் அளிக்கும் ஆதரவு போதுமானதாக இல்லை. இந்த நிலை மாற வேண்டும். சமூத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகங்களுக்கு உதவுவது சமூகத்தின் சகல மட்டத்தினர்களினதும் பாரிய பொறுப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற ஒரு நாள் ஊடக கருத்தரங்கும் மற்றும் அரனாநாயக திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி மிஸ்னா மிர்ஷாத்தினால் எழுதப்பட்ட ‘விழித்திடு சமூகமே’ என்ற கவிதை நூல் மற்றும் ‘எட்டாச் சிகரம்’ எனும் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் திப்பிடிய வில்பொலை அஷ்ரப் மண்டபத்தில் கடந்த (25) சனிக்கிழமை திப்பிட்டிய முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் எம். ஐ. எம்.எம். ஸாபிரீன் மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளரும் அல் – மனார் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவருமான பர்ஹான் உமர் ஆகியோரின் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

21ஆம் நூற்றாண்டை ஆளுகின்ற இந்த  ஊடகத்துறை பற்றி எம் சமூகம் அக்கறை இல்லாது இருக்கின்றது.  இந்த சமூகத்திற்காக வெளிவருகின்ற பத்திரிகைகளைக் கூட, எம் சமூகத்தில் எத்தனை பேர் வாசிக்கின்றார்கள் என்ற கேள்வி எழுப்ப வேண்டிய கால கட்டத்தில்  நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் மக்களின் குரலாக நவமணிப்பத்திரிகையை வெளியிடுகின்றோம். ஆனால் துரதிஷ்டம் நாட்டின் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் அங்குள்ள மக்கள் பத்திரிகை வாசிப்பது மிக மிகக்குறைவு.

இன்று காலையில் நடந்த ஊடகக் கருத்தரங்கில் 3 பாடசாலைகளின் மாணவ மாணவிகள் 120 பேர் அளவில் கலந்து கொண்டார்கள். அதில் 16 பேர் மட்டுமே பத்திரிகை வாசிப்பதாகக் கூறினார்கள்.

இன்றைய கால கட்டத்தில் திறமையான அறிவோடு இருந்தால் மட்டுமே எமது பிள்ளைகளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும். நாங்கள் எதிர்பார்க்கின்ற தொழில்களுக்கெல்லாம் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.  பல்கலைக்கழக அனுமதியாக இருக்கலாம், சட்டக்கல்லூரி அனுமதியாக இருக்கலாம், மருத்துவக்கல்லூரி அனுமதியாக இருக்கலாம் எந்த விடயத்தையும் வெற்றி கொள்வதற்கு போட்டி போட வேண்டும். அதற்கு பொது அறிவும் உலக அறிவும் மிக முக்கியம்.

ஆகவே பெற்றோர்களிடம் நாம் வினயமாகக் கேட்பது பிள்ளைகளின் வாசிப்பைத் தூண்டுங்கள். வாசிப்பதற்கான வழியை உங்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுங்கள். பத்திரிகைத் தொழில் என்பது இன்று உலகளவில் மிகவும் பலமான தொழில்.

என்னுடைய அனுபவத்தின் மூலம் ஊடகத்தின் மூலமாக உலகநாடுகளில் உள்ள பிரதமர்கள், ஜனாதிபதிகள் உட்பட ஏனைய உயரதிகளையெல்லாம் சந்திக்க கூடிய வாய்ப்பை எனக்கு இவ்வூடகம் பெற்றுத் தந்திருக்கின்றது. உலகநாடுகளைப் பற்றி சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினத் தந்திருக்கின்றது. இந்த வாய்ப்பை நான் மட்டுமல்ல, என்னோடு வந்திருக்கின்ற ஏனைய ஊடகவியலாளர்களுள் பெற்றிருக்கிறார்கள்.  பொதுவாக ஊடகவியலாளர் என்று சொல்லுகின்ற அனைவரும்  எந்த வித செலவும் இல்லாமல் அந்த வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்கள். இதற்கான சந்தர்ப்பத்தினை ஊடகம் வழங்கியிருக்கின்றது. எம் சமூகத்தில் இந்தத் துறை மறக்கடிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஊடகத்துறையியலாளர்களாக உருவாக வழிசமைத்துக் கொடுக்க வேண்டும்.  சமூகம் இன்று இக்கட்டான சூழலில் இருக்கின்றது. இந்த சமூகத்துடைய குரல் உலகுக்கு ஒலிக்க வேண்டும். எம் சமூகத்துடைய பத்திரிகை உலகின் எல்லா நாடுகளுக்கும் மொழி பெயர்க்கப்படுகின்றது.

உங்களுடைய மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேர் சமூகத்திற்காக வெளிவருகின்ற பத்திரிகையை வாசிக்கின்றீர்கள்.

நீங்கள் பத்திரிகையை வாங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் சமூகத்தின் குரல் உலகளவில் ஒலிக்கின்றது. சமூகத்தின் தேவை உலகுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றது.  நாட்டின்  தூதுவராலயங்களில் இது மொழி பெயர்க்கப்பட்டு, உலகின் பெரிய அரசின் தலைவர்களுடைய மேசைக்கு இந்த சமூகத்தின் தேவை செல்கின்றது என்றால் அவற்றை வளர்ப்பது ஒவ்வொரினதும் கடமையாகும்.

இப்பாடசாலையின் மாணவி மிஸ்னா மிர்ஷாத் எழுதிய
‘விழித்திடு சமூகமே’என்ற கவிதை நூல் சமூகத்தின் இன்றை நிலையை படம் பிடித்துக் காட்டுகின்றது. இம் மாணவியின் முயற்சி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கின்றது. அவர் மேலும் சிறந்து பல புதிய படைப்புக்களை உலுரவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம், கௌரவ அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சர் மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரநாயக்க தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி லலித் திஸாநாயக்க மற்றும் முதன்மை அதிதிகள், விசேட அதிதிகள், ஸ்ரீலங்கா மீடியா போர உறுப்பினர்கள் உட்பட உயரதிகாரிகள், பெற்றோர்கள் மாணவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கு சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்டதோடு,  கலந்து கொண்ட  மாணவர்கள் சகலருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மிஸ்னா மிர்ஸாத் எழுதிய ‘விழித்திடு சமூகமே’ நூலின் விமர்சனத்தை ரத்தினச் சுருக்கமாக பல்கலைக்கழக  முன்னாள்  உப பீடாதிபதியும் நவமணி பத்திரிகையின் ஆசிரிய பீட சிரேஷ்ட உறுப்பினருமான ‘காவ்யாபிமானி’கலைவாதி கலீல் நிகழ்த்தினார்.

நிகழ்வினை முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அஹ்மத் முன்னவ்வர் நெறிப்படுத்தினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *