Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கை அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்க குடும்பத்தின் சகாப்தம் என்பது கற்களில் எழுதப்படப் வேண்டிய காலங்கள். இரண்டு இரும்புப் பெண்மணிகளைக் கொண்ட நாடு என்றும் சர்வதேச நாடுகள் புகழ்ந்தன.

பண்டார நாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரா நாயக்கா, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க என்று மூப்பெரும் தலைவர்களால் ஆளப்பட்ட தேசம் இது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தோற்றுவித்தது பண்டார நாயக்கவாக இருக்கலாம். ஆனால் அதனை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கும் சந்திரிகா அம்மையாருக்கும் இருக்கும் பங்கு அளப்பரியது.

மிகப்பெரும் கட்சியாக மிகப் பெரும் தலைமையாக இருந்த அக்கட்சி இன்று சிதைந்து சின்னாபின்னமாகியிருக்கிறது. எப்படி தன் தந்தையார் உருவாக்கி தாயார் வளர்த்த கட்சியை சந்திரிகா உச்சத்திற்கு கொண்டுவந்தாரோ அதே வேகத்தில் அக்கட்சியின் வீழ்ச்சிக்கும் பிளவுக்கும் வித்திட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அன்றைய ரணில் தலைமையிலான அரசாங்கம் சமாதான ஒப்பந்தம் செய்து இடைக்கால அமைதி நிலவிய போது, ரணில் அரசாங்கத்தை கலைத்தார் சந்திரிகா. கலைத்தவர் அத்தோடு சும்மாய் நின்றதாக இல்லை. இன்றைய எதிர்கட்சித் தலைவராக இருக்கும் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி அழகுபார்த்தார்.

எவரை அழகு பார்த்தாரோ அவருக்குப் பயந்து லண்டன் ஓடுமளவிற்கு சந்திரிகாவின் நிலை தலைகீழாக மாறியது. கடந்த 2004ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் அன்று தன் ஆட்சி முடிவதற்குள் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். அதேவேளை மகிந்த ராஜபக்ச பிரதமராக்கப்பட்டார்.

அடுத்தடுத்த காலகட்டத்தில் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பொறுப்பும் அவரின் கைகளுக்குள் தானாகவே வந்துவிழுந்தது. மகிந்தவின் ஆட்சியில் தமிழர்களுக்கு மட்டும் பாதகமான சூழ்நிலை தோற்றிவிக்கப்பட்டது என்றால் சந்திரிகா அம்மையாருக்கும் படுபாதகமாகவே இருந்தது.

மகிந்தவின் ஆட்சிக்குப் பயந்து வெளிநாடு ஓடியவர் மீண்டும் மகிந்தவை வீழ்த்த நாடு திரும்பியிருந்தார். அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த சந்திரிகா, புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியை 2004ம் ஆண்டு கலைத்தது தான் செய்த முதல் பெருங்குற்றம் என்று ஒப்புக் கொண்டிருந்தார்.

மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்ற, ரணில் தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை தேர்வு செய்தார். தான் செய்த தவறையும், தன்னுடைய தந்தையின் உழைப்பினால் உருவாகிய கட்சியையும் மீட்க பெரும் சந்தர்ப்பம் கிடைத்ததாக எண்ணிய சந்திரிகாவிற்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

மகிந்தவிடம் இருந்து பிரித்தெடுத்த மைத்திரியை ஜனாதிபதியாக்கி அவரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்கி அழகு பார்த்தார் சந்திரிகா. ஆனால் நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் பல்டியத்தார் சிறிசேனா. எவரை தூக்கி வீசிவிட்டு சந்திரிகா ரணில் தரப்பிடம் சென்றாரோ அவரிடமே மீண்டும் தஞ்சமடைந்தார் மைத்திரி. மகிந்தவை பிரதமராக்கினார். இலங்கையில் ஒரு பூகம்பத்தையே சிறிசேனா ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் மகிந்த ராஜபக்ச தரப்பு சுதாகரித்துக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்னும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தது. இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்று இருபெரும் கட்சிகள் கோலோச்சிய காலத்தில் மூன்றாவது கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முளைவிட்டது.

முளைவிட்ட சிறிது காலத்திலேயே உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அப்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவு ஆரம்பித்தது என்று சொல்வதே சாலப் பொருத்தமானதாக இருக்கும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவுகளால் மீண்டும் சந்திரிகா அம்மையார் லண்டன் ஓட நேர்ந்தது என்பது பெரும் சோகமானது தான். சந்திரிகாவின் அரசியல் காய் நகர்த்தல்கள் பெரும் சரிவை நோக்கி நகர்ந்தது என்பது வரலாற்று உண்மை.

இருப்பினும் தன்னுடைய கட்சியை மீட்கும் பணியில் தொடர்ந்தும் ஈடுபடுவதில் அவர் பின் நிற்கவில்லை. ஆனால் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். அதுமாத்திரமன்றி மகிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

இப்போது இருப்பது ஸ்ரீலங்கா சுதந்திர பெரமுன கூட்டமைப்பு என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. மகிந்த தரப்புடன் மைத்திரி தரப்பு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோத்தபாயவிற்கான ஆதரவு என்ற நிலையில் வந்து நிற்கிறது கட்சியின் நிலைப்பாடு.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *