முல்லைத்தீவு – உப்புமாவெளி பகுதியில் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோத மணல் குவிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய அருட்தந்தையை நேற்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அனுமதியற்ற மணல் அகழ்வு குவிப்பு தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியனினால் ஊடகங்களில் வெளிக் கொணரப்பட்டுள்ளதை தொடர்ந்து உப்புமாவெளி இடத்திற்கு கடந்த 15.06.2021 அன்று நேரில் சென்ற முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவைகள் பணியகம், சுற்றச்சூழல் திணைக்களம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் என அனைத்து திணைக்கள அதிகாரிகளும் குறித்த மணல் அகழ்வு நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள விடயம் எந்த அனுமதிகளுமின்றி சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தாலும் கடந்த ஒரு மாதகாலமாக எவரையும் கைது செய்யாத நிலையில் உப்புமாவெளி பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் முல்லைத்தீவில் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணிக்கு பொறுப்பாக இருந்து உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட அருட்தந்தை நேற்று கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகநபரை நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளதுடன், இந்த வழக்கினை திகதியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.