Breaking
Tue. May 7th, 2024

வவுனியா – பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனா பரிசோதனை தடுப்பு முகாமுக்கு விமான பயணிகள் கொண்டுவரப்பட்டதனை கண்டித்து நெளுக்குளத்தில் கண்டன போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.


வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெளுக்குளம் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


அகற்று அகற்று கொரோனா முகாமை அகற்று, கொரோனா வைரஸ் வவுனியாவிற்கு வேண்டாம், தமிழர் பிரதேசத்தில் கொரோனா முகாமை எதற்காக அமைத்தாய் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்,
வவுனியா பம்பைமடு பிரதேசத்திற்கு இனங்காணப்படாத கொரோனோ என சந்தேகிக்கும் 265 பேர் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.


எங்களுடைய மக்கள் பீதியிலே காணப்படுகின்ற நிலையில் இலங்கையிலேயே பல்வேறு மாவட்டங்கள் இருக்கின்ற போது வட கிழக்கிலே இவ்வாறான நோயாளர்களை கொண்டு வருவது ஏற்று கொள்ள முடியாது.


சஹரான் குண்டு தாக்குதலின் போதும் வெளிநாட்டவர்களை வவுனியா பூந்தோட்டத்திலே குடியேற்றப்பட்டிருந்தார்கள்.
வடகிழக்கிலே இவ்வாறானவர்களை குடியமர்த்துவதென்பதை இன அழிப்பாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கையில் பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது அவர்களை அங்கே வைத்து அவர்களின் நோய் தொற்றை ஆராய முடியாதா? வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் குடியமர்த்துவதென்பது கண்டிக்கத்தக்க விடயம்.
பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட பம்பைமடுவில் குப்பை கொட்டும் இடம் காணப்படுகிறது.


கொரோனா வைரஸ் நோயாளிகளின் குப்பை அங்கே கொட்டப்படும் போது எங்களுடைய தொழிலாளிகள் அங்கே சென்று வரும்போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே உடனடியாக இந்த முகாமை அகற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாக காணப்படுகின்றது என மேலும் தெரிவித்தார்.


இதேவேளை போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் அதிகளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *