Breaking
Mon. May 20th, 2024

(சுஐப் எம்.காசிம்)     

கூட்டுறவுத்துறையை நான் பொறுப்பேற்ற பின்னர் அந்தத் துறை வளர்ச்சிப்  பாதையில் சென்றுகொண்டிருக்கின்றது. ஒரு சதமேனும் வீண்விரயமாக செலவழிக்கவுமில்லை. செலவழிப்பதற்கு அனுமதி வழங்கவுமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு, தாமரைத் தடாகக் கலையரங்கில் 94 வது சர்வதேச கூட்டுறவுதின விழா இன்று (02/07/2016) நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதிதிகளாக பிரதி அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன், கூட்டுறவு உயரதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றிருந்த இந்த விழாவில் அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது…

இலங்கையின் முதலாவது கூட்டுறவு வாரம் கடந்த 23 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நாம் இன்று சர்வதேச கூட்டுறவுத் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டுறவு முறைமை 1761 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸ்கொட்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டது, என்று பதிவுகளில் இருந்து தெரிகின்றது. நவீன கூட்டுறவு இயக்கம் 1844 இல் இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அது படிப்படியாக வளர்ச்சி பெற்று பரிணமித்துள்ளது. இலங்கையின் கூட்டுறவு முறைமைகள் அதன் பின்னர் 1904 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பெற்றது.

மத்திய மாகாணத்தில் கிராமிய கடன் அமைப்புகளின் உருவாக்கத்துடனேயே நாம் இந்த கூட்டுறவுத்துறையில் பிரவேசித்திருக்கிறோம். தற்போது சுமார் 14,500 கூட்டுறவு நிலையங்கள் எமது நாட்டில் பல்வேறு உற்பத்திகள், சேவைகள், சிறு முயற்சிகள், பெண்கள் சார்ந்த அபிவிருத்தி, கிராமியக் கடன்கள், காப்புறுதி, விவசாயத்துறை ஆகிய செயற்பாடுகளுக்கு உதவி வருகின்றன.

கிராமிய நுகர்வோர், கிராமியக் கடன் மற்றும் நிதி, விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றின் முக்கிய காரணியாக இந்தத்துறை விளங்குகின்றது. குறிப்பாக நிலைபேறான அபிவிருத்தி இலக்கை அடைவதில் இந்தத்துறை பாரிய பங்களிப்பை நல்கி வருகின்றது. நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி நமது நாட்டை நகர்துவதில் சர்வதேச கூட்டுறவு அமைப்புக்களின் உதவிகள் குறித்து இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.

சர்வதேசத்தில் மட்டுமன்றி இலங்கையிலும் கூட்டுறவுத்துறை எமது மக்களின் அன்றாட வாழ்வில் காத்திரமான பணியை நல்கி வருகின்றது. சுமார் எட்டு மில்லியன் இலங்கையர்கள் இந்த கூட்டுறவுத்துறையில் தம்மை அங்கத்தவர்களாக ஈடுபடுத்தியுள்ளனர். இதுவே நாட்டின் அதிகூடிய எண்ணிக்கை கொண்ட அங்கத்தவர்களின் சந்தைப்படுத்தல் முறைமையாக உள்ளது. இதில் 56 சதவீதத்தினர் பெண்கள் இருக்கின்றனர்.

இலங்கையில் 14,454 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. 46,000 பேர் இங்கே தொழில் புரிகின்றனர். 1.8 பில்லியன் டொலர் பெறுமதியான கூட்டுறவுத் துறை சொத்துக்கள் காணப்படுகின்றன.

இலங்கையின் பொருளாதாரத்தில் இது மூன்றாவது இடத்தை வகிப்பதால் பலமான, சில்லறைச் சந்தையில் பிரபலமான அமைப்பாக இது விளங்குகின்றது.

கைத்தொழில் வர்த்தக அமைச்சு புதிய கருத்திட்டங்களை உருவாக்கி இதனை மேலும் வலுவூட்டும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது. பயிற்சி நெறிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழி மூலமாக கூட்டுறவு பயிற்சி பாடசாலை, முதலாவது கூட்டுறவு பல்கலைக்கழகம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து, நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

நமது நாட்டின் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் நேர்மையாக செயற்பட்டால் மாத்திரமே இந்தத்துறையில் நாம் முன்னேற்றம் காண முடியும். தனியார் துறையினருக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் கூட்டுறவுத்துறை சார்ந்தவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.1434a83d-d175-44f3-afa4-1af4f2e9b937

கூட்டுறவுத் துறையில் ஊழல்கள் புரிவோர், நேர்மையற்ற வேலைகளைச் செய்வோர் தண்டிக்கப்படவேண்டிய வகையில் சில நடைமுறைகள் கொண்டுவரப்பட வேண்டும். எனவே கூட்டுறவு சார்ந்த சட்டங்களை திருத்துவதன் மூலமும் புதிய சட்டங்களை கொண்டுவருவதன் மூலமே இது சாத்தியமாகும் என நான் நம்புகின்றேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.e9f7d2c3-21d2-44bd-ad4a-90e20e923370

0f9004d6-0f2c-46a9-9bc7-21e53b1d87e2

925bd337-6f68-4477-9b9c-ac28f7c1db23

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *