(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான செயலமர்வு 21-05-2015 இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பிறிஜ் வியூ ஹோட்டலில் இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ஹ.இந்துமதி தலைமையில் இடம்பெற்ற மேற்படி செயலமர்வில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ் அதிரன் உட்பட அதன் உறுப்பினர்கள் ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் அச்சு,இலத்திரனியல்,இணைய ஆண்,பெண் ஊடகவியலாளர்கள் , விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பான விரிவான விரிவுரையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி.அம்பிகா சட்குனநாதன் நிகழ்த்தினார்.
இங்கு நிலைமாறுகால நீதி மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடர்பாகவும் ஏனைய முக்கிய சட்ட விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதுடன் அதற்கான பதில்களும் வழங்கப்பட்டது.
குறித்த கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடவியலாளர்களின் ஆளுமைகளை விருத்தி செய்யும் நோக்கிலும் சமூக நலன் சார்ந்த தெளிவான விடயங்களை செய்திகளாக,கட்டுரைகளாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கிலும் ஊடகவியலாளர்களுக்கு ஊடகத்துறை,மற்றும் சட்டத்துறை தொடர்பாக பல்வேறு செயலமர்வுகளை நடாத்துவதின் ஓர் அங்கமாகவே இச் செயலமர்வு நடைபெற்றதாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவ் அதிரன் தெரிவித்தார்.