24 மீனவ பயனாளிகள் மீன்பிடி வள்ளங்களையும் உபகரணங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பூவரசந்தீவு, சமாஜன்தீவு, காக்காமுனை ஆகிய கிராமங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனம் 24 மீனவர்களுக்கு மீன்பிடி வள்ளங்கள் மற்றும் உபகரணங்களை இன்று ஆகஸ்ட் 18ம் திகதி கையளித்தது. காலை 9.30 மணிக்கு காக்காமுனை களப்பு பொது மண்டபத்தில் Covid சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற எளிமையான நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் M.A.M.அனஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்தது கொண்டு வாழ்வாதார உதவிப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
முஸ்லிம் எய்ட் ஊழியர்கள், கிராம சேவகர்கள், பொருளாத அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றுகையில். ‘இத்திட்டத்தை நீங்கள் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் .
இதன் மூலம் உங்களை போன்ற தேவைகளை உடைய பல குடும்பங்களுக்கு மேலும் உதவிகள் வழங்க முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் நிதியை பெற முடியும். மேலும், முஸ்லிம் எயிட் நிறுவனமும் பிரதேச செயலகமும் இத்திட்டத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் . அவ்வப்போது நேரடியாக நானும் உங்களை சந்திப்பேன்”. என்றார்
மீன்பிடி வள்ளம், வலை என்பன இரண்டு மீனவர்கள் அடங்கிய குழுவிற்கு ஒன்று என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
இரு மீனவர்கள் கூட்டாக சென்று மீன் பிடியில் ஈடுபட்டு பயன் பெறவுள்ளனர். உரிய மீனவ சங்கங்கள் இவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும். மேலும் உள்ளூர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதும் இத் திட்டத்தின் நோக்கமாகும்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொவிட்-19 வைரஸ் தாக்கம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து வருகின்ற போதிலும் முஸ்லிம் எய்ட் நிறுவனம் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.