Breaking
Sat. Apr 20th, 2024

மொஹமட் பாதுஷா

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் அக்கட்சியின் அதிகாரமிழந்த செயலாளர் ஹசன் அலி மற்றும் புறமொதுக்கப்பட்ட தவிசாளர் பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையில் பல மாதங்களாக நிலவிவந்த பனிப்போர், இப்போது தணிந்திருக்கின்றது. அரசியல் சார்ந்த ஊடல் – ஓர் உயர்பீடக் கூட்டத்தில் கூடலாகி நிற்கின்றது.

இரு தரப்பினர் மனதிலும் மட்டுமன்றி, மக்கள் மனதிலும், ‘இதை யாராவது தீர்த்து வைக்க மாட்டார்களா?’ என்று அங்கலாய்க்கப்பட்ட விவகாரம், இப்போது, பேச்சு மேசைக்கு வந்திருக்கின்றது. எம்.ரி. ஹசன் அலி தரப்புக்கு நியாயம் வழங்குவதற்காக, ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. ஹக்கீமின் போக்குகளுக்குத் தடைபோட ஹசன் அலி எப்போது நினைத்தாரோ, அவரைக் கழற்றி விடுவதற்கான வலையை தலைவர் அப்போதே பின்ன ஆரம்பித்துவிட்டார்.

பஷீரைப் பொறுத்தமட்டில், தலைவரையும் விஞ்சியவராகச் சென்று, எப்போது அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டாரோ, அப்போதே அவரைத் தட்டிப்பணிக்க ஹக்கீம் முடிவெடுத்து விட்டார். இவ்வாறிருக்கையில், கடந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்விருவருக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை. நிந்தவூரில் பைசல் காசிமையும் ஏறாவூரில் அலிசாஹிர் மௌலானாவையும் வேட்பாளராக நிறுத்திய ஹக்கீம், பின்னர், ஓர் ஊருக்கு இரண்டு எம்.பி கொடுப்பது நியாயமில்லை என்ற தத்துவத்தை உருவாக்கி விட்டார். ஆனால், அவரது குடும்பத்துக்குள் இரண்டு எம்.பி பதவிகள் இருந்துகொண்டே இருந்தது. தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதியளித்த மு.கா தலைவர், தம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார் என்றே பஷீரும் ஹசன் அலியும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இதனாலும் இவர்கள் தலைமையுடன் முரண்பட்டிருந்தனர். செயலாளருக்குரிய பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள வழங்குவதாக தலைமை தமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியமையால், பாலமுனை தேசிய மாநாட்டுக்கு ஹசன் அலி வரவில்லை. மனதை திடப்படுத்திக் கொண்டு இம்மாநாட்டுக்கு பஷீர் சேகுதாவூத் வந்திருந்தார். ஆயினும், இந்த மாநாட்டில் வைத்து, தலைவர் ஹக்கீமினால் போராளிகள் முன்னிலையில் இவ்விருவரும் கடுமையாக கேவலப்படுத்தப்பட்டதை யாரும் மறக்கமாட்டார்கள். அஷ்ரபின் மரணத்துக்குப் பின்னர், யாரைத் தலைவராக நியமிப்பதென தீர்மானிக்கும் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் தலைவராக பஷீர் வந்து விடுவாரோ என்று, ஹக்கீம் பயந்தார். தலைமைப் பதவி மீது குறிவைத்திருந்த அவர், ஹசன் அலியின் காதுக்குள் ‘பஷீர் சேகுதாவூதை செயலாளராக முன்மொழியுமாறு’ கூறியதாகவும் அதை, ஹசன் அலி செய்ததாகவும் ஓர் இரகசியம் உள்ளது. இப்படியாக, தன்னை தலைவராக்குவதற்கு முன்னின்ற ஒருவரை கட்சியில் இருந்து ஓரங்கட்டுவதற்கு ஹக்கீம் எடுத்த முயற்சிகள், அவரது மனச்சாட்சிக்கே விரோதமானதாகும்.

அவ்வாறே, பஷீர் சேகுதாவூத் பல சர்ச்சைகளில் இருந்து ஹக்கீமை காப்பாற்றியிருக்கின்றார். ‘தனிப்பட்ட பலவீன’ செயல்களால் தலைகுனிந்து நின்ற போது, சரியோ பிழையோ, தலைமை என்பதற்காக துணைநின்றவர் பஷீர். தலைமை பற்றி வெளியில் சொல்லப்படாத இரகசியங்கள் இன்னும் அவரிடம் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒருவரையும் கழற்றிவிட நினைத்தமை அற்பத்தனமான அரசியல் என்பதை நன்றாக அறிந்தவர் அப்துல் ரவூப் ஹக்கீமே. பாலமுனை மாநாட்டில் தலைவர் ஆற்றிய உரையை கேட்ட சில விசிறிகள், தவிசாளருக்கும் செயலாளருக்கும் தலைவர் இன்றிரவே ஆப்பு அடிக்கப் போகின்றார் என்று நினைத்திருக்கக் கூடும். ஆனால், அது அப்படி நடக்கக் கூடிய காரியமல்ல என்பதை முக்கிய உறுப்பினர்கள் அறிந்திருந்தனர்.

மு.காவில், பஷீரும் ஹசன் அலியும் பத்தோடு பதினோராவது உறுப்பினர்களல்ல. சீசனுக்கு வந்து அரசியல் செய்து விட்டுப் போனவர்கள் அல்ல. எக்காலத்திலும் மு.காவுடன் இணைந்திருந்தவர்கள். பெரும் சுழியில் கட்சி அகப்பட்டுக் கொண்ட காலத்திலும் அதனோடு இருந்தவர்கள். எனவே, இவ்விருவரையும் கட்சிக்கு வெளியில் போட்டுவிட்டு, முன்னர் மு.காவுக்கு எதிராக அரசியல் செய்துவிட்டு அண்மைக்காலத்தில் கட்சிக்குள் வந்தவர்கள், பணம் உழைக்க கட்சிக்குள் வந்தவர்கள், மக்களின் மரியாதையை பெறாதவர்கள், அரசியல் முகவரி இல்லாதவர்களை வைத்துக் கொண்டு கட்சியை நடாத்திச் செல்ல முடியாது என்பது, ரவூப் ஹக்கீமின் உள்மனதுக்குத் தெரியாமல் போயிருக்க வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு கோபத்தில், தலைமை இவ்விருவரையும் பழிவாங்கினால் கட்சி இரண்டாக உடைவெடுக்கக் கூடிய அபாயம் இன்னும் இருக்கின்றது. இவர்கள் இருவரும், முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

தனித்து நின்று நிலைமைகளை எதிர்கொள்ளும் தைரியமும் பக்குவமும் பெற்றவர்கள். ஒரு கட்டத்தில்  இவர்களது தரப்பு பலம் பெறுமாயின், இன்று தலைவருக்குச் சாமரம் வீசுகின்ற கிழக்கைச் சேர்ந்த அநேகர் அந்தப் பக்கம் தாவி விடுவார்கள் என்பதே யதார்த்தமாக இருக்கும். அதற்கான அறிகுறிகளையும் கடந்த சில நாட்களுக்குள் கண்டு கொள்ள முடிந்தது. செயலாளர் ஹசன் அலியும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் ஒரே இலக்கை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். கணிசமான உயர்பீட உறுப்பினர்கள் மெல்ல மெல்ல ஹக்கீமின் எதிர்தரப்புக்கு ஆதரவளிக்கத் தொடங்கி விட்டனர். எமக்கு கிடைத்த தகவலின் படி, கடந்த வார இறுதியில் ஹசன் அலி மற்றும் பஷீரின் பக்கம் இருந்த மொத்த உயர்பீட உறுப்பினர்கள் கூட்டுத்தொகை, தலைவர் பக்கமுள்ளவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டியதாக இருந்ததாக தெரியவருகின்றது. பல நாட்களுக்கு முன்னரே, ஹசன் அலி தரப்புடன் பேசுவதற்கான விருப்பத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டிருந்தார்.

ஹசன் அலியும் பச்சை சமிக்கை காட்டியிருந்தார். ஆனால் பூனைக்கு யாரும் மணிகட்டவில்லை. இவ்வாறானதொரு சூழலில், கட்சி பற்றியும் அதன் யாப்பு பற்றியும் நன்கறிந்து வைத்துள்ள பஷீர் மற்றும் ஹசன் அலி பக்கமாக ஆதரவு பெருகுவது, எத்தகைய எதிர்வினையையும் கொண்டு வரலாம் என்பது, சாணக்கிய தலைவருக்கு விளங்கியிருக்கும். அந்த அடிப்படையிலேயே அவர்களுடனான பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்பட்டிருக்கின்றது என்றும் அனுமானிக்கலாம். முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் கடைசியாக இடம்பெற்ற கடந்த திங்களன்று நண்பகலுக்கு முன்னர், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட்டுடன் ஹசன் அலியைச் சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போதும், மிகச் சூட்சமமான முறையில், ஹசன் அலி அதனைத் தவிர்த்துக் கொண்டார். நண்பகலுக்குப் பின்னர், அதிருப்தியாளர்களான உயர்பீட உறுப்பினர்களுடன் உரையாடியே பிறகே செயலாளரும் தவிசாளரும் உயர்பீட கூட்டத்தில், தலைவருக்கு பக்கத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தனர் என்பது உள்வீட்டு தகவலாகும்.

இக் கூட்டத்தில் கடுமையான கலந்துரையாடலுக்கு பின்னர், ஹசன் அலி மற்றுமுள்ளோர் விடயம் தொடர்பில் நியாயம் வழங்குவதற்காக ஒரு குழுவை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவரும் தேசியப்பட்டியல் எம்.பி கேட்டு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஆரம்பத்தில் கதைகள் வெளியாகியிருந்தன. ரவூப் ஹக்கீம் திட்டமிட்டு ஹசன் அலியை ஓரம் கட்டுகின்றார் என்பதையும் பஷீரை மட்டம் தட்டுகின்றார் என்பதையும் மறைப்பதற்காக, ஹக்கீம் விசுவாசிகளால் இவ்வாறான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஹசன் அலியே அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

இவர்கள் இருவரும் ஆரம்பத்திலேயே ‘தேசியப்பட்டியல் எம்.பி தேவையில்லை’ என்று அறிக்கைவிட தவறியமை அவர்களுக்கு சாதமாகிப் போனது, இருப்பினும், ஒரு கட்டத்தில் பதவி தமது இலக்கு இல்லை என்பதை பஷீர் கூறிவிட்டார். ‘தேசியப் பட்டியல் எம்.பி விடயத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி தன்மீது களங்கம் ஏற்படுத்தப்படுவதாக’ குறிப்பிட்டிருந்த செயலாளர் ஹசன் அலி, ‘இனி அப்பதவி எனக்குத் தேவையில்லை’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அத்துடன், அப்பதவியை தார்மீக உரிமையுள்ள அட்டாளைச்சேனைக்கு வழங்குமாறு கூறினார். இதனால் ஹக்கீம் கடும் சிக்கலுக்கு உள்ளானார் என்பதே உண்மை. ஏனெனில், ஹசன் அலியைக் காரணம்காட்டி, இரண்டாவது தேசியப்பட்டியலை இன்னும் இழுத்தடிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்கட்டத்திலேயே, இப்போது குழு ஒன்று நியமிக்கப்படுகின்றது. இங்கு நினைவிற் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், ஹசன் அலியும் பஷீர் சேகுதாவூதும் கட்சித் தலைமையுடன் முரண்பட்டது தேசியப்பட்டியலுக்காக அல்ல. எம்.பி பதவிக்காகவே இவர்கள் முரண்படுகின்றார்கள் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வேளையில் எல்லாம் அவர்கள் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட கருத்து, ‘நாம் பதவிகளுக்காக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்பதாகும். கட்சிக்குள் ஜனநாயக நடைமுறைகள் இல்லாது போயுள்ளது. கூடிப்பேசி தீர்மானம் (மசூரா) எடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

தலைவர் தனது சொந்த விருப்பின் அடிப்படையில் செயற்படுகின்றார். மக்களுக்கான கட்சி இன்று ஒரு தனிநபர் வியாபாரமாகச் சென்று கொண்டிருக்கின்றது. எனவே இவற்றையெல்லாம் மாற்றியமைத்து உட்கட்சி ஜனநாயகத்தை வளர்ப்பதும் தலைவருக்கு கடிவாளம் இடுவதுமே எமது நோக்கம்’ என்று குறிப்பாக ஹசன் அலி கூறிவந்தார். பஷீரும் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தார். உட்கட்சி ஜனநாயகம் கடைசியாக மீறப்பட்ட சம்பவம் என்ற அடிப்படையிலேயே, செயலாளரின் அதிகாரங்களை பறித்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

இவ்வாறான, ஒரு பொதுவான நோக்குடன் தலைமையை எதிர்த்தமையாலேயே இவர்கள் பக்கம் நியாயமிருப்பதாக மக்கள் கருதினர். உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. எனவே, இங்கு செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோரின் அடிப்படை நோக்கம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உட்கட்சி ஜனநாயகம் உள்ள, அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிக்கப்படாத கட்சியாக மாற்றுவதும் தலைவரின் செயற்பாடுகளில் மாற்றங்களை கொண்டுவருவதும் என்று எடுத்துக் கொண்டால், அதைச் செய்யும் வரைக்கும் இந்தப் போராட்டம் ஓயக் கூடாது. மு.கா மீண்டும் இரண்டாக உடைவடைவதைத் தடுப்பது நம் எல்லோரதும் தலையாய கடமையாகும். அந்த அடிப்படையில் நோக்கினால், தலைவரும் செயலாளர் மற்றும் தவிசாளரும் விட்டுக் கொடுப்புடன் பேச முன்வந்தமை மிகவும் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை பதவிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. எதற்காக, தாம் தலைமையுடன் முரண்படுகின்றோம் என்றும் காரணம் சொன்னார்களோ, அதனைப் பெறுவதற்காக பாடுபட வேண்டும். இப்போது, மு.கா உயர்பீட ஒப்புதலோடு நியமிக்கப்படும் குழுவானது ஹசன் அலிக்கும் சிலவேளை பஷீருக்கும் தேசியப்பட்டியல் எம்.பிப்பதவிக்குச் சமமான ஒரு பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், செயலாளரின் அதிகாரங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஒருவேளை சிபாரிசு செய்யலாம். சுருங்கக் கூறின், இந்த குழு ஒரு பதவியை வழங்கி ஹசன் அலியைச் சமாளிப்பதற்கு எடுக்கப்படும் ஒரு முயற்சியா என்ற சந்தேகமும் எழாமலில்லை. அப்படி ஒரு காய்நகர்த்தல் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு ஒருக்காலும் ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் போன்றோர் இணக்கம் தெரிவிக்கக் கூடாது.

அவர்களே சொன்னபடி அது அவர்களது முதன்மை தெரிவும் இல்லை. கட்சித் தலைவரின் போக்குச் சரியில்லை, அவர் ஒரு முதலாளி போல நடக்கின்றார். இதனால் கட்சியால் மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. கட்சிக்குள் ஜனநாயகம் கிடையாது. முடிவுகள் திணிக்கப்படுகின்றன. கிழக்கு மக்களை தலைமை கிள்ளுக்கீரையாக பயன்படுத்துகின்றது என்றெல்லாம் கருத்துத் தெரிவித்து விட்டு, கடைசியில் ஏதாவதொரு பதவியைப் பெற்றுக் கொண்டு, தலைமையோடு தேனிலவு கொண்டாடுவார்கள் என்றால், ஹசன் அலி மீதும் பஷீர் மீதும் மக்கள் வைத்திருந்த நல்லபிப்பிராயம் பாழாகிவிடும். எல்லோரையும் போல இவர்களும் பதவிகளுக்கு ஆசைப்பட்டே இத்தனை நாடகங்களையும் ஆடியுள்ளார்கள் என்று மக்கள் கருதுவதை தடுக்க முடியாது.

செயலாளரையும் தவிசாளரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் இன்னுமொரு தடவை தலைவர் அது செய்து விட்டார், இது செய்து விட்டார் என்று மக்களிடத்தில் வர முடியாமலும் போகும். ரவூப் ஹக்கீமும் பஷீர் மற்றும் ஹசன் அலியும் மீள ஒன்றிணைய வேண்டும். ஆனால், அது வெறும் பதவிகளுக்கானதாக இருக்கக் கூடாது. இந்தக் கட்சியை ஒரு காதலியைப் போல நேசிக்கின்ற மக்களின் விடிவுக்கானதாக அமைய வேண்டும். –

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *