புனரமைக்கப்பட்ட காலி தர்மபால பூங்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால், நேற்று (17) பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.
காலி வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைச் சுவரின் முன் அமைந்துள்ள “தர்மபால பூங்கா”, உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்ததாகும். இருப்பினும், உரிய பராமரிப்பின்றி அழிவடையும் தருவாயில் காணப்பட்டது. பின்னர் அதை, அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் காலி மாநகர சபையின் கோரிக்கைப் பிரகாரம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் மூலோபாய நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
முழுமையான விளையாட்டு மைதானம், வெளிச்ச வசதிகளுடன் கூடிய வெளிப்புறக் கலையரங்கம் போன்றன உள்ளடங்கும் வகையில் இந்தப் பூங்கா நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பூங்காவைக் கண்காணித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், வெளியரங்கத்தில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
தர்மபால பூங்காவின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மீன்களின் கண்காட்சி மற்றும் தகவல் மத்திய நிலையம் ஆகியவற்றையும் ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார்.
அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ரமேஸ் பத்திரண, தென் மாகாண ஆளுநர் விலீ கமகே, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பி. டீ சில்வா, நாலக்க கொடஹேவா, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துகோரல, இசுறு தொடங்கொட, காலி நகரபிதா பிரியந்த ஜீ. சஹபந்து ஆகியோரும் பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
17.02.2022